தீபாவளி லட்சுமி வழிபாடு… எந்த நிற ஆடை அணியக்கூடாது?
Diwali Lakshmi Puja: தீபாவளி லட்சுமி பூஜையின்போது சரியான வண்ண ஆடைகளை அணிவது லட்சுமி தேவியின் அருளை ஈர்க்கும். மஞ்சள், சிவப்பு, வெள்ளை போன்ற சுப நிறங்கள் செல்வம், அமைதி, நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். சுப நிறங்களை அணிந்து லட்சுமி தேவியின் ஆசீர்வாதம் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை என்றாலே நமக்குள் இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். இந்து மதத்தில் மிக முக்கியமான பண்டிகையாக பார்க்கப்பட்டாலும் அது அனைவருக்குமான பண்டிகையாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 20, திங்கட்கிழமை வருகிறது. அன்றைய நாளில் அனைவரும் தீபாவளியைக் புத்தாடை அணிந்து, இனிப்புகளை பகிர்ந்து, மன மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள். இதனிடையே தீபாவளி என்பது வீட்டை சுத்தம் செய்வது மட்டுமல்ல, விளக்குகளால் அழகாக அலங்கரிப்பதும் ஆகும். அன்றைய நாளில், லட்சுமி தேவியை வழிபட வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இருப்பினும், லட்சுமி தேவி பூஜையின் போது பின்பற்ற வேண்டிய பல விதிகள் பற்றி நாம் கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.
குறிப்பாக தீபாவளியின் போது, லட்சுமி பூஜையின் போது அணியும் வண்ணங்கள் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. இந்த நிற ஆடைகளை அணிந்து இந்த நாளில் பூஜை செய்வது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று கூறப்படுகிறது. அதைப் பற்றி காணலாம்.
என்ன வண்ணம் அணியலாம்?
தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்வது மிகவும் நல்லது. இந்த நாளில் பெண்கள் கண்டிப்பாக மஞ்சள் நிற ஆடைகளை அணிய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. மஞ்சள் நிறம் வியாழன் கிரகத்தைக் குறிக்கிறது. எனவே, அமைதி மற்றும் செல்வத்தை குறிக்கும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து பூஜை செய்வது லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தரும் என்று கூறப்படுகிறது.
Also Read: லட்சுமி தேவி ஆசீர்வாதம் வேண்டுமா? – இரவில் இதெல்லாம் செய்யுங்க!
இதேபோல், தீபாவளியின் போது லட்சுமி பூஜை செய்யும்போது சிவப்பு நிற ஆடைகளை அணிவது மிகவும் மங்களகரமானது என சொல்லப்படுகிறது. சிவப்பு என்பது வலிமை, தைரியம் மற்றும் அன்பின் நிறம், மேலும் இது செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையது. எனவே, தீபாவளியின் போது சிவப்பு நிற ஆடைகளை அணிவது செல்வத்தைத் தரும் என்றும் கூறப்படுகிறது.
வெள்ளை ஆடைகள் அமைதியின் சின்னமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், தீபாவளி பண்டிகை நாளில் வெள்ளை ஆடைகளை அணிந்து லட்சுமி பூஜை செய்வது மங்களகரமானது என்று கூறப்படுகிறது. வெள்ளை ஆடைகளை அணிவது லட்சுமியின் அருளை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது
Also Read: தீபாவளி நாளில் எண்ணெய் குளியல்.. நல்ல நேரம் எது?
இந்த நிற ஆடைகள் வேண்டாம்
தீபாவளி நாளில் லட்சுமி பூஜையின் போது, எந்த சூழ்நிலையிலும் நீல நிற ஆடைகளை அணியக்கூடாது என்று கூறப்படுகிறது. பூஜை செய்யும் போது இந்த நிற ஆடைகளை அணிவது நேர்மறை அதிர்வுகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், வீட்டில் குழப்பத்தையும் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.
அதேபோல், எந்த சூழ்நிலையிலும் கருப்பு ஆடைகளை அணியக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கருப்பு சனி கடவுளுடன் தொடர்புடையது என்பதால், இந்த நிறத்தை அணிந்து வழிபடுவது அசுபமானது, ஏனெனில் இது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற பல பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
அதுமட்டுமல்லாமல் தீபாவளிக்கு இறைவழிபாட்டின்போது இந்த ஆடை அணியாமல் பிற நேரங்களில் நீங்கள் எந்த வித நிற ஆடைகள் வேண்டுமானாலும் அணியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
(இறை மற்றும் ஆன்மிக அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)