சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாட்டம்.. நல்ல நேரம் எது?
2025 அக்டோபர் 1 அன்று சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் நிறைவு நாளாக முப்பெரும் தேவியரையும் வணங்கும் இந்நிகழ்வுக்கு வீடுகள், வாகனங்கள், தொழில் இடங்களை சுத்தம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். அதன் நல்ல நேரம் தொடர்பான தகவல்களைக் காணலாம்.

சரஸ்வதி, ஆயுத பூஜை கொண்டாட்டம்
மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வந்த நவராத்திரி பண்டிகை நிறைவு கட்டத்துக்கு வந்துள்ளது. அலைமகள், மலை மகள், கலை மகள் என அழைக்கப்படும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியர்களை தலா 3 நாட்கள் வழிபாடு செய்வது செய்வது நவராத்திரி பண்டிகையின் அடிப்படை வழிபாடாகும். அதன் இறுதி நாளில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, விஜய தசமி, தசரா ஆகிய பண்டிகைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப வெவ்வேறு வகைகளில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை பண்டிகை அக்டோபர் 1 ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் கவனத்திற்கு
இந்நாளில் சரஸ்வதி பூஜை கொண்டாடுபவர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டையும், ஆயுத பூஜை கொண்டாடுபவர்கள் தங்களுடைய வாகனங்கள், தொழில் மேற்கொள்ளும் இடங்கள், தொழிலில் பயன்படுத்தும் பொருட்கள் ஆகியவற்றை முந்தைய நாள் அல்லது பூஜை தினத்தின் காலையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். வீட்டைப் பொறுத்தவரை நிலை வாசல், ஜன்னல்கள், அறைக் கதவுகள், சமையலறை பொருட்கள் மற்றும் பூஜை அறை ஆகியவற்றை சுத்தம் செய்ய வேண்டும்.
அதில் திருநீரில் பட்டை போட்டு சந்தனம்,குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும். பின்பு வீட்டின் வாயிலிலும் பூஜை அறை வாயிலிலும் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். தற்காலத்தில் பிளாஸ்டிக் மாவிலையை கடையில் வாங்கி பயன்படுத்துகிறார்கள். அப்படி செய்யாதீர்கள்.
இதையும் படிங்க: பணப் பிரச்னைகளை போக்கும் ஏலக்காய் வழிபாடு.. செய்வது எப்படி?
பூஜையறையில் சுவாமி படங்களை நன்கு சுத்தம் செய்து அவற்றிற்கு பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். வீட்டில் தனியாக சரஸ்வதி தேவி படம் அல்லது சிலை இருந்தால் ஒரு மனை பலகை அல்லது டேபிள் எடுத்து அதில் மஞ்சள் நிற துணி விரித்து அதில் நோட்டு புத்தகங்கள், கணக்குப் புத்தகம், வங்கி பாஸ்புக், சேமிப்பு புத்தகம் என அனைத்தையும் வைக்க வேண்டும்.
பின்புஅதன் மேல் வெண்பட்டு துணி விரித்து அதற்கு மேல் சரஸ்வதி தேவி புகைப்படம் அல்லது சிலையை வைக்க வேண்டும். இதற்கு சந்தனம், குங்குமம், பூ வைத்து அலங்கரிக்க வேண்டும்.
தொழில் மேற்கொள்ளும் இடமாக இருந்தால் அங்கு பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். வாசலில் வாழை கன்றுகளை கட்ட வேண்டும். தொடர்ந்து ஏதேனும் ஒரு கடவுளின் புகைப்படத்தை வைத்து வழிபடலாம். ஒரு வாழை இலை விரித்து அதில் இனிப்புகள், பிரசாதங்கள், வெற்றிலை பாக்கு, பழங்கள் என உங்களால் முடிந்தவற்றை வைத்து தீப தூப ஆராதனை காட்டி வழிபடலாம். தொழில் செய்யும் இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடினால் அன்றைய நாளில் மேற்கொண்டு எந்த வேலையும் செய்யக்கூடாது என்பது காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: உப்பு தீபம் ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. இதைப் படிங்க!
அதேசமயம் வீட்டில் சரஸ்வதி பூஜை வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதனை வணங்க வேண்டும். அதன் பிறகு தான் சரஸ்வதி தேவிக்கு வழிபாட்டு முறைகளை செய்ய வேண்டும். நீங்களும் உங்களால் முடிந்தவற்றை செய்து சரஸ்வதி தேவிக்கு வழிபட்டாலே அதன் பலன் தாராளமாக கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும்.
நல்லநேரம் எது?
2025 ஆம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை வரும் நிலையில் அன்றைய நாளில் காலை 7:30 முதல் 9 வரை எமகண்டம் உள்ளது. அதேபோல் ராகு காலம் நண்பகல் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை உள்ளது. எனவே காலை 9 மணி முதல் 12 மணி வரை நல்ல நேரம் என்பதால் அன்றைய காலத்தில் வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் நாம் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். ஒருவேளை காலை நேரத்தில் செய்ய முடியாதவர்கள் மாலையில் நான்கு மணிக்கு மேல் செய்ய தொடங்கலாம். இதனை 7 மணிக்குள் நிறைவு செய்ய வேண்டும்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)