“கூடங்குளம் அனுமின் திட்டத்திற்கு உறுதுணையாக இருப்போம்”.. ரஷ்ய அதிபர் புதின் உறுதி!!
India-Russia Nuclear Pact: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், 6 அணு உலைகளில் இரண்டு ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு உதவுவதில் ரஷ்யா உறுதியுடன் உள்ளதாகவும் விளாடிமிர் புதின் கூறினார்.

புதின் - மோடி
டெல்லி, டிசம்பர் 06: கூடங்குளத்தில் திட்டமிட்டபடி மொத்தம் 6 அணு உலைகளை அமைப்பதில் இந்தியாவுக்கு உதவ ரஷ்யா உறுதிபூண்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். 23வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரண்டு நாள் அரசு பயணமாக தனி விமானம் மூலம் நேற்று முன்தினம் (டிச.4)இந்தியாவுக்கு வருகை தந்தார். அவரை பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக விமான நிலையம் சென்று ஆரத் தழுவி வரவேற்றார். தொடர்ந்து, பிரதமர் மோடியின் காரில் புதின் பயணித்து அவரது இல்லதிற்கு இரவு விருந்திற்குச் சென்றார். அங்கு அவருக்கு மோடி பகவத் கீதையை பரிசாக வழங்கினார். பின்னர் நேற்று காலை, புதினுக்கு, குடியரசுத் தலைவர் மாளிகையில் முப்படைகளின் அணிவகுப்புடன் சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் பின்னர் 23வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் புதின் பங்கேற்றனர். அப்போது இருநாடுகளிடையேயான வர்த்தக உறவு குறித்து இரு தலைவர்களும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் படிக்க: ஆரத் தழுவி வரவேற்றது முதல் பரிசளித்தது வரை.. ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடியின் ராஜ உபசரிப்பு.. தீயாய் பரவும் புகைப்படங்கள்!
அணுமின் நிலையத்திற்கு ரஷ்யா உறுதுணை:
இதையடுத்து, இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய புதின், இந்தியாவின் மிகப் பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்துக்கான உறுதுணையை நாங்கள் வழங்கி வருகிறோம் என்றார். 6 அணு உலைகளில் இரண்டு ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள நிலையில், மேலும் நான்கு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு உதவுவதில் ரஷ்யா உறுதியுடன் உள்ளதாகவும் கூறினார். மேலும், இந்த அணுமின் நிலையத்தை முழு அளவிலான மின் உற்பத்திக்குக் கொண்டு வருவதன் மூலம் அது இந்தியாவின் எரிசக்தி தேவைகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சர்வதேச தளவாட வழித்தடம்:
அதோடு, சிறிய அணு உலைகள் மற்றும் மிதக்கும் அணுமின் நிலையங்களை நிர்மானிப்பது குறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறிய அவர், புதிய சர்வதேச தளவாட வழித்தடங்களை உருவாக்க ரஷ்யாவும் இந்தியாவும் இணைந்து செயல்படுகின்றன என்றார். மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளை அமைப்பதற்கான எரிபொருள் விநியோக ஒப்பந்தம் கடந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானதாகவும், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நீண்ட கால அடிப்படையில் யுரேனியம் எரிபொருளை ரஷ்யா வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
அணு எரிப்பொருள் அனுப்பிய ரஷ்யா:
அந்தவகையில், தமிழ்நாட்டின் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2 அணு உலைகளில் 2,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தவிர மேலும் 4 அணு உலைகள் ரஷ்யா உதவியுடன் கட்டப்பட்டு வருகின்றன. இதனிடையே, கூடங்குளத்தின் 3-வது அணு உலைக்கு ஆரம்ப கட்ட நிரப்புதலுக்கான அணு எரிபொருளின் முதல் தொகுதியை டெலிவரி செய்துள்ளதாக ரஷ்ய அரசின் அணுசக்தி நிறுவனமான ரோசாட்டம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க: ரஷ்ய அதிபர் புதினுக்கு பகவத் கீதையை பரிசளித்த பிரதமர் மோடி!
ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வந்துள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் நோவோசி பிர்ஸ்க் கெமிக்கல் கான்சென்ட் ரேட்ஸ் ஆலையில் தயாரிக்கப் பட்ட இந்த எரிபொருளை ரோசாட்டம் அணு எரிபொருள் பிரிவால் இயக்கப்படும் ஒரு சரக்கு விமானம் டெலிவரி செய்துள்ளது.