சபரிமலையில் இன்று மகர விளக்கு பூஜை…ஜோதி வடிவில் காட்சியளிக்கும் ஐயப்பன்!
Sabarimala Ayyappa Temple: கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகர விளக்கு ஜோதி பூஜை நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் அலைகடலென குவிந்துள்ளனர். மேலும், ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து கொண்டிருக்கின்றனர்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மண்டல விளக்கு பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கமாகும். ஏற்கனவே, கார்த்திகை, மார்கழி, தை ஆகிய மாதங்களில் ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்திற்காக வந்து செல்வது வழக்கமாகும். இதனால், இந்த மாதங்கள் ஐயப்பன் சீசன் காலமாகும். இந்த நிலையில், ஐயப்பன் கோயிலில் மண்டல விளக்கு பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16- ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டு 41 நாட்கள் மண்டல காலம் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 27- ஆம் தேதி மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கோயில் நடை அடைக்கப்பட்ட நிலையில், மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 30- ஆம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினம் தோறும் தரிசனம் செய்து வருகின்றனர்.
மகர விளக்கு பூஜை-மகர ஜோதி தரிசனம்
இந்த நிலையில், சபரிமலையில் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக இன்று புதன்கிழமை ( ஜனவரி 14) மகர விளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் கந்தகிரி பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, சபரிமலை கோயிலில் பிரசாத சுத்தி பூஜை மற்றும் பிம்ப சுத்தி பூஜை ஆகியவை நடைபெற்றது. இதே போல, இன்று புதன்கிழமை கோயிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகளுடன் மதியம் 3:08 மணிக்கு மகர சங்கராந்தி எனப்படும் மகர சங்கிரம சிறப்பு பூஜை, சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: வீட்டில் சங்கு இருந்தால் எத்தனை நன்மைகள் தெரியுமா? ஆன்மீக முக்கியத்துவம் இவைதான்!
மகரவிளக்கு பூஜை என்றால் என்ன
இந்த பூஜைகளை தந்திரி கண்டரு மகேஷ் மோகன் மற்றும் மேல் சாந்தி இ. டி. பிரசாத் நம்பூதிரி ஆகியோர் தலைமை வகித்து நடத்த உள்ளனர். மகர விளக்கு பூஜை என்பது சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் ஒரு புனித திருவிழாவாகும். இது மகர சங்கராந்தி நாளில் அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14-ஆம் தேதி இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வின்போது, பொன்னம்பலமேட்டில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு மற்றும் கேரள அரசு அமைப்புகள் சார்பில் 3 முறை தீபம் ஏற்றப்படும்.
கோயில் நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள்
பிரசித்தி பெற்ற மகர விளக்கு பூஜைக்காக ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். இதற்காக, கோயில் நிர்வாகம் மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்களுக்கான தண்ணீர், உணவு, பொருட்கள் வைக்கும் அறை, பக்தர்கள் தங்கும் அறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க: பொங்கல் அன்று இதைச் செய்தால் சூரியன் தோஷம் நீங்கும்.. சுப பலன்கள் தேடி வரும்!



