தமிழ்நாட்டில் ஒரு கங்கை நதி.. இந்த கோயில் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

முறப்பநாடு கைலாசநாதர் கோயில், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள நவகைலாய தலங்களில் ஒன்று. அகத்திய முனிவரின் ஆலோசனையின்படி உருவான இந்தக் கோயில், குரு பகவானுக்குரிய தலமாகவும், தட்சிண கங்கை எனவும் போற்றப்படுகிறது. சோழ மன்னனின் மகளின் சாப விமோசனம், உரோமச முனிவரின் வழிபாடு போன்ற சிறப்பு வரலாறுகள் கொண்டது

தமிழ்நாட்டில் ஒரு கங்கை நதி.. இந்த கோயில் பற்றி தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க!

கைலாசநாதர் கோயில்

Updated On: 

25 Jun 2025 15:08 PM

 IST

பல்வேறு இடங்களில் சிவலிங்க சிலைகளை பிரதிஷ்டை செய்ய விரும்பிய உரோமாச முனிவர் தனது குருவான அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார். அப்போது சிவனை வழிபட்டு அந்த பூஜையில் இருக்கும் தாமரை மலர்களை எடுத்து அதனை தாமிரபரணி நதியில் தூக்கி எறியவும். அது எங்கு கரை ஒதுங்குகிறதோ அங்கு பிரதிஷ்டை செய் என கூறினார். அப்படியாக உருவானது தான் இந்த முறப்பநாடு கைலாசநாதர் ஆலயம் ஆகும். இந்த கோயிலில் அம்பாளாக சிவகாமி காட்சி கொடுத்து வருகிறார். இக்கோயிலானது காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலையில் 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும் இந்த கோயிலின் பிரகாரத்தில் கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், நாயன்மார்கள், பஞ்சலிங்கம், சனீஸ்வரர், அதிகார நந்தி, சப்த கன்னி உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர். சூரபத்மனின் கொடுமைகள் தாங்க முடியாத முனிவர்கள் இங்குள்ள ஈசனிடம் முறையிட்ட காரணத்தால் இந்த இடம் முறப்பநாடு என அழைக்கப்படுகிறது.

கோயில் வரலாறு

சோழ தேசத்தை ஆண்ட மன்னர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தையின் முகம் குதிரையை போன்று இருந்ததால், அந்த முகம் மாற வேண்டும் என சிவபெருமானை எண்ணி அந்த மன்னன் பிரார்த்தனை மேற்கொண்டான். அப்போது சிவபெருமான் அரசனின் முன்பு தோன்றி தாமிரபரணி நதியில் நீராடும் படி கூறினார். சோழ அரசனும் இங்கு வந்து நீராடிய நிலையில் மன்னனின் மகள் முகம் மனிதர்களின் முகமாக மாற்றம் கண்டது. இதனைத் தொடர்ந்து தனது வேண்டுதல் நிறைவேறியதாக நிகழ்ச்சி கொண்ட அவன் சிவபெருமானுக்கு அங்கு ஒரு கோயிலை கட்டினான். அவர் பெயர் வல்லாள மகாராஜா என சொல்லப்படுகிறது.

தாமிரபரணி நதிக்கரையில் இருக்கும் நவகைலாய தலங்களில் இந்தக் கோயில் ஐந்தாவது கோயிலாகும். நவக்கிரகங்களில் குரு பகவான் உடைய தலமாக இக்கோயில் கருதப்படுகிறது. காசியில் கங்கை நதியானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்லும். அதேபோல முறப்பநாட்டிலும் தாமிரபரணி நதியானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. வேறு எந்த நவகைலாய தளங்களிலும் இல்லாத சிறப்பு இதுவாகும். இதனால் இந்த இடம் தட்சிண கங்கை என அழைக்கப்படுகிறது. இந்த நதியில் குளித்தால் கங்கை நதியில் குளிப்பதற்கு ஈடாகுமாம்.

கோயிலின் சிறப்புகள் தெரியுமா?

அகத்தியரின் சீடராக திகழ்ந்த உரோமச முனிவருக்கு இறைவன் இந்த கோயிலில் குரு பகவானாக காட்சி கொடுத்ததாக சொல்லப்படுகிறது. மேலும் சுவாமிக்கு எதிரே இருக்கும் நந்தி முகம் குதிரை வடிவில் இருப்பது சிறப்பான ஒன்றாகும். மன்னனின் மகளுக்கு ஏற்பட்ட சாபத்தை இந்த நந்தி ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இங்குள்ள பைரவர் சன்னதியில் நாய் வாகனத்துடன் ஒருவரும், எதுவும் இல்லாமல் மற்றொருவரும் என இரண்டு பைரவர்கள் காட்சி தருகின்றனர். இவர்களில் நாய் வாகனத்துடன் இருப்பவர் காலபைரவர் என்றும், மற்றொருவர் வீர பைரவர் எனவும் அழைக்கப்படுகிறார்.

குரு பகவானுக்குரிய கோயில் என்ற நிலையில் இங்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு கையில் குறைவில்லாத அளவுக்கு பணம், செல்வ வளம் ஆகியவை இருக்கும் என நம்பப்படுகிறது. நவகைலாய தளங்களில் இந்த கோயில் நடுகைலாயம் என அழைக்கப்படுகிறது. இந்தக் கோயிலில் குரு பகவான் இருப்பதால் அவருக்கு பிடித்த மஞ்சள் வஸ்திரம் சாற்றப்பட்டு கொண்டக்கடலை பிரசாதமாக படைத்து வழிபடப்படுகிறது. அம்பாள் சன்னதிக்கு முன்பு துவார பாலகர்கள் இருபுறமும் இருப்பது போல் இங்கு விநாயகர்கள் இருப்பது காணக் கிடைக்காத ஒரு காட்சியாகும்.

(இந்தக்கட்டுரை இறை நம்பிக்கையின் அடிப்படையிலான ஆன்மிக வரலாறுபடி கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல் பூர்வ ஆதாரங்கள் எதுவும் இல்லை)

ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்... அவருக்கு உடலில் இப்படி ஒரு பிரச்சனையா?
ஹிமாச்சலின் வறண்ட டிசம்பர்.. வெப்பமயமாதலால் பனி இல்லாத நிலை!
ஜிபிஎஸ் டிராக்கருடன் கிடைத்த வெளிநாட்டு கடற்புறா - பரபரப்பு தகவல்
ஏஐ காதலரை திருமணம் செய்துகொண்ட ஜப்பானிய பெண்