அழகா தூங்குற பூனைக்குள்ள இவ்வளவு பெரிய தற்காப்பு உத்தியா?
Cat Sleep Science: பூனைகள் தங்களைப் பாதுகாத்துக் கொண்டே ஒரு நாளில் 16 மணி நேரம் வரை தூங்கும் ரகசியத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பெரும்பாலான பூனைகள் தூங்கும் போது தங்களின் பாதுகாப்பு உத்தியாக இடது பக்கமாகவே சுருண்டு படுக்கின்றன. இடது கண் பார்க்கும் காட்சிகள், ஆபத்துகளை நொடிப் பொழுதில் உணரும் மூளையின் வலது பகுதிக்கு நேரடியாகச் செல்கின்றன.
பூனைகள் தங்களை அறியாமல் ஒரு நாளில் 12 முதல் 16 மணி நேரம் வரை நீண்ட தூக்கத்தை மேற்கொள்கின்றன. அவை தூங்கும் போது ஆபத்துகளில் இருந்து தப்பிக்க ஒரு விசித்திரமான தற்காப்பு உத்தியைக் கையாள்கின்றன. சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் யூடியூபில் உள்ள பூனைகளின் தூக்க வீடியோக்களை ஆய்வு செய்து இந்த ரகசியத்தைக் கண்டறிந்துள்ளனர். ஆய்வின்படி, சுமார் 66% பூனைகள் தங்களது இடது பக்கமாகவே சாய்ந்து படுத்து உறங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இடது பக்கமாகப் படுக்கும் போது, விழித்தவுடன் அவற்றின் இடது கண் பார்வைப்புலம் உடனடியாகச் செயல்படத் தொடங்குகிறது. இந்த இடது கண் காட்சிகள், ஆபத்துகளைக் கண்டறியும் மூளையின் வலது அரைக்கோளப் பகுதிக்கு விரைவாக அனுப்பப்படுகின்றன. இந்த ஆழமான பரிணாம அறிவியல் பூனைகள் தூக்கத்திலும் விழிப்புடன் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது.
இடது பக்கமாக படுப்பதன் பின்னணியில் உள்ள யூடியூப் சான்றுகள்
பூனைகள் தூங்குவதை உற்று நோக்கினால், அவை பெரும்பாலும் தங்களது இடது பக்கமாகவே சுருண்டு படுப்பதை அறியலாம். இது ஏதோ தற்செயலான பழக்கம் அல்ல என்பதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ‘செல் பிரஸ் நியூஸ்’ (Cell Press News) அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், யூடியூபில் பதிவேற்றப்பட்டிருந்த 408 பூனைகளின் தூக்க வீடியோக்களை விரிவாக ஆய்வு செய்தனர். இதில் வியப்பூட்டும் வகையில், மூன்றில் இரண்டு பங்கு (சுமார் 66%) பூனைகள் தங்களது இடது பக்கமாகவே சாய்ந்து தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பூனைகளின் சிறிய மூளைக்குள் நடக்கும் விசித்திர செயல்பாடு
பூனைகள் ஏன் இடது பக்க படுக்கைக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருகின்றன என்ற கேள்விக்கு ‘கரண்ட் பயாலஜி’ (Current Biology) இதழில் வெளியான ஆய்வு கட்டுரை விளக்கமளிக்கிறது. இடது பக்கமாகப் படுத்துறங்கும் பூனைகள், தூக்கத்திலிருந்து விழித்தெழும் கணத்தில் தங்களது இடது கண் பார்வை புலத்தையே (Left visual field) அதிகம் நம்பியிருக்கின்றன. இடது கண் பார்க்கும் காட்சிகள் அனைத்தும் நேரடியாக மூளையின் வலது அரைக்கோளப் பகுதிக்கு (Right hemisphere) அனுப்பப்படுகின்றன. மூளையின் இந்த வலது பகுதிதான் இடஞ்சார்ந்த விழிப்புணர்வு, ஆபத்துகளைக் கண்டறிதல் மற்றும் நொடிப் பொழுதில் தப்பியோடும் வேகத்தை ஒருங்கிணைத்தல் போன்ற முக்கியமான தற்காப்பு வேலைகளைக் கையாள்கிறது. எனவே, இடது பக்கமாகப் படுப்பது என்பது பூனைகளைப் பொறுத்தவரை தங்களின் உயிர்வாழ்விற்கான ஒரு முக்கிய உத்தியாகும்.
பாதுகாப்புடன் கூடிய நிம்மதியான தூக்க முறை
இயற்கையில் விலங்குகள் தூங்கும் போதுதான் எதிரிகளிடம் மிக எளிதாக மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது. பூனைகள் ஒரு நாளில் 12 முதல் 16 மணி நேரம் வரை தூங்குவதால், தங்களைப் பாதுகாத்துக் கொள்வது அவசியமாகிறது. இடது பக்கமாகப் படுத்துறங்குவதன் மூலம், விழித்தவுடன் சுற்றியுள்ள சூழலின் முக்கியத் தகவல்களை மூளையின் மிகக் கூர்மையான மற்றும் திறமையான பகுதிக்கு அவை உடனடியாகக் கடத்துகின்றன. சுருக்கமாகச் சொன்னால், பூனைகளின் ஒவ்வொரு அழகான தூக்கத்திற்கும், சரியான நேர விழிப்புணர்விற்கும் பின்னால் நாம் நினைப்பதை விட மிக ஆழமான பரிணாம அறிவியலும், தற்காப்புத் திறனும் ஒளிந்துள்ளன.