Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மகள் விவகாரம்.. தந்தை செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?

சாணக்கிய நீதியின்படி, தந்தையர் தங்கள் மகள்களின் வாழ்க்கையில் தலையிடாமல், சுதந்திரம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. பாகுபாடு காட்டாமல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான அன்பு, பாதுகாப்பு வழங்க வேண்டும். மகள்களின் கல்விக்கும், எதிர்கால ஆதரவுக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகள் விவகாரம்.. தந்தை செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன?
சாணக்ய நீதி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 01 Jul 2025 14:04 PM

இந்த உலகில் குடும்ப உறவுகளுக்குள் இருக்கும் பிணைப்புக்கு விலையே கிடையாது. மற்ற எதுவாக இருந்தாலும் நம்மால் வாங்கி விட கூடிய சூழலுக்கு வந்து விட்டோம். ஆனால் பெற்றோர்களின் அன்பு என்பது இன்றியமையாதது. இதில் தந்தை மற்றும் தாயின் பிணைப்பு குழந்தைகளிடத்தில் வேறுபடும். கண்டிக்கும் தந்தையாக இருந்தால் அரவணைக்கும் தாய் இருப்பார். இதனால் குழந்தைகள் இருவரிடத்திலும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறையாத அதே நேரத்திலும் மாறாத அன்பை கொண்டிருக்கிறார்கள். அதேசமயம் என்னதான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை கண்ணின் இமைபோல காத்தாலும், அன்பு காட்டினாலும் எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் வரையறுக்க வேண்டும் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் வாழ்க்கையின் நன்னெறிகளை போதித்த மகா தத்துவ ஞானி ஆச்சார்ய சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் மகள் விஷயத்தில் தந்தை செய்யக்கூடாத விஷயங்கள் பற்றி பேசியுள்ளார். அதனைப் பற்றிக் காணலாம்.

ஒவ்வொரு முடிவிலும் தலையிடாதீர்கள்

ஒவ்வொரு நபருக்கும் தனது வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்க சுதந்திரம் இருக்கிறது. அது மகள் அல்லது மகன் விஷயத்திலும் பொருந்தும். எனவே தந்தை அவர்கள் தங்களது வாழ்க்கையைப் பற்றிய முடிவுகளை எடுக்க வாய்ப்பு வழங்க வேண்டும். எல்லாவற்றிலும் நீங்கள் தலையிட்டால் உங்களுடைய உறவில் விரிசல் விழலாம். கருத்து வேறுபாடுகள் எழலாம். தன்னம்பிக்கை இழக்கும் சூழல் உண்டாகும். அது கல்வி, வேலை அல்லது திருமணம் என எதுவாக இருந்தாலும், மகளின் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அறிவார்ந்த தந்தையாக தனது குழந்தைகளுக்கு எது சரி, எது தவறு என்று சொல்ல வேண்டும். ஆனால் முடிவை அவர்களிடம் விட்டுவிட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.

பாகுபாடு காட்டாதீர்கள்

சாணக்கிய நீதியைப் பொறுத்தவரை வீட்டில் இரண்டு குழந்தைகள் இருந்தால் அவர்களிடையே எந்தவிதமான பாகுபாடும் பார்க்கக்கூடாது. பல வீடுகளில் ஒரு தந்தையானவர் தனது மகளைப் புறக்கணித்து, தனது மகனுக்கு அதிக உரிமைகளையும் அன்பையும் வழங்குவது உண்டு. மகன் தான் அடுத்த வாரிசு என சொல்லி அப்பெண்ணுக்கு மனதில் தாழ்வு மனப்பான்மையை உருவாக்குவார்கள். அப்படி செய்யாமல் ஒரு தந்தையாக அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்த வேண்டும்.அவர்களுக்கு சமமான அன்பு, மரியாதை மற்றும் வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது 

ஆச்சார்ய சாணக்கியரின் அறிவுரையின்படி, குடும்பத்தின் பாதுகாப்பில் இருக்கும் அக்கறைக்கும் ஈடாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தந்தைக்கு முன்னுரிமையாக இருக்க வேண்டும். ஒரு மகளுக்கு வீட்டிலும் அல்லது வெளியிலும் பாதுகாப்பான சூழல் இருக்க வேண்டும். ஒரு தந்தை அதற்கான தற்காப்பு நுட்பங்களை தனது மகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும், மகள் என்ன செய்கிறார். அவளைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதேசமயம் கண்டிப்புடன் இல்லாமல் மகள் சுதந்திரமாக வளரக்கூடிய சூழலை வழங்க வேண்டும்.

படிப்பும் முக்கியம்

பல வீடுகளில் பெண் குழந்தைகள் என்ன படித்து ஆகப் போகிறது என்ற நினைப்பில் பலரும் பள்ளிக்கல்வியுடன் கனவை புதைக்கிறார்கள். அப்படியிருக்கும் பட்சத்தில்  மகனின் கல்வி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மகளின் கல்விக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். மகளின் கல்வி அவளின் பிற்காலத்தில் எந்த நிலையிலும் கைகொடுக்கும். ஒரு தந்தையாக  மகளின் ஆர்வங்களைப் புரிந்துகொண்டு அவள் முன்னேற வாய்ப்புகளை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

ஆதரவு அவசியம் 

கல்யாணம் செய்துக் கொடுத்தால், படிக்க வைத்து விட்டால் கடமை முடிந்து விட்டது. மகள் இனிமேல் அவளைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என ஒரு தந்தையாக சொல்லக்கூடாது. மகளுக்கு காலம் முழுக்க நிதி, ஆதரவு, அன்பு என அனைத்தையும் தந்தை வழங்கிட வேண்டும். இது மிகப்பெரிய உணர்ச்சிப்பூர்வமான தருணமாக பார்க்கப்படுகிறது.

(சாணக்ய நீதி அடிப்படையில் இக்கட்டுரையில் எழுதப்பட்டுள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் எந்த விதத்திலும் பொறுப்பேற்காது)