சித்ரா பௌர்ணமி 2026: பாவநிவர்த்தி தரும் புனித பௌர்ணமி நாள்!
Chithra Pournami 2026: சித்ரா பௌர்ணமி தமிழ் புத்தாண்டுக்குப் பிறகு வரும் முதல் பௌர்ணமி என்பதால் ஆன்மிக ரீதியாக முக்கியமான நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சூரியன் மேஷ ராசியிலும், சந்திரன் துலாம் ராசியிலும் இருப்பதால் கிரக நிலைகள் விசேஷமாக அமைகின்றன. சித்திரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுவதால் பாவ நிவர்த்திக்கான வழிபாடுகள் செய்யப்படுகிறது.
சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமி, தமிழ் வருடப்பிறப்புக்குப் பிறகு வரும் முதல் பௌர்ணமி என்பதால் ஆன்மிக ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இந்த நாள் பக்தர்களுக்கு புதுமையான தொடக்கத்தை குறிக்கும் தினமாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினம் ஆன்மீக சக்தி அதிகரிக்கும் நாளாக கருதப்பட்டாலும், சித்திரை மாத பௌர்ணமி தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. இது ஜோதிட ரீதியாகவும் சிறப்புடையதாக கருதப்படுகிறது.
கிரக நிலைகளின் தனித்துவ அமைப்பு
சித்ரா பௌர்ணமி நாளில் கிரகங்களின் அமைப்பு மிகவும் விசேஷமானதாக இருக்கும். இந்த நாளில் சூரியன் மேஷ ராசியில் உச்ச நிலையில் இருப்பதுடன், சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மேலும், சித்திரை நட்சத்திரத்துடன் சந்திரன் இணையும் போது பௌர்ணமி திதி உருவாகிறது. இந்த அமைப்பு ஆன்மிக சக்தி அதிகரிக்கும் நேரமாக ஜோதிடத்தில் கருதப்படுகிறது. இதனால் இந்த நாளில் செய்யப்படும் வழிபாடுகள் பலன் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
சித்திரகுப்தர் பிறந்த நாளின் புராண பின்னணி
புராணக் குறிப்புகளின்படி, சித்ரா பௌர்ணமி நாளில்தான் சித்திரகுப்தர் அவதரித்தார் என்று கூறப்படுகிறது. யம தர்மராஜாவின் உதவியாளராக மனிதர்களின் பாவ–புண்ணிய கணக்கை பதிவு செய்வது இவரின் கடமையாகும். சில புராணங்களில், ஓவியத்தில் இருந்து உயிர் பெற்று உருவானவராகவும் சித்திரகுப்தர் குறிப்பிடப்படுகிறார். இதனால் இந்த நாள் பாவ நிவர்த்தி மற்றும் மனசுத்தி பெறும் நாளாக பக்தர்கள் கருதுகின்றனர்.
Also Read: சித்ரா பௌர்ணமி 2026.. வீட்டிலேயே செய்ய வேண்டிய எளிய மற்றும் சக்திவாய்ந்த வழிபாடு!!
வழிபாடுகள் மற்றும் ஆன்மிக அனுஷ்டானங்கள்
சித்ரா பௌர்ணமி அன்று கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வசந்த உற்சவங்கள் நடைபெறும். இந்த நாளில் சிவபெருமானுக்கு அபிஷேகம், அம்பாள் மற்றும் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்வது வழக்கம். மேலும், சித்திரகுப்தர் பூஜை செய்து பாவ நிவர்த்தி வேண்டுவது சிறப்பாகக் கருதப்படுகிறது. குலதெய்வ வழிபாடு செய்வதும், கோவில் திருவிழாக்களில் பங்கேற்பதும் இந்த நாளில் முக்கியமான ஆன்மிக செயல்களாக பார்க்கப்படுகின்றன.
சித்ரா பௌர்ணமி 2026 – தேதி மற்றும் நேரம்
2026ஆம் ஆண்டில் சித்ரா பௌர்ணமி மே 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. பௌர்ணமி திதி ஏப்ரல் 30ஆம் தேதி இரவு 09:51 மணிக்கு தொடங்கி, மே 1ஆம் தேதி இரவு 11:07 மணி வரை நீடிக்கும். சூரிய உதய நேரத்தில் நிலவும் திதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. மேலும், வெள்ளிக்கிழமை வரும் பௌர்ணமி அம்பாளுக்கு மிகவும் விசேஷமானதாக கருதப்படுவதால், இந்த ஆண்டின் சித்ரா பௌர்ணமி பக்தர்களுக்கு கூடுதல் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.