ராம நவமி: தர்மத்தை கற்றுத்தரும் தெய்வ அவதாரம்..!
Rama Navami: தசரத மன்னன் நடத்திய புத்திர காமேஷ்டி யாகத்தின் பலனாக, தர்மத்தை நிலைநாட்டத் திருமால் ராமனாக அவதரித்தார். சாதாரண மனிதனாக வாழ்ந்து கடமை மற்றும் ஒழுக்கத்தின் மேன்மையை உலகுக்கு உணர்த்தியதே ராமாவதாரத்தின் தனிச்சிறப்பு. ராம நவமி நாளில் விரதமிருந்து ராமரை வழிபடுவதும், அவர் நாமத்தை ஜபிப்பதும் வாழ்வில் நற்பலன்களையும் அமைதியையும் வாரி வழங்கும்.
அறநெறி தவறாத வாழ்விற்குச் சான்றாக விளங்கும் ராமாவதாரம், திருமால் மனித உருவெடுத்து தர்மத்தை நிலைநாட்டிய உன்னத நிகழ்வாகும். அயோத்தியை ஆண்ட தசரத மன்னனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாத குறையைத் தீர்க்க, ரிஷ்ய சிங்க முனிவரின் வழிகாட்டுதலுடன் ‘புத்திர காமேஷ்டி யாகம்’ நடத்தப்பட்டது. அந்த யாகத்தீயில் தோன்றிய தெய்வீகப் பாயசத்தின் பயனாகப் பிறந்த ராமபிரான், தன் இறை சக்திகளைத் துறந்து ஒரு சாதாரண மனிதனாகப் பெற்றோர்க்கு நற்பிள்ளையாய் வாழ்ந்து காட்டினார். இந்தத் திருநாளைக் குறிக்கும் ராம நவமி அன்று விரதமிருந்து ராம நாமத்தை ஜபிப்பது, வாழ்வில் ஒழுக்கத்தையும் மன அமைதியையும் தருவதோடு நன்மைகளையும் வாரி வழங்கும் என்பது பக்தர்களின் ஆழமான நம்பிக்கையாகும்.
ராம அவதாரத்தின் சிறப்பு
நன்மைகளை வாரி வழங்கும் ராம நவமி திருநாள், இந்து சமயத்தில் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது. திருமாலின் அவதாரங்களில் சிறப்புமிக்கதாகவும், அறம் நிறைத்ததாகவும் உள்ளது ராமாவதாரம். இறைவன் தனது தெய்வீக சக்திகளைத் துறந்து சாதாரண மனிதனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் இது. இதன் மூலம் மனித வாழ்வில் கடமைகள், ஒழுக்கம் மற்றும் தர்மம் ஆகியவற்றின் முக்கியத்துவம் எடுத்துக்காட்டப்படுகிறது.
தசரத மன்னனின் வருத்தம்
அயோத்தி தேசத்தை தசரதன் என்ற மன்னர் ஆட்சி செய்து வந்தார். திசைகளை எண் திசைகளாக பிரிப்பார்கள். இந்த எண் திசைகளோடு, கீழ் திசை (பாதாளம்), மேல் திசையையும் (ஆகாயம்) சேர்ந்து 10 திசைகளிலும் தன்னுடைய ரதத்தை திறம்பட செலுத்தக்கூடியவர் என்பதால் ‘தசரதன்’ என்ற பெயர் வந்தது. அவருக்கு கோசலை (கௌசல்யா), சுமித்ரை, கைகேயி என்று மூன்று மனைவியர். இருப்பினும் தனக்கு அடுத்து நாட்டை ஆள்வதற்கு பிள்ளை இல்லாததால் தசரதர் பெரும் கவலை கொண்டார்.
Also Read: திருமண தடை நீக்கும் திருத்தலம்: நென்மேலி அபிமுக்தீஸ்வரர் கோவிலின் சிறப்பு
புத்திர காமேஷ்டி யாகத்தின் அதிசயம்
குழந்தைப்பேறு கிடைக்க வேண்டி ரிஷ்ய சிங்கர் என்ற முனிவரை அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகம் நடத்தும்படி கூறினார். அதன்படியே ரிஷ்ய சிங்கரும் யாகம் செய்தார். யாக அக்னியில் இருந்து, ஒளி பொருத்திய ஒரு உருவம் தோன்றியது. அதன் கரங்களில் தங்க பாத்திரமும், அதனுள் பால் பாயசமும் இருந்தது. அந்த உருவம் தசரதரை நோக்கி “இந்த பாயசத்தை உனது மனைவிகளுக்கு பிரித்துக் கொடு. அவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறப்பார்கள்” எனக் கூறி மறைந்தது. இதுவே ராமர் உள்ளிட்ட நால்வர் பிறப்பிற்கு காரணமான தெய்வீக நிகழ்வாக கருதப்படுகிறது.
ராம நவமியின் ஆன்மிக முக்கியத்துவம்
இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் ராம நவமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருந்து, ராமர் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து, தர்மம் மற்றும் ஒழுக்கத்தை வாழ்க்கையில் கடைப்பிடிக்க உறுதிமொழி எடுக்கின்றனர். ராம நாமம் ஜபிப்பது மன அமைதியையும் ஆன்மிக வளத்தையும் அளிக்கும் என நம்பப்படுகிறது.