தூங்கி எழுந்ததும் இதெல்லாம் பார்க்காதீங்க.. அந்த நாளே விளங்காது!
காலை எழுந்தவுடன் படுக்கையில் நாம் செய்யும் சில விஷயங்கள் மன அழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். பாசிட்டிவ் எண்ணங்களுடன் நாளைத் தொடங்க, இவற்றைத் தவிர்ப்பது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. நேர்மறைச் சூழல், நிறைந்த பாத்திரங்கள், சுத்தமான வீடு ஆகியவை நல்ல நாளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

நம்முடைய வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மிகவும் சிறப்பான முறையில் அமைய வேண்டும் என்ற எண்ணம் நம் அனைவருக்குமே இருக்கும். அப்படியான நாள் சற்று மாறி அமைந்தால் வாழ்க்கையே இருண்டு விட்டதாக நினைக்க தோன்றி விடும். வாழ்க்கையில் எப்போதும் பாசிட்டிவாக இருக்க வேண்டும் என்றால் அகம், புறம் ஆகிய இரண்டும் நேர்மறையான எண்ணங்களால் நிறைந்திருக்க வேண்டும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் தினமும் தூங்கி எழுந்து தான் அந்த நாளானது தொடங்குகிறது. அந்த தொடக்கம் சரியாக இருந்தால் மட்டுமே அந்த நாளும் சரியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதனை சாஸ்திரங்களும் உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் காலையில் எழுந்தவுடன் நாம் பார்க்காமல் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
என்னென்ன விஷயத்தை தவிர்க்க வேண்டும்?
மின்னணு பொருட்கள்
பலருக்கும் காலையில் எழுந்தவுடன் செல்போன், லேப்டாப், டேப்லெட், அல்லது டிவி பார்க்கும் பழக்கம் இருக்கும். அதாவது படுக்கையில் இருந்து எழாமலேயே இதனை பார்ப்பவர்களாக இருப்பார்கள். நாம் தூங்கும் நேரத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை அறிய இதனை செய்வார்கள் என்றாலும் இது மன அழுத்தம், பதட்டம் ஆகியவற்றை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மேலும் அன்றைய நாளை நாம் செயல்பட விடாமல் தடுக்கக்கூடிய சக்தியை கொடுக்கும் எனவும் நம்பப்படுகிறது.
Also Read: தவறான திசையில் நின்று சமைத்தால் இவ்வளவு பிரச்னையா?
வெற்றுப் பாத்திரங்கள்
வீட்டில் காலியாக இருக்கும் பானைகள் அல்லது பாத்திரங்கள் ஆகியவை வாழ்க்கையில் வறுமையையும் உணவு பற்றாக்குறையையும் உண்டாக்கும் என நம்பப்படுகிறது. எனவே காலியாக இருக்கும் பாத்திரங்களை கவிழ்த்து வையுங்கள். அல்லது மூடியிட்டு வையுங்கள். காலியாக இருப்பது ஆழ்மனதில் பல்வேறு எண்ணங்களை உருவாக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் பாத்திரங்கள் நிறைந்த சிங்க் மன அழுத்தத்தையும் எரிச்சலையும் ஏற்படுத்தும். எனவே முடிந்தவரை இரவே பாத்திரங்களை கழுவி வையுங்கள்.
குப்பை
வீட்டில் குப்பை அல்லது மண் தேங்குவது என்பது இயல்பான ஒன்று என்றாலும் அதனை தினமும் அல்லது குறைந்தபட்சம் இரு நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து வைக்க வேண்டும். குப்பை நிறைந்த இடத்தை பார்ப்பது ஒழுங்கற்ற மனநிலை குழப்பமான சூழல் மற்றும் மன உளைச்சலை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. ஆன்மீக ரீதியாக இது எதிர்மறை சக்தியை வீட்டுக்குள் இழுத்து வரும் எனவும் நம்பப்படுகிறது.
Also Read: வீட்டுக்கான வாஸ்து.. இந்த தப்பை செய்யாதீங்க.. அப்புறம் நஷ்டம் தான்!
எதிர்மறை நபர்கள்
நம்முடைய வீடுகளில் அல்லது சுற்றுப்புறத்தில் அதிகாலையில் ஏதேனும் பிரச்சனைகள் வாக்குவாதம் எழலாம். இதனை காதில் கேட்டபடி எழுந்திருப்பது அன்றைய நாளை நீர்த்துப் போக செய்யும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. அதேபோல் விபத்து, மரணம் போன்ற செய்திகளை தயவுசெய்து ஒரு நாளின் தொடக்கத்தில் பார்ப்பதை கேட்பதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். இது மிகப்பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடியது.
மேலும் வீட்டில் இருக்கும் இறந்தவர்களின் படங்கள், கிழிந்த புகைப்படங்கள், உடைந்த பொருள்கள் ஆகியவற்றை காலையில் கண்விழித்ததும் பார்ப்பதை தவிருங்கள். இது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)