வேண்டியதை நிறைவேற்றும் மகா மாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

சோழர் கால வரலாற்றைக் கொண்ட இக்கோயில், பயிர்த் தொழில் சிறக்கவும், செல்வ வளம் பெருகவும் கட்டப்பட்டது. குழந்தைப் பேறு, உடல் நலம், அம்மை நோய் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு இங்கு வழிபாடு செய்வது நன்மையளிக்கும். தினமும் திறந்திருக்கும் இக்கோயிலில், சித்திரை மாதத்தில் பத்து நாள் திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படும்.

வேண்டியதை நிறைவேற்றும் மகா மாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

Maha Mariamman

Updated On: 

04 Aug 2025 11:59 AM

தமிழ்நாட்டில் வழிபடப்படும் மிக முக்கியமான பெண் தெய்வங்களில் ஒருவர் மாரியம்மன். மாரியான மழையை கொடுக்கக் கூடியவளும், வெக்கை நோயிலிருந்து நம்மை காப்பவளுமாக மாறி அம்மனை அனைத்து இல்லங்களிலும் வழிபாடு செய்து வருகிறார்கள். இந்த மாரியம்மன் ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு பெயர்களில் திசைக்கு ஒன்றாக காட்சி கொடுத்து வருகிறாள். அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் பெரியகுருவடி என்ற ஊரில் அமைந்திருக்கும் மகா மாரியம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த ஊரின் பெயர் காரணத்திற்கு ஒரு சிறப்பு வரலாறு சொல்லப்படுகிறது. அதாவது இறைவன் தனது ஜடாமுடியிலிருந்து எடுத்து விட்டதால் இந்த ஊர் பெரிய குடை என்றாகி பின்னால் பெரிய குருவடி என மருவியதாக கூறப்படுகிறது.

இந்த மகா மாரியம்மன் கோயில் தினமும் காலை 7  மணி முதல் 11 மணி வரையும் மாலையில் நான்கு மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும். திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி தாலுகாவில் வடபதிமங்கலம் வழியில் இந்த மகாமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.

கோயில் உருவான வரலாறு

கி.பி. 1063 ஆம் ஆண்டு வீர ராஜேந்திர சோழன் மணிமுடி சூடி கி.பி.1070 ஆம் ஆண்டு வரை சோழப் பேரரசின் மன்னனாக பதவி வகித்தான். அவனின் ஆணை ஒன்று கல்வெட்டாக கரு ஊரில் உள்ள பசுபதிசுவரர் திருக்கோயில் என அழைக்கப்படும் திருவாநிலை மகாதேவர் கோயில் கருவறையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் இந்த மகா மாரியம்மன் கோயில் பயிர்த்தொழில் சிறக்கவும் செல்வ வளம் சேரவும் இப்பகுதியில் கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: என்ன வேண்டினாலும் நிறைவேறும்.. திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் மகிமை!

இந்தக் கோயிலின் அருகிலேயே சிவ ஆலயமாக அகத்தீஸ்வரர் அருள் பாலித்து வருகிறார். இந்தக் கோயிலின் முன்பக்கம் சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவன் கோயில், வடக்கு பக்கம் ஜலகிரீஸ்வரர் கோயில், தெற்கு பக்கம் காஞ்சி பெரியவர் சங்கராச்சாரியார் பிறந்த இருள் நீக்கி கிராமம், கிழக்கே திருநெல்வேலி காவலான நெல்லிவனநாதர் கோயில், மேற்கே  ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆகியவை அமைந்திருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மேலும் மகா மாரியம்மன் கோயிலில் மகா மண்டபத்தில் 200 பேர் அமர்ந்து ஒரே நேரத்தில் சுவாமி தரிசனம் செய்யும் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் கற்பக விநாயகர், காத்தவராயன் ஆரியமாலா மற்றும் கருப்பழகியுடனும், கழுவுடையான், கருப்பணசாமி  பொம்மியுடனும், கருப்பாயி அம்மன், பேச்சியம்மன் ஆகியோரும் அருள் பாலிக்கின்றனர்.

Also Read: தொழில் வளர்ச்சியில் தடையா? – வழிபட வேண்டிய முத்துமாரியம்மன் கோயில்!

வழிபாடும் வேண்டுதலும்

இந்த கோயிலில் சித்திரை மாதம் 10 நாள் உற்சவ திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். அது மட்டுமல்லாமல் அம்மனுக்குரிய அத்தனை விசேஷ தினங்களும் கொண்டாடப்படுகிறது. இந்த மகா மாரியம்மன் கோயிலில் குழந்தை பேறு, உடல் ஆரோக்கியம், அம்மை நோய்,  செல்வ வளம் வேண்டுதல், கண் நோய் ஆகியவைக்கு சிறந்த பரிகார ஸ்தலமாக பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட பகுதி மக்களால் இந்த கோயில் குலதெய்வ வழிபாடாகவும் சிறப்பிக்கப்படுகிறது.

இந்த கோயிலில் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறியுடன் பக்தர்கள் பால்குடம் எடுத்தல், தொட்டில் கட்டுதல், கண் மலர் காணிக்கை, காவடி எடுத்தல், தென்னம்பிள்ளை, உப்பு, மிளகு ஆகியவை நேர்த்திக்கடனாக செலுத்துகின்றனர்.  வாய்ப்பு இருந்தால் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டு பலன்களை பெறுங்கள்.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)