Aadi Pournami: ஆடி பௌர்ணமியில் பெண்கள் விரதம் இருக்கும் வழிமுறைகள்!
2025 ஆம் ஆண்டு ஆடி பௌர்ணமி ஆகஸ்ட் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதிகாலையில் நீராடி, கோலமிட்டு, விளக்கேற்றி வழிபாடு செய்யலாம். முழு உபவாசம் அல்லது பழம், பால் உண்டு விரதம் இருக்கலாம். அதனைப் பற்றி பார்க்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி திதியானது இறை வழிபாட்டிற்கென முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் ஆன்மிக மாதமாக ஆடியில் வரும் பௌர்ணமி கூடுதல் சிறப்பை கொண்டுள்ளது. இந்நாளில் நாம் விரதமிருந்து வழிபட்டால் கிடைக்கும் பலன்கள் அளவில்லாதது என சொல்லப்படுகிறது. குறிப்பாக பெண் தெய்வங்கள் சக்தி, ஆண் தெய்வங்களை விட அதிகமாக இருக்கும் ஆடி மாதத்தில் பெண்கள் விரதமிருப்பது இரட்டிப்பு பலன்களை அளிக்கும் என நம்பப்படுகிறது. அப்படியான ஆடி மாத பௌர்ணமியில் பெண்கள் விரதமிருக்கும் வழிமுறைகள் பற்றிக் காணலாம். 2025ம் ஆண்டு ஆடி பௌர்ணமியானது ஆகஸ்ட் 8ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அன்று மதியம் 2.52 மணி தொடங்கி மறுநாள் (ஆகஸ்ட் 9) மதியம் 2.26 மணி வரை பௌர்ணமி திதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரதம் இருக்கும் வழிமுறைகள்
ஆடி மாத பௌர்ணமி நாளில் அதிகாலையில் எழுந்து பெண்கள் புனித நீராட வேண்டும். பின்னர் வாசலில் கோலமிட்டு அதன் பின்னர் பூஜை அறையில் ஒரு மனை பலகை வைத்து அதில் சிறிய கோலம் ஒன்றை இடவேண்டும். தொடர்ந்து அகல்விளக்கு அல்லது காமாட்சி விளக்கு ஏதேனும் ஒன்றை அந்தக் கோலத்தின் மீது வைத்து விளக்கேற்றி வழிபாடு செய்து விரதத்தை தொடங்க வேண்டும். அன்றைய நாளில் முழுவதுமாக உபவாசம் இருக்க முடியும் என்பவர்கள் இருக்கலாம்.
Also Read: ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
இல்லை உடல்நலம் பிரச்சனை, பசி எடுத்தால் எண்ணம் மாறிவிடும் என நினைப்பவர்கள் பால் மற்றும் பழம் எடுத்து விரதம் கடைபிடிக்கலாம். இந்த நாளில் அருகில் உள்ள ஏதேனும் ஒரு அம்மன் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்த பூக்களை வாங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். அதேசமயம் பாலாபிஷேகம், வாழைப்பழம் கலந்த சாதம், போன்றவற்றை வழிபாட்டின் போது வழங்கலாம்.
இந்த பிரசாதத்தை கோயிலில் உள்ள பக்தர்களுக்கு வழங்க வேண்டும். இதனை செய்வதால் குழந்தை பாக்கியம் வேண்டி வழிபடும் மக்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்பதை ஐதிகமாக உள்ளது. அதேசமயம் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கி லாபங்கள் பெருகுவதோடு குடும்பத்தின் மகிழ்ச்சியும் பொங்கும் என நம்பப்படுகிறது.
Also Read: ஆடி ஞாயிற்றுக்கிழமை அம்மனுக்கு கூழ் காய்ச்சினால் இவ்வளவு பலனா?
ஆடி மாத பௌர்ணமியில் மாலை நேரத்தில் முழு நிலவு இருக்கும் நிலையில் விளக்கேற்றி வழிபடுவதால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும். வீட்டில் வழிபடுவதாக இருந்தால் அம்பாளுக்கு பால் அல்லது வெள்ளை இனிப்புகள் நைவேத்தியமாக வைக்கலாம். பின்னர் அம்மனுக்குரிய பாடல்கள் மந்திரங்கள் ஆகியவற்றை பாராயணம் செய்து வழிபடுவது கடன் பிரச்சனை, வாழ்க்கையில் நிம்மதியின்மை, எதிரிகளால் தொல்லை, உடல் பிணியால் அவதி போன்ற பல பாதிப்புகளுக்கும் தீர்வளிக்கும் என சொல்லப்படுகிறது.
(ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)