சொந்தமாக ஒரு செல்போன் கூட இல்லாத கிராமப்புற பெண்கள்.. அதிர்ச்சியூட்டும் ஆய்வு முடிவுகள்!
தங்களுடைய மகள்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பெற்றோர்கள் சில முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால், பல லட்சம் குடும்பங்களில் இதுபோன்ற முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்போது, அது பெண்களின் சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும் ஒரு சமூகப் பிரச்சினையாக மாறுகிறது. இதன் முழு விவரத்தை பார்க்கலாம்
ஒவ்வொரு நாளும் மாலை 8 மணிக்கு, பூஜா தனது சகோதரரின் அறைக்கு வெளியே காத்திருக்கிறாள். அவளது சகோதரர் செல்போனில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அவர் விளையாட்டை முடித்த பிறகு, அரை மணி நேரம் மட்டும் செல்போனைப் பயன்படுத்த பூஜாவுக்கு அனுமதி கிடைக்கிறது. அன்றைய தினம் அவள் செய்ய வேண்டிய வேலை, தனக்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பதைச் சரிபார்ப்பது. ஆனால், தாயின் கண்காணிப்பில் சகோதரரின் செல்போனைப் பயன்படுத்த வேண்டிய சூழல் அவளுக்கு இருக்கிறது. இது பூஜாவுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பல கிராமப்புற பெண்களின் உண்மை நிலையாக உள்ளது.
இந்தியாவில் செல்போன் பயன்பாட்டில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதை தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. ஜனவரி முதல் மார்ச் 2025 வரை, சுமார் 35,000 குடும்பங்களைச் சேர்ந்த 1.4 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
15 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே செல்போன் வைத்திருப்போர் குறித்த புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. நகர்ப்புற ஆண்களில் 90 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்துள்ளனர். கிராமப்புற ஆண்களில் 80.7 சதவீதம் பேரும், நகர்ப்புற பெண்களில் 71.8 சதவீதம் பேரும் செல்போன் வைத்துள்ளனர். ஆனால், கிராமப்புற பெண்களிடம் இந்த எண்ணிக்கை வெறும் 48.4 சதவீதமாக மட்டுமே உள்ளது.
அதாவது, கிராமப்புற பெண்களில் 51.6 சதவீதம் பேருக்கு சொந்தமாக செல்போன் இல்லை. நகர்ப்புற ஆண்களுக்கும் கிராமப்புற பெண்களுக்கும் இடையிலான இந்த இடைவெளி 41.6 சதவீத புள்ளிகளாக உள்ளது.
ஸ்மார்ட்போன் இருக்கிறது.. ஆனால் சொந்தமாக இல்லை
இந்த ஆய்வில் மற்றொரு முக்கியமான விஷயமும் தெரியவந்துள்ளது. செல்போன் வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் ஸ்மார்ட்போன்களையே பயன்படுத்துகின்றனர். கிராமப்புற பெண்களிடம் இது 75.6 சதவீதமாகவும், நகர்ப்புற ஆண்களிடம் 89.4 சதவீதமாகவும் உள்ளது. அதாவது, தொழில்நுட்ப வசதி இல்லாதது மட்டுமே பிரச்சினை கிடையாது. பெண்களுக்கென தனியாக ஒரு செல்போன் கிடைக்காததுதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.
குறிப்பாக, 15 முதல் 24 வயதுக்குட்பட்ட கிராமப்புற இளம் பெண்களில் 95.7 சதவீதம் பேர் கடந்த மூன்று மாதங்களில் செல்போனைப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், அவர்களில் சொந்தமாக செல்போன் வைத்திருப்பவர்கள் வெறும் 51.7 சதவீதம் மட்டுமே. இதே வயதுடைய கிராமப்புற இளைஞர்களில் 74.8 சதவீதம் பேர் சொந்தமாக செல்போன் வைத்துள்ளனர். இதன் மூலம், கிராமப்புற இளம் பெண்களில் பெரும்பாலானோர் மற்றவர்களின் செல்போனையே சார்ந்திருக்க வேண்டிய நிலை இருப்பது தெரியவந்துள்ளது.
மற்றவர்களின் செல்போனை பயன்படுத்துவதால் என்ன பிரச்சினை?
