Vastu Tips: ரக்ஷா பந்தன் பண்டிகை.. ராக்கி கட்டும்போது பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!
2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையில், சகோதர சகோதரிகள் ராக்கி கட்டுவதற்கு சரியான நேரம் மற்றும் திசையைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். வாஸ்து சாஸ்திரப்படி, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமர்ந்து ராக்கி கயிறு கட்ட வேண்டும்.

இந்த உலகில் எத்தனை உறவுகள் இருந்தாலும் சகோதரன் – சகோதரி உறவு என்பது சொல்லில் அடக்க முடியாத அளவுக்கு அன்பு நிறைந்ததாகும். உடன் பிறந்தவர்கள் தாண்டி மற்றவர்களையும் சகோதரர், சகோதரிகளாக நினைக்கும் அளவுக்கு நம் வாழ்க்கை நிறைந்துள்ளது. இப்படியான சகோதரன் – சகோதரி உறவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொதுவாக இப்பண்டிகை வட இந்தியாவில் விமரிசையாக அறியப்பட்டாலும் சகோதரன் – சகோதரி உறவுக்காக இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெகுவிமரிசையாக கொண்டாடுகிறார்கள். இந்த நாளில் சகோதரிகள் சகோதரர்கள் கையில் ராக்கி கயிறு கட்டுவார்கள். பதிலுக்கு சகோதரிகளுக்கு பரிசு வழங்கப்படும். 2025ம் ஆண்டு ரக்ஷா பந்தன் பண்டிகை ஆகஸ்ட் 9ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் நாம் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள் என்னவென்று பார்க்கலாம்.
சகோதர சகோதரிகளுக்கு இடையிலான பிரிக்க முடியாத பிணைப்பின் அடையாளமாக ரக்ஷா பந்தன் பண்டிகை திகழ்கிறது. சகோதரனின் கையில் ராக்கி கயிறு கட்டுவதை சரியான திசை, நேரம் மற்றும் முறையைப் பின்பற்றி செய்தால் நேர்மறை ஆற்றலின் ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது குடும்பத்திற்கு மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பையும் தரும் என நம்பப்படுகிறது.
Also Read: எந்த பறவை கூடு கட்டினால் வீட்டுக்கு ஆகாது தெரியுமா?




பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்
ராக்கி கயிறு கட்டுவதற்கு ஒரு நல்ல நேரத்தைத் தேர்வு செய்யவும். காரணம் வாஸ்து சாஸ்திரத்தில், நல்ல நேரத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு என சொல்லப்படுகிறது. சனிக்கிழமை நாளில் காலை அல்லது மாலை எதுவாக இருந்தாலும் நல்ல நேரம் பார்த்து ராக்கி கயிறு கட்ட வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். முடிந்தவரை ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களில் ராக்கி கட்டுவது அசுபமானது. அது எதிர்மறை சக்தியை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. நல்ல நேரத்தில் ராக்கி கட்டுவது சகோதரனின் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.
Also Read: Vastu Tips: வாஸ்து டிப்ஸ்.. இந்த செடியை வீட்டில் வளர்த்தால் நிதி பிரச்னைகள் நீங்குமாம்!
நீங்கள் உங்கள் சகோதரனுக்கு ராக்கி கட்ட போகிறீர்கள் என்றால் கிழக்கு திசை அல்லது வடகிழக்கு திசை மிகவும் புனிதமானது. இது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. அதன்படி, சகோதரர் கிழக்கு திசையை நோக்கி அமர வேண்டும். சகோதரி அவருக்கு முன்னால் அமர வேண்டும். உங்கள் வீட்டில் பூஜை அறை இந்த திசையில் இருந்தால் மிகவும் நல்லது.
ராக்கி கயிறை ஒரு தட்டில் வைத்து வழிபட வேண்டும். அதன்படி, முதலில் தட்டில் சிவப்பு அல்லது மஞ்சள் துணியால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் ராக்கி கயிறு, குங்குமம், சந்தனம், உதிரிப்பூ, அகல் விளக்கு, இனிப்புகள், பூக்கள் ஆகியவற்றை தட்டில் வைக்கவும். விளக்கை ஏற்றும்போது, அதன் திரி கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
ராக்கி கட்டும்போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அதாவது வலது கை சக்தி மற்றும் கர்மாவின் சின்னமாக இருப்பதால், ராக்கி கயிறை சகோதரனின் வலது கை மணிக்கட்டில் கட்ட வேண்டும். பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை குறிக்கும் வகையில் இந்த முடிச்சு இறுக்கமாக கட்டப்பட வேண்டும். ராக்கி கட்டும் போது சகோதரனின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.
மூன்று முடிச்சுகள் கட்டுவது மங்களகரமானதாகும். ராக்கி கட்டிய பிறகு, சகோதரருக்கு இனிப்புகளை ஊட்டி, பின்னர் ஆரத்தி எடுக்கவும். அதன் பிறகு, சகோதரர் தனது சகோதரிக்கு தனது நிதித் திறனுக்கு ஏற்ப பரிசுகளை வழங்க வேண்டும். ஏனெனில் இது அன்பு மற்றும் செழிப்பின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் எதிர்மறை சக்தியை நீக்கி குடும்பத்தில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் அமைதியைக் கொண்டுவரும் என சொல்லப்படுகிறது.
(வாஸ்து சாஸ்திரத்தின்படி இந்த தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)