தக்காளி விலை வயலில் குறைவு.. கடையில் அதிகம்! விவசாயிக்கு கிடைப்பது எவ்வளவு? ரிசர்வ் வங்கி ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
விவசாயி விளைவிக்கும் ஒரு கிலோ தக்காளிக்கு நுகர்வோர் செலுத்தும் பணத்தில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விவசாயிக்குக் கிடைக்கிறது. மீதமுள்ள தொகை விநியோகச் சங்கிலியில் உள்ள பல்வேறு செலவுகளுக்குச் செல்கிறது. எனவே, விவசாயிகளுக்கு சேமிப்பு வசதிகளையும், சிறந்த சந்தை வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தால் மட்டுமே விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் நியாயமான விலை கிடைக்கும்.
தக்காளி விலை சில நேரங்களில் கிலோ ரூ.100 வரை உயர்கிறது. அதே தக்காளி, சில மாதங்களுக்குப் பிறகு விவசாயிகளிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், விவசாயிகளிடம் விலை குறையும்போதும் கடைகளில் மட்டும் ஏன் விலை குறைவதில்லை? இதற்குப் பின்னால் இருக்கும் காரணங்களை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆய்வு விளக்கியுள்ளது.
விவசாயிக்கு கிடைப்பது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே!
இந்தியாவில் தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய மூன்று காய்கறிகளின் விலை மாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கியின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கிடைத்த முக்கியமான தகவல் என்னவென்றால், நுகர்வோர் ஒரு கிலோ காய்கறிக்கு செலுத்தும் தொகையில் சுமார் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே விவசாயிக்குக் கிடைக்கிறது.
மீதமுள்ள தொகை, விவசாயப் பொருட்களைச் சேகரிப்பவர்கள், போக்குவரத்து செய்பவர்கள், சேமிப்பவர்கள், மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் என இடைத்தரகர்கள் அடங்கிய விநியோகச் சங்கிலியில் செல்கிறது.
உதாரணமாக, ஒரு கிலோ தக்காளியை நுகர்வோர் ரூ.30 கொடுத்து வாங்கினால், அதை விளைவித்த விவசாயிக்கு சுமார் ரூ.10 மட்டுமே கிடைக்கிறது. இதேபோல், பால் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இறுதி விலையில் சுமார் 70 சதவீதம் கிடைப்பதாக ஆய்வு ஒப்பிடுகிறது.
விவசாயிக்கு ஏன் குறைந்த விலை கிடைக்கிறது?
காய்கறிகள் விரைவில் அழுகக்கூடியவை. அவற்றை அறுவடை செய்த பிறகு நீண்ட நாட்கள் வைத்திருக்க முடியாது. அவற்றைத் தரம் பிரிப்பது, வாகனங்களில் ஏற்றுவது, குளிர்சாதன வசதியுடன் சேமிப்பது என பல்வேறு செலவுகள் உள்ளன.
ஆனால், பெரும்பாலான சிறு விவசாயிகளிடம் குளிர்பதனக் கிடங்குகளோ அல்லது நீண்ட நாட்கள் காத்திருந்து விற்பனை செய்யும் அளவுக்கு நிதி வசதியோ இருப்பதில்லை.
இதனால், அறுவடை செய்த அன்றே கிடைக்கும் விலைக்கு தக்காளியை விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரத்தில், குளிர்பதன வசதியும் போதிய பணமும் வைத்திருக்கும் வியாபாரிகள், காய்கறிகளைச் சேமித்து வைத்து விலை உயரும்போது விற்பனை செய்ய முடிகிறது.
ஒரே வயலில் விளைந்த ஒரே தக்காளிதான். ஆனால், அதை உடனடியாக விற்க வேண்டிய விவசாயியை விட, சில வாரங்கள் காத்திருக்க முடியும் என்ற வசதி கொண்ட வியாபாரிக்கு அதிக லாபம் கிடைக்கிறது.
காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கத்திற்கு என்ன காரணம்?
ஒரு குறிப்பிட்ட காய்கறிக்கு சந்தையில் அதிக விலை கிடைக்கும்போது, அதைப் பார்த்து பல விவசாயிகள் அடுத்த பருவத்தில் அதே பயிரை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனர்.
இதனால், சில மாதங்களுக்குப் பிறகு சந்தைக்கு ஒரே நேரத்தில் அதிக அளவில் காய்கறிகள் வருவதால் விலை சரிகிறது. விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.
இதனால் அடுத்த பருவத்தில் அந்தப் பயிரைச் சாகுபடி செய்ய விவசாயிகள் தயங்குகின்றனர். சாகுபடி குறையும்போது சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டு மீண்டும் விலை உயர்கிறது. இப்படியே காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
மேலும், அதிக வெப்பம், கனமழை போன்ற வானிலை மாற்றங்களும் சில நாட்களிலேயே பயிர்களைப் பாதித்து இந்த விலை மாற்றங்களை அதிகப்படுத்துகின்றன.
சாதாரண மக்களையும் பாதிக்கும் காய்கறி விலை உயர்வு!
காய்கறிகளின் விலை உயர்வு விவசாயிகளையும் நுகர்வோரையும் வெவ்வேறு விதங்களில் பாதிக்கிறது.
தினசரி குறைந்த பட்ஜெட்டில் குடும்பச் செலவுகளை நிர்வகிக்கும் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு காய்கறிகளின் விலை உயர்வு கூடுதல் சுமையாக மாறுகிறது. அதேபோல், விலை சரியும் நேரத்தில் விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் நஷ்டத்தைச் சந்திக்கின்றனர்.
மேலும், உணவுப் பொருட்களின் விலை உயரும்போது நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கக் குறியீட்டிலும் தாக்கம் ஏற்படுகிறது. இது ரிசர்வ் வங்கியின் வட்டி விகித முடிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனால், காய்கறி விலை மாற்றம் விவசாயிகளையும் நுகர்வோரையும் தாண்டி ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் பாதிக்கிறது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
காய்கறிகளின் விலை மாற்றங்களைக் கட்டுப்படுத்தவும் விவசாயிகளுக்கு உரிய வருமானம் கிடைக்கவும் சில முக்கியமான நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கியின் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. கிராமப்புறங்களில் அதிக அளவில் குளிர்பதனக் கிடங்குகளை அமைக்க வேண்டும்.
விவசாயப் பொருட்களைச் சந்தைப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.உபரி காய்கறிகளைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும். அதிக வெப்பம் மற்றும் மழை மாற்றங்களைத் தாங்கக்கூடிய புதிய பயிர் ரகங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, ஒரு கிராமத்தில் குளிர்பதனக் கிடங்கு இருந்தால், விவசாயி தனது தக்காளியை உடனடியாக விற்காமல் சில நாட்கள் சேமித்து வைத்து நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்ய முடியும். அதேபோல், அதிகப்படியான தக்காளியைக் கொண்டு தக்காளி கூழ் (Tomato Puree) தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகள் அமைக்கப்பட்டால், விளைச்சல் அதிகமாகும் காலங்களில் ஏற்படும் விலை வீழ்ச்சியைக் குறைக்க முடியும்.