நடைப்பயிற்சியை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவது எப்படி?
Walking Daily: தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்வது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது உடல் எடையை குறைத்து, தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்க உதவுகிறது. தொடர்ந்து நடப்பது தசைகள் மற்றும் எலும்புகளை வலுப்படுத்தி, மூட்டு வலியை குறைக்கிறது.
நமது ஆரோக்கியத்தை பாதுகாக்க வேண்டும் என்றாலே பலர் உடனே ஜிம்முக்கு செல்வது அல்லது விலை உயர்ந்த உணவுகளை உட்கொள்வது போன்றவற்றை நினைப்பார்கள். ஆனால், உண்மையில் நமது அன்றாட வாழ்க்கையில் எளிதாக செய்யக்கூடிய ஒரு பழக்கமான நடைப்பயிற்சியே உடல்நலத்தை மேம்படுத்த மிகப் பெரிய உதவியாக உள்ளது. அலுவலகத்திற்கு செல்லும்போது, சந்தைக்கு போகும்போது அல்லது வீட்டு அருகில் சுமாராக நடப்பது கூட ஒரு முக்கியமான உடற்பயிற்சியாக மாறக்கூடும். இதை திட்டமிட்டு செய்து வந்தால், எந்தவொரு செலவுமின்றி நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும்.
இதய ஆரோக்கியத்தை காக்கும் நடைப்பயிற்சி
தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் சுறுசுறுப்பாக நடப்பது இதய துடிப்பை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்பட்டு, இதய தசைகள் வலுவடைகின்றன. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. மேலும், ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்து மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
எடையை குறைக்கும் பாதுகாப்பான வழி
உடல் எடையை குறைக்க பலர் ஓட்டப்பயிற்சியை தேர்வு செய்வார்கள். ஆனால் அது மூட்டுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும். அதற்கு மாற்றாக நடைப்பயிற்சி மிகவும் பாதுகாப்பானது. ஒருவரின் உடல் எடை மற்றும் நடை வேகத்தை பொறுத்து, அரை மணி நேர நடைப்பயிற்சியில் 100 முதல் 200 கலோரி வரை எரிக்க முடியும். தினசரி சிறிய மாற்றங்கள்—படிக்கட்டுகளில் ஏறுதல், உணவுக்குப் பிறகு சிறிது நடப்பது—போன்றவை கூட எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தசை மற்றும் எலும்பு வலிமையை அதிகரிக்கும் நடை
நடைப்பயிற்சி ஒரு ‘Weight-bearing’ பயிற்சியாக இருப்பதால், உடல் எடையை தாங்கி செய்யப்படுகிறது. இது கால்கள், இடுப்பு மற்றும் முதுகு தசைகளை வலுப்படுத்துகிறது. குறிப்பாக 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எலும்பு தேய்மானம் ஏற்படும் அபாயம் அதிகம் இருக்கும் நிலையில், தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது எலும்புகளை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது.
மனஅழுத்தத்தை குறைக்கும் இயற்கை மருந்து
நடைப்பயிற்சி உடலுக்கு மட்டுமல்ல, மனதிற்கும் மிகவும் நல்லது. வேலைப்பளு அல்லது குடும்பச் சுமை காரணமாக மனஅழுத்தம் ஏற்பட்டால், 20 நிமிட நடைப்பயிற்சி மனதிற்கு அமைதியை தரும். நடக்கும் போது உடலில் ‘எண்டோர்பின்’ சுரப்பதால் மனநிலை மேம்படும். இயற்கை சூழலில் நடப்பது மேலும் புத்துணர்ச்சியை அளித்து, தூக்கத்தையும் சீராக்குகிறது.
Also Read: பதற்றத்தை குறைக்கும் ஜப்பானிய ‘ஷின்ரின்-யோகு’ ரகசியம்
ஆய்வுகள் உறுதி செய்யும் நன்மைகள்
மருத்துவ ஆய்வுகள் கூறுவதாவது, தினமும் 10 நிமிடம் வேகமாக நடப்பவர்களுக்கு உயிரிழப்பு அபாயம் குறைவாக உள்ளது. மேலும், ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான அடிகள் நடப்பது உடல்நலத்தை பெரிதும் மேம்படுத்துகிறது. குறிப்பாக 4,000 முதல் 7,500 அடிகள் வரை நடப்பது நீண்ட ஆயுளுக்கும் உதவுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.