8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!
Union Cabinet approves 8th pay Commission: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கான பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின்படி, ஜன.2026 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி, அக்டோபர் 29: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய சலுகைகளை தீர்மானிக்கும் 8-வது ஊதியக்குழுவின் பரிந்துரை விதிமுறைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் 8வது ஊதியக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஊதியக் குழுவானது, 18 மாதங்களுக்குள் தனது பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார். இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள், 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
8-வது ஊதியக் குழு பரிந்துரை:
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பிற சலுகைகளில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைக்க ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒரு முறை சம்பள உயர்வு தொடர்பாக ஆய்வு செய்ய ஆணையம் அமைக்கப்படும். கடந்த 2014 ஆம் ஆண்டு 7-வது ஊதியக் குழு தொடர்பான ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் 2016-ம் ஆண்டு முதல் புதிய ஊதிய உயர்வுகள் வழங்கப்பட்டன. அதோடு, தற்போது வரை 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல மாதங்களாக இருந்து வந்த நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் (ஜனவரி) 8-வது ஊதியக் குழுவை உருவாக்குவதாக மத்திய அரசு அறிவித்தது.




முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆணையத்தின் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 8வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கான பரிந்துரை விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ், 8வது ஊதியக் குழுவின் தலைவராகவும், ஐஐஎம் (பெங்களூர்) பேராசிரியர் புலாக் கோஷ், ஐ.ஏ.எஸ். பங்கஜ் ஜெயின் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருப்பர். 2026 ஜனவரி மாதம் முதல் செயல்படத் துவங்கி, அடுத்த 18 மாதங்களில் பரிந்துரைகளை மத்திய அரசுக்கு இக்குழு வழங்கும் எனத் தெரிவித்தார். 8வது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ரூ.5 லட்சம் முதலீடு செய்து ரூ.8 லட்சம் பெறலாம்.. இந்த பார்முலாவை பயன்படுத்துங்கள்!
50 லட்சம் ஊழியர்கள், 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன்:
இதனால் ஊதியக் குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகு, ஜனவரி 2026 முதல் முன் தேதியிட்டு கூடுதல் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை இடைக்கால அறிக்கையை குழுவினர் தாக்கல் செய்தால், அதன் அடிப்படையில் புதிய ஊதிய உயர்வு இருக்கும் என்றும் தெரிகிறது. 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.26 ஆயிரமாக உயரும் என்று கூறப்படுகிறது. 8-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டால், மத்திய அரசில் பணியாற்றும் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 69 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.