கார்த்திகை 2025: இன்று கார்த்திகை முதல் சோமவாரம்.. வீட்டிலேயே இப்படி வழிபடலாம்!!
Karthigai 2025: கார்த்திகை மாதத்தில் வரும் திங்கள்கிழமைகள் கார்த்திகை சோமவாரம் எனப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை வழிபடுதல் மிகப் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்நாளில், விரதம், அபிஷேகம், தீபம் ஏற்றுதல், சிவன் கோயில் தரிசனம் ஆகியவற்றை செய்வதால், குடும்ப நலன், ஆரோக்கியம், மன அமைதி கிடைக்கும் என நம்பப்படுகிறது.
சோமவாரம் என்பது ஒவ்வொரு வாரமும் வரும் திங்கட்கிழமையைக் குறிக்கும். இந்த நாளை இந்திய ஆன்மீகத்திலும், குறிப்பாக சைவ சமயத்திலும் மிகுந்த முக்கியத்துவம் பெறும் நாளாகக் கருதுகின்றனர். சோமவாரம் சிவபெருமான் அருளைப் பெறும் பவித்ர நாளாகும். இதில், கார்த்திகை சோமவிரதம் என்பது கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகளில் (சோமவாரம்) நோன்பு நோற்கப்படும் ஒரு விரதமாகும். இது சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானதாக கருதப்படுகிறது. தமிழர்களுக்குப் பிரத்யேக ஆன்மீக அர்த்தம் கொண்ட மாதம் கார்த்திகை. இந்த மாதத்தில் வரும் முதல் சோமவாரம் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. திங்கட்கிழமை என்பது சிவபெருமானின் நாளாகப் போற்றப்படுவதால், பக்தர்கள் இந்த நாளை மிகுந்த பக்தியுடன் அனுஷ்டித்து வருகிறார்கள். இன்று வீட்டிலேயே எளிமையாக எப்படி பூஜை செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.
Also Read : கார்த்திகை மாதம்: இந்த ராசிக்காரருக்கு அடிக்கப்போகுது அதிர்ஷ்ட யோகம்!!
இந்த நாள் ஏன் முக்கியமானது?
தமிழ் மாதங்களில் கார்த்திகை மாதம் பெரும் புனிதத்தையும் தெய்வீக சக்தியையும் கொண்டதாக கருதப்படுகிறது. இந்த மாதம் சிவபெருமான், விநாயகர், முருகன், ஐயப்பன்
ஆகிய தெய்வங்களுக்கு மிகவும் உகந்த காலம். திங்கட்கிழமைகள் சிவனுக்கு விருப்பமான நாளாக இருப்பதால், அவை சோமவாரம் என அழைக்கப்படுகின்றன. கார்த்திகையின் முதல் சோமவாரம் என்பதால், இந்நாளை வீட்டிலே அனுஷ்டிக்கும்போதும் அற்புதமான ஆன்மீக அனுபவத்தைப் பெறலாம்.
வீட்டில் பூஜை செய்வதற்கான வழிமுறைகள்:
காலை தலைக்கு குளிக்க வேண்டும். இது சுத்தத்தையும் புனிதத்தையும் குறிக்கிறது. வீட்டில் உள்ள அகல் அல்லது செம்பு விளக்கில் நெய் ஊற்றி சிவபெருமானை நினைத்து தீபம் ஏற்ற வேண்டும். சிவபெருமானின் படத்தை அல்லது சிவலிங்கத்தை பூஜை செய்வதற்கு ஏற்ற மேஜை அல்லது மரப் பலகையில் வைக்கலாம். வில்வ இலைகள் கொண்டு அர்ச்சனை செய்தல் சிறப்பு. இல்லையென்றால் எந்த சுத்தமான பூவும் அர்ப்பணிக்கலாம். பால், கற்கண்டு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றில் எது கிடைக்கிறதோ அதை வைத்து நைவேத்தியம் செய்வது நல்லது. “ஓம் நமசிவாய” எனும் நாமம் அல்லது சிவபுராணம், சிவ துதி போன்றவற்றை சொல்லி பிராத்திக்கலாம்.
விரதம் இருப்பவர்கள் எப்படி அனுஷ்டிக்கலாம்?
சோமவார விரதத்தை கடைப்பிடிக்க விரும்புவோர் தங்களின் உடல் நிலைக்கேற்ப விரத முறையைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரு வேளை உணவு, மாலை வரை சிற்றுண்டி மட்டும்
என தங்களுக்கு ஏற்றபடி விரதம் மேற்கொள்ளலாம். முற்றிலும் உண்ணாமை அவசியமில்லை; மனத்தில் இருக்கும் பணி, பக்தியே முக்கியம். மாலை நேரத்தில் ஒரு சிறிய பூஜை மீண்டும் செய்து, காலை தயாரித்த நைவேத்தியத்தை இறுதியில் பிரசாதமாக உட்கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
Also Read : குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையா? சரி செய்யும் குலதெய்வ வழிபாடு – எப்படி செய்ய வேண்டும்?
முருகன் வழிபாடு சிறப்பு:
கார்த்திகை மாதம் முருகருக்கும் உகந்தது என்பதால், இந்த நாளில் முருகன் படத்திற்கு மலர் சமர்ப்பித்து, கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்றவற்றை சொல்லி வர கடவுளின் அருளும், மன அமைதியும் கிடைக்கும்.



