Krishna Jayanthi: 2025 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? – அதன் சிறப்புகள் தெரியுமா?

கிருஷ்ண ஜெயந்தி, இந்துக்களின் முக்கிய பண்டிகை, ஆவணி மாத தேய்பிறை அஷ்டமியில் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ணர், விஷ்ணுவின் 8வது அவதாரமாகும். கிருஷ்ண பகவான் தீமை ஒழித்து நன்மை செய்பவர். இந்நாளில் விரதம், வழிபாடு செய்வதன் மூலம் வாழ்வில் இன்பம் பெறலாம் என நம்பப்படுகிறது. இப்பண்டிகை கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனவும் அழைக்கப்படுகிறது.

Krishna Jayanthi: 2025 கிருஷ்ண ஜெயந்தி எப்போது? - அதன் சிறப்புகள் தெரியுமா?

கிருஷ்ண ஜெயந்தி

Published: 

08 Aug 2025 10:53 AM

இந்து சமூகத்தில் ஏராளமான கடவுள்கள் பொதுமக்களால் வழிபடப்படுகின்றனர். சாதி, சமய ரீதியாக கடவுள்கள் பிரிக்கப்பட்டாலும் தெய்வம் என வரும்போது அனைவரும் ஒன்று தான் என்ற எண்ணம் ஆன்மிக அன்பர்களிடையே உள்ளது. அதனால் எல்லா கடவுள்களையும் வணங்கி ஆசி பெறுகிறார்கள். அதேபோல் எந்த கடவுளுக்கு விசேஷ தினங்கள் வந்தாலும் வீட்டில் வழிபாடு, கோயிலில் வழிபாடு செய்து மனம் மகிழ்கிறார்கள். இப்படியான இந்து மதத்தில் ஒரு தவிர்க்க முடியாத கடவுளாக திகழ்பவர் கிருஷ்ணர் (Lord Krishna). இவர் பிறந்த தினம் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. இதனை வட இந்தியாவில் கோகுலாஷ்டமி, கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்ற பெயரில் அழைக்கிறார்கள். கிருஷ்ண ஜெயந்தி (Krishna Janmashtami) இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகையாகும்.

கிருஷ்ண ஜெயந்தி சிறப்புகள்

பகவான் கிருஷ்ணர் விஷ்ணுவின் தசாவதாரங்களில் 8வது அவதாரமாக அறியப்படுகிறார். இவர் ஆவணி மாதத்தின் தேய்பிறை அஷ்டமியில் பிறந்ததாக நம்பப்படுகிறது. தேய்பிறையின் 8ம் நாளில் வரும் இந்த திதியானது சில நேரங்களில் ஆடி மாதங்களிலும் வரும். ஆனால் பெரும்பாலான நேரங்களில் ஆவணி மாதத்தில் தான் வரும். விஷ்ணுவை முதன்மை கடவுளாக கொண்டு வழிபடும் வைணவ சமயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா மிக சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

Also Read: வாழ்க்கையில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய கிருஷ்ணர் கோயில்கள்!

இந்த கிருஷ்ணர் பிறப்பு ஜென்மாஷ்டமி என அழைப்படுகிறது. ஜென்மா என்றால் பிறப்பு என்றும், அஷ்டமி என்பது தேய்பிறையின் 8ம் நாள் என்பதை குறிப்பதாகும். கிருஷ்ணர் அஷ்டமி நாளின் நள்ளிரவில் மதுராவில் உள்ள சிறையில் பிறந்ததாக கூறப்படுகிறது. இவரின் பெற்றோர் வாசுதேவர் மற்றும் தேவகி ஆவார்கள். இந்த தம்பதியினரின் 8வது மகனாக கிருஷ்ணர் பிறந்தார்.

ஒருமுறை மதுராவை தலைநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த கம்சன் மன்னனின் மரணத்திற்கு, அவனது சகோதரி தேவகியின் 8வது மகன் காரணமாக இருப்பான் என அசரீரி ஒலித்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கம்சன், வாசுதேவர் மற்றும் தேவகி ஆகியோரை சிறையில் அடைத்தான். அவர்களுக்கு பிறந்த குழந்தைகளை கொன்றான். ஆனால் கிருஷ்ணர் பிறந்த நேரம் சிறையை விட்டு வாசுதேவர் தப்பி செல்ல ஏதுவான செயல்கள் நடந்தது.

அவர் யமுனை ஆற்றைக் கடந்து யசோதா மற்றும் நந்தா ஆகியோரிடம் கிருஷ்ணரை வளர்க்க கொடுத்தார். அங்கு ஒன்றுவிட்ட சகோதரரான பலராமன் கிருஷ்ணரின் இளமைக்காலம் வரை உற்ற தோழனாக திகழ்ந்தான். இப்படியாக கிருஷ்ணர் பிறப்பு சொல்லப்படுகிறது.

Also Read: ஆடி மாதம்.. சென்னையில் மிஸ் பண்ணக்கூடாத அம்மன் கோயில் இதுதான்!

2025ல் கோகுலாஷ்டமி எப்போது?

2025ம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்த முறை ஆடி மாத கடைசி நாளில் இப்பண்டிகை வருகிறது. இந்நாளில் விரதமிருந்து கிருஷ்ணரை வழிபட்டால் வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்கள் நீங்கி இன்பம் பிறக்கும் என்பது நம்பிக்கையாகும்.

(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)