Navratri: நவராத்திரி 8ம் நாள்.. துர்கா அஷ்டமி வழிபாடு செய்வது எப்படி?

Navratri 2025 day 8: 2025 நவராத்திரி துர்கா அஷ்டமி, மகாகௌரி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித நாளாகும். இந்நாளில் மகாகௌரியை வழிபடுவதால் தூய்மை, அமைதி, செழிப்பு மற்றும் பாவங்கள் நீங்கும் என நம்பப்படுகிறது. அதிகாலையில் நீராடி, வெள்ளை நிறப் பூக்கள், தேங்காய், இனிப்புகளுடன் பூஜை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Navratri: நவராத்திரி 8ம் நாள்.. துர்கா அஷ்டமி வழிபாடு செய்வது எப்படி?

நவராத்திரி வழிபாடு

Published: 

29 Sep 2025 07:00 AM

 IST

2025 ஆம் ஆண்டு நவராத்திரி பண்டிகை இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அதன்படி நவராத்திரியின் எட்டாவது நாள் துர்கா அஷ்டமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாள் மிகுந்த ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 9 நாட்களும் துர்க்கையின் ஒன்பது விதமான வழிபாடு மேற்கொள்ளப்படும் நிலையில் இந்த தினம் மகாகௌரிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். அதன்படி இன்று (செப்டம்பர் 29) நாம் மகா கௌரியை வழிபட்டால் நம்முடைய வாழ்கையில் தூய்மை, அமைதி மற்றும் செழிப்பு ஆகியவை கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். ஒளிரும் வெண்மையான நிறத்திற்கு பெயர் பெற்ற மகா கௌரி, காளையின் மீது சவாரி செய்து, கைகளில் திரிசூலம் மற்றும் டமாருவை ஏந்தி காட்சியளிக்கிறார். அவரை வழிபடுவது கடந்த கால பாவங்கள், தடைகள் நீங்கி, நல்லிணக்கம் மற்றும் நிறைவான வாழ்க்கையை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.

வழிபாட்டு முறைகள்

நவராத்திரி விழாவின் 8ம் நாளில் பக்தர்கள் பாரம்பரிய சடங்குகளுடன் வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி மகாகௌரி தேவி பூஜை விதியின் முக்கிய விதிகளை காணலாம். ஆக, அதிகாலையில் எழுந்து புனித நீராட வேண்டும். தொடர்ந்து பூஜை நடக்கும் இடம் அல்லது இறை வழிபாடு செய்யும் இடத்தை சுத்தம் செய்து சிறிய கோலம் இட வேண்டும்.

இதையும் படிங்க: புரட்டாசி சனிக்கிழமை.. பெருமாளுக்கு தளிகை உணவு இடும் முறை!

அதில் மகா கௌரி தேவியின் புகைப்படம் அல்லது சிலை வைத்து அதற்கு பூக்கள், கலசம் மற்றும் பூஜை பொருட்களால் அலங்கரிக்க வேண்டும். மகாகௌரி தேவிக்கு வெள்ளை நிற பூக்கள், தேங்காய் மற்றும் இனிப்புகளை சமர்ப்பிப்பது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பின்னர் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி துர்கா சப்தசதி அல்லது மகா கௌரி தேவிக்கான மந்திரங்களை உச்சரிக்கவும். விரதம் இருப்பவர்கள் அதனை தொடங்கலாம். தொடர்ந்து மாலையில் ஆரத்தி எடுத்து, வழிபாட்டில் வைக்கப்படும் பிரசாதங்களை விநியோகம் செய்து சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.

தேவி மஹாகௌர்யை நமஹ.. ஓம் தேவி மஹாகௌர்யை நமஹ என்ற மந்திரத்தை இறை வழிபாட்டின்போது சொல்வது புண்ணியமாகும். இந்த மந்திரம் ஆன்மாவை தூய்மைப்படுத்தி தெய்வீக ஆசீர்வாதங்களைத் தரும் என்று நம்பப்படுகிறது.

இதையும் படிங்க: 5 அஷ்டமி வழிபாடு.. வேண்டியதை நிறைவேற்றும் கல்யாண காமாட்சி!

கன்னிப் பெண்களுக்கு பூஜை

நவராத்திரி காலத்தில் வரும் துர்கா அஷ்டமி அன்று கன்னியா பூஜை அல்லது குமாரி பூஜை நடத்தப்படுகிறது. அதாவது ஒன்பது இளம் பெண்கள் மா துர்க்கையின் அவதாரங்களாக வணங்கப்படுகிறார்கள். பக்தர்கள் அவர்களுக்கு பாத பூஜை செய்து உணவு, பரிசுகள் மற்றும் ஆசீர்வாதங்களை வழங்க வேண்டும். இந்த வழிபாடு நவராத்திரியின் மிகவும் புனிதமான செயல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது, இது பெண் தெய்வீக சக்திக்கு நாம் செலுத்தும் மரியாதை மற்றும் பக்தியைக் குறிக்கிறது.

இந்த நாளில் மங்களகரமான நிறமாக மயில் பச்சை குறிப்பிடப்பட்டுள்ளது. பக்தர்கள் பூஜையின் போது இந்த நிறத்தை அணிந்தால் அது ஆற்றல், செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிப்பதாக உள்ளது.

மகாகௌரியை வழிபடுவது எதிர்மறை எண்ணங்களை நீக்கி, ஆசைகளை நிறைவேற்றி, உள் அமைதியைக் கொண்டுவரும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த நாள் அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமாக நம்மால் வணங்கப்படும் சரஸ்வதி தேவிக்கான மூன்று நாட்கள் வழிபாட்டின் தொடக்கத்தையும் குறிக்கிறது குறிப்பிடத்தக்கது.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)