AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆன்மிக கதை தெரியுமா? முருகப்பெருமானின் தெய்வீக அவதாரத்தின் வரலாறு!

Kandha Sashti soorasamharam : கந்த சஷ்டி என்பது முருகப்பெருமானின் பிறப்பு, அசுர சக்திகளின் மீதான அவரது தெய்வீக வெற்றி மற்றும் தர்மத்தை நிலைநாட்டுதல் ஆகியவற்றைக் கொண்டாடும் ஒரு புனிதமான ஆறு நாள் பண்டிகையாகும். இந்தப் புராணக்கதை தீமையின் மீது நன்மையின் வெற்றியின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது.

கந்த சஷ்டி சூரசம்ஹாரம் ஆன்மிக கதை தெரியுமா? முருகப்பெருமானின் தெய்வீக அவதாரத்தின் வரலாறு!
கந்த சஷ்டி சூரசம்ஹாரம்
C Murugadoss
C Murugadoss | Published: 15 Nov 2026 08:01 AM IST

சூரசம்ஹார ஆன்மிக கதையின்படி, காசிப முனிவருக்கும், மாயை என்ற அசுரப் பெண்ணுக்கும் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் என மூன்று மகன்கள் பிறந்தனர். இவர்களில் மூத்தவனான சூரபத்மன், உலகை ஆள வேண்டும் என்ற பேராசையால் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், என்ன வரம் வேண்டும் எனக் கேட்க, சூரபத்மன் சாகா வரம் கேட்டான். பிறந்தவர்கள் ஒருநாள் மடிந்தே தீர வேண்டும் என்பதால், சிவபெருமான் வேறொரு வரத்தைக் கேட்கச் சொன்னார். அதற்கு சூரபத்மன், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத ஒரு மகனால் மட்டுமே தனக்கு அழிவு வர வேண்டும் என்று சாதுர்யமாக வரம் கேட்டான். மேலும், 108 யுகங்கள் உயிர்வாழவும், 1008 அண்டங்களை ஆளவும், இந்திர ஞாலம் என்ற தேரையும் வரமாகப் பெற்றான்.

இந்த வரத்தைப் பெற்றதும், அசுர சகோதரர்கள் ஆணவம் கொண்டு, இந்திரலோகம், பூலோகம் உட்பட அனைத்து உலகங்களையும் கைப்பற்றி, தேவர்களையும் முனிவர்களையும் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினர். இந்திரனின் மகன் ஜெயந்தனை சிறையிலிட்டு சித்திரவதை செய்தனர். அசுரர்களின் அட்டூழியங்கள் எல்லை மீறவே, தேவர்கள் அனைவரும் கைலாயம் சென்று சிவபெருமானிடம் தங்களைக் காக்குமாறு முறையிட்டனர்.

சூரபத்மன் பெற்ற வரத்துக்கு தீர்வு

தேவர்களின் துயரைக் களையத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், சூரபத்மன் பெற்ற வரத்தின்படி, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத ஒருவரால் மட்டுமே அவனுக்கு அழிவு நேரிட முடியும் என்பதால், தன் சக்தியாலேயே அவனுக்கு முடிவு கட்டத் தீர்மானித்தார். சிவபெருமான் தனது ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களோடு, சூட்சும முகமான அதோமுகம் என்ற ஆறாவது முகத்தையும் சேர்த்து, தனது ஆறு முகங்களின் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு மகா தீப்பிழம்புகளை வெளிப்படுத்தினார். இந்த அக்னிப் பிழம்புகளின் வெப்பத்தைத் தாங்க இயலாத வாயு பகவானும் அக்னி பகவானும் அவற்றைக் கொண்டு சரவணப் பொய்கையில் சேர்த்தனர். அங்கே, அந்த ஆறு தீப்பிழம்புகளும் தாமரை மலர்களில் ஆறு அழகான குழந்தைகளாக மாறின. கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் அந்தக் குழந்தைகளை அன்புடன் வளர்த்தார்கள். ஒருநாள், பார்வதி தேவி அந்தக் குழந்தைகளை ஒன்றாக அணைத்தபோது, அவர்கள் ஓர் உடலும், ஆறு முகங்களும், பன்னிரண்டு கைகளும் கொண்ட ஸ்ரீ பாலமுருகனாக வடிவெடுத்தனர்.

