VS Achuthanandan: முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்!
VS Achuthanandan Death: கேரளாவின் முன்னாள் முதலமைச்சரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் 102 வயதில் காலமானார். நீண்ட கால சிகிச்சைக்குப் பின், திருவனந்தபுரம் எஸ்.யு.டி மருத்துவமனையில் இன்று மறைந்தார். அவர் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஆற்றிய பங்களிப்பு, கேரள அரசியலில் அவர் வகித்த பல்வேறு முக்கியப் பதவிகள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

திருவனந்தபுரம், ஜூலை 21: கேரள முன்னாள் முதலமைச்சரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் (VS Achuthanandan) 102 வயதில் காலமானார். திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதாவது 2025 ஜூலை 21ம் தேதி காலமானார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan) உள்ளிட்ட மூத்த சிபிஎம் தலைவர்கள் மருத்துவமனைக்கு சென்று பார்த்து வந்ததை தொடர்ந்து, அச்சுதானந்தனின் மரணச் செய்தி உறுதி செய்யப்பட்டது. கடந்த 2025 ஜூன் 23ம் தேதி மாரடைப்பு காரணமாக அச்சுதானந்தன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
தீவிர சிகிச்சை அளிக்காத பலன்:
அச்சுதானந்தன் கடந்த 2025 ஜூன் 23ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதலே திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த ஏழு பேர் கொண்ட நிபுணர் குழு அவரது உடல்நிலையை பரிசோதிக்க தினமும் எஸ்.யு.டி.க்கு சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது மருந்துகளுக்கு உடல்நிலையில் முன்னேற்றத்தை கொடுத்தாலும், பின்னர் அவரது உடல்நிலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.




யார் இந்த வி.எஸ். அச்சுதானந்தன்..?
We salute Comrade V.S. Achuthanandan—an architect of Kerala’s progressive journey, a voice of the voiceless, and a lifelong champion of the working class. pic.twitter.com/yMoKchefMa
— CPI(M) Kerala (@CPIMKerala) July 21, 2025
வி.எஸ். அச்சுதானந்தன் அல்லது வேலிககாத் சங்கரன் அச்சுதானந்தன், 1923 அக்டோபர் 20 ஆம் தேதி ஆலப்புழாவின் புன்னப்பிராவில் சங்கரன் மற்றும் அக்கம்மா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். குழந்தைப் பருவத்திலேயே பெற்றோரை இழந்த வி.எஸ். அச்சுதானந்தன் 7வது படிக்கும்போது படிப்பை விட்டுவிட்டு வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. இதற்கிடையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின் மீது கொண்ட ஈர்ப்பால், கடந்த 1940ம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளராக தன்னை முன் நிறுத்திகொண்டார். தொடர்ந்து, புன்னப்பிர வயலார் போராட்டம் உட்பட கேரள வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் பல போராட்டங்களில் கலந்து கொண்டார்.
1964ம் ஆண்டு சிபிஐயில் ஏற்பட்ட மனகசப்பு காரணமாக சிபிஐ தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய 32 தலைவர்களில் வி.எஸ். அச்சுதானந்தனும் ஒருவர். தற்போது, மூத்த சிபிஎம் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுகிறார். மக்கள் எங்கெல்லாம் ஒடுக்கப்படுகிறார்களோ, அங்கு முதல் குரலாய் நின்றார் அச்சுதானந்தன்.
இதன் காரணமாக, கேரளா முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், சிபிஎம் மாநிலச் செயலாளர், பொலிட்பீரோ உறுப்பினர், LDF ஒருங்கிணைப்பாளர் மற்றும் சமீபத்தில் நிர்வாக சீர்திருத்த ஆணையத்தின் தலைவர் பதவி உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் தீவிர அரசியலில் இருந்து வி.எஸ். அச்சுதானந்தன் விலகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.