ஒருவரிடம் செல்போனை இரவல் வாங்கிப் பயன்படுத்துவதற்கும், சொந்தமாக வைத்திருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மற்றவர்களின் செல்போனைப் பயன்படுத்தும்போது என்ன தேடுகிறோம், யாருக்கு மெசேஜ் அனுப்புகிறோம், யாருடன் பேசுகிறோம் என்பதை மற்றவர்கள் கண்காணிக்க வாய்ப்புள்ளது.
மேலும், செல்போனை கொடுத்தவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். இதனால் பெண்களால் தங்களுடைய தனிப்பட்ட தகவல்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், தேடல்கள் மற்றும் உரையாடல்களைச் சுதந்திரமாகப் பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிறது.
இன்றைய காலகட்டத்தில் கல்வி உதவித்தொகை விண்ணப்பம், ஓய்வூதிய விவரங்கள், மருத்துவ சந்திப்புகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள், வங்கிக் கணக்கு இருப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் செல்போன் வழியாகவே கிடைக்கின்றன. சொந்தமாக செல்போன் இல்லாத பெண்கள், இத்தகைய சேவைகளைப் பெறுவதற்குக்கூட மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது.
ஒரு பெண் தனது தாயிடம் பேசுவதற்கும், சம்பளம் வங்கிக் கணக்கில் வந்துள்ளதா என்பதைப் பார்ப்பதற்கும், மருத்துவ உதவிக்கான தொலைபேசி எண்ணைத் தேடுவதற்கும் மற்றவர்களின் அனுமதியை எதிர்பார்க்க வேண்டிய நிலை உள்ளது.
ஏன் பெண்களுக்கு செல்போன் கிடைப்பதில்லை?
இதற்குப் பல்வேறு குடும்ப மற்றும் சமூகக் காரணங்கள் உள்ளன. செல்போன் பயன்படுத்தினால் மகள்கள் தவறான வழியில் சென்றுவிடுவார்கள் என்ற அச்சம் சில குடும்பங்களில் உள்ளது. செல்போன் பயன்படுத்துவதால் வீட்டு வேலைகள் பாதிக்கப்படும் என்ற எண்ணமும் நிலவுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு செல்போன் வாங்கும் அளவுக்கு மட்டுமே பொருளாதார வசதி இருந்தால், வேலைக்குச் சென்று சம்பாதிப்பார் என்ற எதிர்பார்ப்பில் ஆண் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சில இடங்களில் இணையதள இணைப்பு சரியாகக் கிடைப்பதில்லை. பல குடும்பங்களில் மொபைல் டேட்டாவுக்கான செலவுகூட கூடுதல் சுமையாக உள்ளது. மேலும், பெண்களுக்கு இணையதளத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது குறித்த போதிய விழிப்புணர்வும் பயிற்சியும் கிடைப்பதில்லை.
இவை அனைத்தும் ஒன்றாகச் சேரும்போது, பெண்களுக்கான டிஜிட்டல் அணுகல் பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
பெண்களின் சுதந்திரத்துடன் தொடர்புடைய செல்போன்!
இந்தப் பிரச்சினைக்கு ஒரு தனி நபரையோ அல்லது குடும்பத்தையோ குற்றம் சொல்ல முடியாது. தங்களுடைய மகள்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே பெற்றோர்கள் சில முடிவுகளை எடுக்கிறார்கள். ஆனால், பல லட்சம் குடும்பங்களில் இதுபோன்ற முடிவுகள் தொடர்ந்து எடுக்கப்படும்போது, அது பெண்களின் சுதந்திரத்தையும் முன்னேற்றத்தையும் பாதிக்கும் சமூகப் பிரச்சினையாக மாறுகிறது.
தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைவருக்கும் சமமாகக் கிடைக்கும்போதுதான் அதன் உண்மையான பலன் கிடைக்கும். செல்போன் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பது மட்டும் போதாது; ஒவ்வொருவருக்கும் சொந்தமாக ஒரு செல்போன் கிடைப்பதும், அதைத் தடையின்றிப் பயன்படுத்தும் சுதந்திரமும் அவசியம்.
ஒரு பெண்ணிடம் செல்போன் இல்லாதது என்பது வெறும் தொழில்நுட்பக் குறைபாடு மட்டுமல்ல. அது அவருடைய கல்வி, வேலைவாய்ப்பு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றத்தையும் பாதிக்கக்கூடியது.