AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெற்றோரில் யாருக்கு முதலிடம்? – நபிகள் நாயகம் காட்டிய உன்னத பாதை!

Motherhood in Islam: இஸ்லாமிய நெறிமுறைகளில் பெற்றோருக்குச் செய்யும் தொண்டும், அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையும் மிக உயரிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. தாய் மற்றும் தந்தை ஆகிய இருவரில் யாருக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது குறித்து இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஆன்மிக போதனைகளை அடிப்படையாகக் கொண்டு விரிவாகக் காண்போம்.

பெற்றோரில் யாருக்கு முதலிடம்? – நபிகள் நாயகம் காட்டிய உன்னத பாதை!
பெற்றோர்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 06 Sep 2026 05:00 AM IST

இஸ்லாமிய மார்க்கத்தில் பெற்றோருக்குச் செய்யும் பணிவிடையும் மரியாதையும் மிக உயரிய அறமாகப் போற்றப்படுகிறது. அறப்போருக்குச் செல்ல விரும்பி வந்த இளைஞரிடம், உயிருடன் இருக்கும் பெற்றோருக்குச் சேவையாற்றுவதே முதன்மை கடமை என நபிகளார் வழிகாட்டினார். தாயின் சம்மதமின்றி வந்த மற்றொரு இளைஞரை, அழுதுகொண்டிருந்த தாயை மகிழ்விக்க உடனடியாகத் திருப்பி அனுப்பினார். பெற்றோர் மனநிறைவோடு வாழும்போது மட்டுமே இறைவனின் பரிபூரண அருளைப் பெற முடியும் என்பது நபிகளாரின் போதனையாகும். ஒரு மனிதர் முன்னுரிமை குறித்துக் கேட்டபோது, நபிகளார் தொடர்ந்து மூன்று முறை தாயின் பெயரையும், நான்காவது முறையே தந்தையின் பெயரையும் குறிப்பிட்டார்கள். தந்தையைக் காட்டிலும் தாயின் தியாகத்திற்கு மூன்று மடங்கு அதிக உரிமையும் மரியாதையும் உண்டு என்பதை இது காட்டுகிறது. எனவே, முதிய வயதில் பெற்றோரை அவமதிக்காமல் கண்ணியத்துடன் பராமரித்து வாழ வேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.

போர்ப் படையை விட பெற்றோரின் பராமரிப்பே முதன்மையானது

இளைஞர் ஒருவர் அறப்போரில் பங்கேற்கும் ஆர்வத்துடன் நபிகளாரிடம் அனுமதி கேட்க வந்தபோது, அவருடைய பெற்றோரின் நிலையைக் கேட்டறிந்தார் நபிகளார். அ பெற்றோர் உயிருடன் இருப்பதை அறிந்ததும், போர்க்களத்திற்குச் செல்வதை விடவும் அவர்களுக்குப் பணிவிடை செய்வதே மிகச் சிறந்த கடமை என அறிவுறுத்தி அவரை வீட்டிற்குத் திருப்பி அனுப்பினார்.

தாயின் கண்ணீரும் இறைவனின் மகிழ்ச்சியும்

மற்றொரு நிகழ்வில், தனது தாயின் அனுமதியைப் பெறாமலும், அவர் அழுதுகொண்டிருந்த நிலையிலும் வந்த ஒரு இளைஞரை நபிகளார் உடனடியாகத் திரும்பச் சொன்னார். கதறி அழுத தாயை மகிழ்விக்கச் செய்து, அவரது புன்னகையைப் பெறுவதே இறைவனின் அருளைப் பெற்றுத் தரும் என்றும், பெற்றோரின் மனநிறைவிலேயே இறைவனின் மகிழ்ச்சி அடங்கியுள்ளது என்றும் தெளிவாக உணர்த்தினார்.

தந்தையை விட தாய்க்கு மூன்று மடங்கு உரிமை

ஒருவர் நபிகளாரிடம் வந்து, “நான் யாரிடம் அதிக அன்பும் முன்னுரிமையும் காட்ட வேண்டும்?” என்று கேட்டபோது, “உன் தாய்க்கு” என தொடர்ந்து மூன்று முறை பதிலளித்தார். நான்காவது முறை கேட்டபோதே “உன் தந்தைக்கு” என்று குறிப்பிட்டார்கள். இதன் மூலம் தந்தையைக் காட்டிலும் தாயின் தியாகத்திற்கு மூன்று மடங்கு அதிக உரிமை உள்ளது என்பதை மார்க்க அறிஞர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இறையருளும் இன்றைய சமுதாய நிலையும்

“தாயின் காலடியில் சொர்க்கம் உள்ளது” என்ற நபிமொழிக்கு ஏற்ப, ஒன்பது மாதங்கள் சுமந்து பாலூட்டி வளர்த்த தாயின் பெருமையை திருக்குர்ஆனும் வலியுறுத்துகிறது. ஆனால், தற்காலத்தில் பெற்றோரை முதியோர் இல்லத்தில் சேர்ப்பதும், அவமதிப்பதும் அதிகரித்து வருகிறது. வயதான காலத்தில் பெற்றோரைக் கடிந்து பேசாமல் கண்ணியத்துடன் பராமரித்து, அவர்களின் ஆசியைப் பெறுவதே இறைவனின் அருளை அடைவதற்கான வழியும் இளைஞர்களின் தலையாய கடமையுமாகும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us