ஐப்பசி அமாவாசை நாளில் கேதார கௌரி விரதம்.. இருப்பது எப்படி?
Aippasi Amavasya: ஐப்பசி அமாவாசை நாளில் அனுசரிக்கப்படும் கேதார கௌரி விரதம், கணவன் மனைவி உறவில் ஒற்றுமையை மேம்படுத்துகிறது. பார்வதி தேவி சிவபெருமானுடன் ஒன்றிணைய இந்த விரதத்தைக் கடைப்பிடித்து அர்த்தநாரீஸ்வரர் நிலையைப் பெற்றார். இல்வாழ்க்கை செழிக்கவும், தீர்க்க சுமங்கலியாக வாழவும் பெண்கள் இதை மேற்கொள்கின்றனர்.

அமாவாசை என்பது இந்து மத சாஸ்திரத்தில் முன்னோர்களை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. அப்படியான நிலையில் ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசையை கணக்கில் கொண்டு தான் தீபாவளி பண்டிகையானது கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் விரதம் கடைபிடிப்பவர்கள் உள்ளனர். அந்த வகையில் ஐப்பசி மாதம் அமாவாசையானது கேதார கௌரி விரதமாக கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கான மிக முக்கிய விரதங்களில் இதுவும் ஒன்றாகும். 2025 ஆம் ஆண்டு அமாவாசை அக்டோபர் 21ம் தேதி செவ்வாய்கிழமை வருகிறது. அதனைப் பற்றி நாம் காணலாம்.
கேதார கௌரி விரதம்
கணவன் மற்றும் மனைவியின் உறவு சிறப்பாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் இந்த கேதார கௌரி விரதத்தை கடைபிடிக்கிறார்கள். சிவபெருமான் குறித்து பார்வதி தேவி மேற்கொண்ட விரதங்களில் இது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காரணம் இந்த விரதத்தின் பயனால் சிவபெருமானின் பாதியாக பார்வதி தேவி இணைந்து அர்த்தநாரீஸ்வரர், மாதொருபாகன் என்ற திருநாமம் பெற்றார்.
Also Read: சிவனின் ஆசி கிடைக்கணுமா?; 12 ராசிக்காரர்களும் செய்ய வேண்டிய விஷயம்!
அதனால் தான் பார்வதி தேவி கேட்டு அனைத்தையும் பெற்று தந்த இருந்த விரதத்தை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் கடைபிடிக்கின்றனர். சிவனும் சக்தியும் இணைந்து இருந்தால் மட்டுமே இந்த உலகம் இயங்கும் என்பதை அடிப்படையாகக் கொண்டு இல்வாழ்வில் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே இவ்வாழ்க்கை நிலைபெறும் என்பது ஐதீகமாகும்.
கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
புரட்டாசி மாதத்தின் தசமி தொடங்கி ஐப்பசி மாதத்தின் அமாவாசை வரை 21 நாட்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் இருக்கிறார்கள். தற்கால காலகட்டத்தில் விரத முறைகளின் காலம் என்பது சுருங்கி வருகிறது. அதற்கு ஏற்ப 9, 7, 5,3 அல்லது அமாவாசை நாளில் மட்டும் விரதம் இருப்பவர்கள் இருக்கிறார்கள்.
வீடுகளிலும் கோயில்களிலும் கேதார கௌரி வழிபாடு என்பது இந்நாளில் நடைபெறுகிறது. இந்த இறை வழிபாட்டில் பிரசாதமாக அதிரசம் படைக்கப்படுகிறது. இந்த வழிபாட்டில் நோன்பு கயிறு வைத்து வழிபட்டு இறுதியில் வீட்டில் கணவன் மனைவி கையில் கட்டினால் இல்வாழ்க்கை சிறப்புற இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த விரதத்தை மேற்கொள்ளும் பெண்கள் சகல சௌபாக்கியங்களும் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ்ந்து வீட்டை சிறப்பாக நிர்வாகம் செய்வார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
Also Read: Sani Pradhosm: சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?
ஐப்பசி மாதத்தில் சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். ஜோதிடத்தில் சூரியனை தந்தை என்றும், சந்திரனை அன்னை எனவும் அழைக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சூரியனுக்கு உரிய பிரத்யதி தேவதை பரமேஸ்வரனாவர். சந்திரனுக்குரிய பிரத்யதி தேவதை கௌரியாகும். துலாம் ராசியில் பலமிழந்து நீசம் பெறும் சூரியன் தாயான சந்திரனோட இணையும் காலம்தான் ஐப்பசி அமாவாசை. இப்படியாக இந்த கேதார கௌரி விரதம் உருவானது.
இந்த விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் புனித நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய நாளில் ஒருவேளை உணவு மட்டும் எடுக்க வேண்டும். உடல் நலம் சரியில்லாதவர்கள் பால், பழம் உண்டு விரதம் கடைபிடிக்கலாம். மாலையில் வீட்டில் மற்றும் அருகிலுள்ள கோயிலில் நடைபெறும் கேதார கௌரி விரத வழிபாட்டில் கலந்து கொண்டு பலன் பெறலாம்.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)