Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சபரிமலை போறீங்களா? மூளையைத் தின்னும் அமீபா காய்ச்சல்… கேரளா சுகாதாரத்துறை எச்சரிக்கை

Sabarimala Health Alert : கேரளாவில் வருகிற நவம்பர் 17, 2025 முதல் சபரிமலை சீசன் துவங்கும் நிலையில் கேரளா சுகாதாரத் துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா தற்போது பரவி வரும் நிலையில் பக்தர்களுக்கு சில எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

சபரிமலை போறீங்களா? மூளையைத் தின்னும் அமீபா காய்ச்சல்… கேரளா சுகாதாரத்துறை எச்சரிக்கை
சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எச்சரிக்கை
Karthikeyan S
Karthikeyan S | Published: 16 Nov 2025 16:18 PM IST

ஒவ்வொரு ஆண்டும் மண்டல பூஜைக்காக சபரிமலைக்கு (Sabarimala) ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம்.  அதன்படி இந்த ஆண்டு பக்தர்கள் நவம்பர் 17 , 2025 முதல் செல்லவுள்ள நிலையில் கேரளா சுகாதாரத்துறை பக்தர்களுக்கு முக்கிய  அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.  அதன்படி மூளையைத் தின்னும் அமீபா காய்ச்சல்  (Brain Eating Amoeba)  அதிகரித்து வரும் சூழலில் பக்தர்களுக்கு சில முக்கிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று விரதம் இருந்து, இருமுடி கட்டி வழிபடுவது வழக்கம். இந்த நிலையில் ஆண்டு சபரிமலைக்கு நவம்பர் 17, 2025 முதல் பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் இந்த எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதிகரிக்கும் மூளையைத் தின்னும் அமீபா காய்ச்சல்

கேரளாவில் மூளையைத் தின்னும் அமீபா காய்ச்சல் பரவி வருகிறது. இந்த நிலையில் பக்தர்கள் அதிக அளவில் பிற மாநிலங்களில் இருந்து வருவார்கள் என்பதால்,  பக்தர்களுக்கு சில அறிவுறுத்தல்களை கேரளா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆற்றில் நீராடும் பக்தர்கள், நீரில் மூழ்கும் போது நீர் மூக்கிற்குள் செல்லாதவாறு நன்றாக மூக்கை முடிக்கொள்ள வேண்டும். காரணம், நெக்லேரியா ஃபவ்லேரி என்ற மூளைத் தின்னும் அமீபா மூக்கின் வழியாக உடலில் நுழையும் அபாயம் இருப்பதால், நீராடும்போது மிகுந்த கவனம் அவசியம் என எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க : ஜம்மு காஷ்மீரில் காவல் நிலையத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு.. 7 பேர் உயிரிழந்த சோகம்..

பக்தர்கள் அவசரகாலங்களில் தொடர்புகொள்ள 04735 203232 என்ற உதவி எண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் யாத்திரை செல்லும் பாதையில் ஆங்காங்கே  மருத்துவ முகாம்கள்  மற்றும் 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோட்டாயம், பாத்தனம்திட்டா மற்றும் பம்பை முதல் சன்னிதானம் வரை பல்வேறு இடங்களில் மருத்துவர்களின் அணிகளாக பிரிந்து பணியில் ஈடுபடுகின்றனர் . மேலும், இதற்காக மருத்துவக் கல்லூரி மருத்தர்கள் மற்றும் பயிற்சிய பெற்ற தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பக்தர்களுக்கான வழிகாட்டுதல்கள்

  • உடல் நலக்குறைவு உள்ளவர்கள் தங்கள் மருத்துவ பதிவுகளையும் மருந்துகளையும் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும்.

  • யாத்திரைக்கு முன் லேசான நடைபயிற்சி போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள ஆலோசனை.

  • மலை ஏறும் போது அவ்வப்போது  ஓய்வெடுத்து மெதுவாக செல்ல வேண்டும்.

  • மார்பு வலி, மூச்சுத்திணறல், தலைச்சுற்றல் ஆகியவை ஏற்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவ மையத்தை அணுக வேண்டும்.

  • வேகமாக கெட்டுப்போகும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

  • காய்ச்சி வடிகட்டிய நீரையே குடிக்க வேண்டும்.

  • கழிப்பறைக்கு சென்ற பிறகு கைகளை நன்றாக கழுவ வேண்டும்.

  • திறந்த வெளிகளில் சிறுநீர், மலம் கழிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : ஆரம்பத்தில் இருந்தே நியாயமாக நடக்கல… பீகார் தேர்தல் முடிவு குறித்து ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு

பாதயாத்திரை செல்லும் பாதையில் காட்டு பகுதிகள் உள்ளதால் பாம்புகள் கடிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் பாம்பு கடியிலும் உடனடி மருத்துவ உதவியைப் பெற வேண்டும் எனவும் மருத்துவமனைகளில் விஷ முறிவு மருந்துகள் போதுமான அளவில் கிடைக்க உள்ளது எனவும் கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.