2025 Lunar Eclipse: சந்திர கிரகணம்.. இந்த பொருட்களை தானம் செய்தால் நல்லது!
2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிகழ்கிறது. இது இரத்தச் சந்திர கிரகணமாக (சிவப்பு நிறத்தில்) இருக்கும் எனவும், கும்ப ராசியில் நிகழும் எனவும் கூறப்படுகிறது. கிரகணத்தின் தீய விளைவுகளைப் போக்க சில பொருட்களை தானம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் சுழற்சி மட்டுமல்லாமல் நம்மை சுற்றி நிகழும் வானியல் நிகழ்வுகளும் முக்கிய பங்கு வகிக்கிறது. அப்படியாக சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரண்டும் மிக முக்கியமான ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சந்திர கிரகணம் ஆவணி மாதத்தின் முழு நிலவு நாளில் நிகழவுள்ளது. இந்த அரிய சந்திர கிரகணம் இரத்த சந்திரனாக (சிவப்பு நிறத்தில்) நிகழும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். அதே நேரத்தில் ஜோதிடர்கள் ராகுவுடன் கூடிய முழுமையான சந்திர கிரகணமாக இருக்கும் என்று கணித்துள்ளார்கள். இந்த சந்திர கிரகணம் கும்ப ராசியில் உள்ள சதயம் நட்சத்திரத்தில் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பித்ரு பக்ஷ காலமும் இந்த நாளிலிருந்து தொடங்குகிறது. இந்த சந்திர கிரகணம் இந்தியாவிலும் தெரியும் என்பதால் ஆன்மிகத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்த சூழலில் கிரகண தோஷத்தைப் போக்க சில பொருட்களை தானம் செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அதனைப் பற்றிக் காணலாம்.
சந்திர கிரகண நேரம் எப்போது?
2025 ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் செப்டம்பர் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9:56 மணிக்கு தொடங்கி அதிகாலை 1:26 மணிக்கு முடிவடையும் என கூறப்படுகிறது. கிரகணத்தின் மொத்த காலம் சுமார் 3 மணி நேரம் 28 நிமிடங்கள் இருக்கும். இந்த சந்திர கிரகணம் ஒரு பெனும்பிரல் காலத்தையும் கொண்டிருக்கும். இது இந்தியா, ஆசியாவின் சில பகுதிகள் மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளில் தெரியும் என சொல்லப்பட்டுள்ளது.
என்ன தானம் செய்ய வேண்டும்?
ஜோதிட கூற்றுப்படி, சந்திர கிரகணங்கள் சுபமானவை கிடையாது. அதிலும் இந்த சந்திர கிரகணம் சனியின் ஆட்சி பெற்ற கும்ப ராசியில் நிகழும் என்பதால், கிரகணத்தின் தீய விளைவுகளை நீக்க சில பொருட்களை தானம் செய்ய வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. அதன்படி சந்திர கிரகணத்திற்குப் பிறகு உணவு தானம் செய்வது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இதைச் செய்வதன் மூலம், வீட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படாது என்று நம்பப்படுகிறது.




Also Read: செப்டம்பர் 7ல் சந்திர கிரகணம்.. என்ன செய்யக்கூடாது தெரியுமா?
சந்திர கிரகண நாளில் துணி தானம் செய்வது மிகவும் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இந்த நாளில் வெள்ளை ஆடைகளை தானம் செய்வது சந்திரனின் ஆசிகளை பெற்று தரும் என்றும் கூறப்படுகிறது. சந்திரன் பால் மற்றும் தயிருடன் தொடர்புடையது. எனவே, சந்திர கிரகண நாளில் இவற்றை தானம் செய்வது குடும்பத்திற்கு மன அமைதி, மகிழ்ச்சியைத் தரும் என்று நம்பப்படுகிறது.
சந்திர கிரகண நாளில் அரிசி போன்ற வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வதும் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. சந்திரனின் நிறம் வெண்மையானது என்பதால், இந்த நாளில் இவற்றை தானம் செய்வது சந்திர கடவுளின் ஆசீர்வாதங்களை அப்படியே வைத்திருப்பதை உறுதி செய்கிறது. ஒருவர் மன அமைதியுடன் இருப்பார் என்று நம்பப்படுகிறது.
Also Read: திருச்செந்தூர் கோயில் போறீங்களா? கிரகணத்தன்று நடை அடைப்பு.. எப்போது தெரியுமா?
சந்திர கிரகண நாளில் எந்த கோயிலிலும் சர்க்கரை தானம் செய்வது அல்லது சர்க்கரை காணிக்கை செலுத்துவது மிகவும் நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது. அவ்வாறு செய்வது எதிர்மறை சக்தியை நீக்கி குடும்பத்திற்கு பிரச்சினைகள் வராமல் தடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
(ஜோதிட சாஸ்திர அடிப்படையில் இக்கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)