103 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி.. தமிழகத்தில் எங்கு? முழு விவரம்!
Amrit Bharat Railway Stations : அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதில் தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார். சிதம்பரம், மன்னார்குடி, போளூர், ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை, விருத்தாசலம், குளித்தலை உள்ளிட்ட ரயில் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.

டெல்லி, மே 22 : நாடு முழுவதும் 103 அம்ரித் பாரத் ரயில் (Amrit bharat railway station) நிலையங்களை பிரதமர் மோடி (pm modi) 2025 மே 22ஆம் தேதியான இன்று திறந்து வைக்க உள்ளார். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். ராஜஸ்தானில் இருந்தப்படியே, காணொலி வாயிலாக அவர் திறந்து வைக்கிறார். ராஜஸ்தானின் பிகானேருக்கு பிரதமர் மோடி 2025 மே 22ஆம் தேதியான இன்று பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல முக்கிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். ரூ.26,000 கோடி மதிப்பில் ரயில்வே, சாலைகள், மின்சாரம், நீர், எரிசக்தி தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், தொடங்கியும் வைக்கிறார். அந்த வகையில், காலை 11 மணியளவில் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட தேஷ்னோக் ரயில் நிலையத்தை திறந்து வைப்பார்.
103 ரயில் நிலையங்களை திறந்து வைக்கும் பிரதமர் மோடி
அதோடு, பிகானேரிலிருந்து மும்பைக்கு புதிய விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார். காணொலி வாயிலாக நாடு முழுவதும் 103 ரயில் நிலையங்களை திறந்து வைக்கிறார்.
அதன்படி, உத்தர பிரதேசத்தில் 19 ரயில் நிலையங்களும், குஜராத்தில் 18, மகாராஷ்ராவில் 16, ராஜஸ்தானில் 8, மத்திய பிரதேசத்தில் 6, கர்நாடகாவில் 5 ரயில் நிலையங்களை திறந்து வைக்க உள்ளார்.
மேலும், தெலங்கானாவில் 3, மேற்கு வங்கத்தில் 3, கேளராவில் 2, ஆந்திராவில் ஒன்று, அசாமில் 3, பீகாரில் 2, ஹரியானாவில் 1, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்டி, புதுச்சேரியில் தலா ஒன்று, தமிழகத்தில் 9 ரயில் நிலையங்களும் திறந்து வைக்கப்பட உள்ளது. இதில், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உட்பட தெற்கு ரயில்வேக்கு மட்டுமே 90 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளன.
தமிழகத்தில் எங்கெங்கு?
தமிழகத்தை பொறுத்தவரை சிதம்பரம், மன்னார்குடி, போளூர், ஸ்ரீரங்கம், செயின்ட் தாமஸ் மவுண்ட், திருவண்ணாமலை, விருத்தாசலம், குளித்தலை, சாமல்பட்டி ஆகிய ரயில் நிலையங்கள் புனரமைக்கப்பட்ட நிலையில், தற்போது அது திறந்து வைக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் மாஹே ரயில் நிலையமும் திறக்கப்பட உள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் வடகரா, சிராயின்கீழு ரயில் நிலையங்களும், தெலங்கானாவில் கரீம்நகர், வாரங்கல், பேகம்பேட் ரயில் நிலையங்களும், கர்நாடகாவில் பாகல்கோட், தார்வாட், கடக், கோகக் சாலை, முனிராபாத் ரயில் நிலையங்களும் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட உள்ளன.
சிறப்பம்சங்கள் என்ன?
இந்தியன் ரயில்வே துறையை நவீனப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக பல்வேறு ரயில் சேவையை மத்திய அரசு தொடங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2025 மே 22ஆம் தேதியான இன்று புனரமைக்கப்பட்ட 103 ரயில் நிலையங்கள் திறந்து வைக்கப்பட உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் காத்திருப்பு அரங்குகள், நவீன டிக்கெட் கவுண்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தனி வசதி, உணவு அரங்கம், லிஃப்ட், நகரும் படிக்கட்டுகள், கூடுதல் அறைகள், தாய்மார்களுக்கு தனி அறை, குழந்தைகளுக்கு விளையாட்டு அரங்கம், 24 மணி கண்காணிப்பு வசதி, எல்இடி திரைகள் போன்ற வசதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.