முருகப்பெருமான் வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டியதும், தேவர்களைக் காக்கவும், அசுரர்களை அழிக்கவும் புறப்படத் தயாரானார். சிவபெருமான் தனது அம்சமான நவ வீரர்களையும், பெருமளவிலான பூதப் படைகளையும் முருகனுக்குத் துணையாக அனுப்பினார். புறப்படும் முன், அன்னை பராசக்தி தனது பேராற்றல் அனைத்தையும் ஒருமுகப்படுத்தி, ஞானவேல் எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தை முருகனுக்கு வழங்கினாள்.

யுத்தம் தொடங்கும் முன், தர்மத்தின்படி முருகப்பெருமான் தனது தளபதியான வீரவாகுத் தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பினார். சிறைப்பிடித்த தேவர்களை விடுதலை செய்துவிட்டு, சரணடைய வேண்டும், இல்லையேல் போர் நிச்சயம் என்று எச்சரித்தார். ஆனால், பேராசை மற்றும் ஆணவம் கொண்ட சூரபத்மன் அந்தத் தூதை எகத்தாளமாக நிராகரித்து, போருக்குத் தயாரானான்.

திருச்செந்தூர் போர்

முருகப்பெருமான் தனது படைகளுடன் திருச்செந்தூர் கடற்கரையில் முகாமிட்டு போரைத் தொடங்கினார். ஐப்பசி மாத வளர்பிறை பிரதமை திதி முதல், சஷ்டி திதி வரையிலான ஆறு நாட்கள் இப்போர் மிகக் கடுமையாக நடைபெற்றது. முதல் சில நாட்களில் முருகனின் பூதப் படைகளும், நவ வீரர்களும் அசுரப் படைகளைத் துவம்சம் செய்தனர். முருகப்பெருமான் சூரபத்மனின் தம்பிகளான தாரகாசுரனையும், சிங்கமுகனையும் அடுத்தடுத்து வதம் செய்தார். இறுதியாக, ஆறாம் நாள், அதாவது சஷ்டி திதி அன்று, சூரபத்மன் முருகனுடன் நேருக்கு நேர் மோதினான்.

தன் தம்பிகளின் மறைவால் கோபமடைந்த அவன், தன் அசுர மாயாஜாலங்களால் கடலாகவும், பெரிய மலையாகவும் மாறி, உலகையே இருளாக்கி, பல வடிவங்களில் மறைந்து தாக்கினான். ஆனால் முருகப்பெருமான் தன் ஞானவேலை ஏவி, அவனது மாயைகளை ஒவ்வொன்றாகத் தகர்த்தார். இறுதியாக, தப்பிக்க வழியற்ற சூரபத்மன் ஒரு பிரம்மாண்ட மாமரமாக மாறி நின்றான். முருகப்பெருமான் தனது வேலைச் செலுத்த, அது அந்த மாமரத்தை நடுப்பகுதியாக இரு கூறாகப் பிளந்தது. இங்கேதான் முருகனின் உன்னதமான கருணை வெளிப்படுகிறது. வேல் பாய்ந்து பிளக்கப்பட்ட சூரபத்மன், அந்தப் புனிதமான தருணத்தில் தனது ஆணவம் நீங்கி, தன் தவறை உணர்ந்து, முருகனின் பாதங்களில் சரணடைந்தான். பொதுவாக அசுரர்களை வதம் செய்யும் தெய்வங்கள் அவர்களை முழுமையாக அழிப்பார்கள். ஆனால் கருணைக் கடலான முருகப்பெருமான், அவனைக் கொல்லாமல் அவனுக்கு வாழ்வளித்தார். அவனது உடலின் ஒரு பாதியை தனது வாகனமான மயிலாகவும், மறுபாதியை தனது வெற்றிக் கொடியான சேவலாகவும் மாற்றி, தன்னுடன் வைத்துக்கொண்டு, அவனுக்கு முக்தி அளித்தார்.

தீமையிலும் இருந்த நல்லதை ஏற்றுக்கொண்டு அருள் புரிந்தார் முருகப்பெருமான். சூரபத்மனை முருகன் வென்ற இந்த ஆறாம் நாள் திருநாளே நாம் அனைவரும் கொண்டாடும் சூரசம்ஹாரம் ஆகும். மறுநாள், தேவேந்திரன் தனது மகளான தெய்வானையை முருகனுக்கு திருமணம் செய்து வைத்தார். இதுவே திருக்கல்யாணம் எனப்படுகிறது.

Follow Us