“மன்னிப்பு கேளுங்க” சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து.. பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
Supreme Court On Colonel Sofiya Qureshi : ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி, மே 15 : ராணுவ அதிகாரி சோபியா குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மத்தியப் பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும், மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் நோக்கில் ஆபேரஷன் சிந்தூரை இந்தியா கையில் எடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் குறித்தும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து ராணுவ அதிகாரிகள் அன்று விளக்கம் அளித்தனர். அப்போது, முதல்முறையாக இரு பெண்கள் ராணுவ அதிகாரிகளாக பங்கேற்று விளக்கம் கொடுத்தனர்.
சோபியா குரேஷி குறித்து சர்ச்சை கருத்து
கர்னல் சோபியா குரேஷி மற்றும் விமானப்படையின் விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களுக்கு விளக்கம் கொடுத்தனர். இதனை அடுத்து, இரண்டு பெண் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் வைரலாகினர். இதற்கிடையில், கர்னல் சோபியா குரேஷி குறித்து மத்திய பிரதேச பாஜக அமைச்சர் சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார்.
அவர் பேசியதாவது, “பஹல்காம் தாக்குதலின்போது நமது மகள்களின் குங்குமத்தை அழித்தவர்களுக்கு, அவர்களின் சகோதரியை கொண்டே பாடம் கற்பித்துள்ளோம்” என்று தெரிவித்தார். இவரது கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் விஜய் ஷாவின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தது.
விஜய் ஷா பதவியில் இருந்து விலக வேண்டும் என கோரிக்கை வலுத்தது. இது தொடர்பாக, மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்த விசாரித்தது. தொடர்ந்து, விஜய் ஷா மீது வழக்குப்பதிவு செய்யவும் மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதனை அடுத்து, கர்னல் சோபிய குரேஷி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
Supreme Court slams Kunwar Vijay Shah, saying a person holding a constitutional office should be responsible when this country is going through such a situation. He has to know what he is saying, says Supreme Court.
— ANI (@ANI) May 15, 2025
அந்த மனுவில், தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில், இந்த வழக்கு மே 15ஆம தேதியான இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்தது.
மேலும், தலைமை நீதிபதி கவாய் கூறுகையில், அமைச்சரின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அமைச்சர் விஜய் ஷாவின் கருத்து இழிவானது ஆபத்தானது. நாடு இதுபோன்ற ஒரு சூழ்நிலையை சந்திக்கும்போது, அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் என்ன மாதிரியான கருத்துக்களைச் சொல்கிறீர்கள்? நீங்கள் கொஞ்சம் உணர வேண்டும். உயர்நீதிமன்றத்தில் சென்று மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். இதனை அடுத்து வழக்கை 2025 மே 16ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.