தன் பேக்கரியில் திருடிய நபருக்கு விருது.. இப்படியும் ஒரு உரிமையாளர்!
Kerala bakery theft issue: கேரளாவில் ஒரு பேக்கரி உரிமையாளர் தன் கடையில் திருடிய ஒருவருக்கு, காவல்துறையிடம் ஒப்படைக்காமல், பொன்னாடை அணிவித்து, விருது வழங்கி நூதன தண்டனை அளித்தார். இந்த நிகழ்வை அவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது வைரலானது.

திருடனுக்கு விருது
கேரளா, அக்டோபர் 13: கேரள மாநிலத்தில் தன்னுடைய பேக்கரி கடையில் திருடிய நபருக்கு உரிமையாளர் ஒருவர் வித்யாசமான முறையில் தண்டனை கொடுத்த சம்பவம் பேசுபொருளாக மாறியுள்ளது. காலங்கள் மாறி வரும் நிலையில் மோசடிகளும் அதற்கேற்றாற்போல அப்டேட் ஆகி வருகிறது. சிசிடிவி எனப்படும் கண்காணிப்பு கேமராக்கள் அனைத்து இடங்களிலும் மாற்றப்பட்டாலும் நமது கவனத்தை திசை திருப்பி நூதன முறையில் பணம், நகை என பொருட்கள் திருடுபோவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கேரளாவில் நடைபெற்றுள்ளது. ஆனால் அதன் முடிவு சற்று வித்யாசமாக அமைந்திருக்கிறது.
சிசிடிவி காட்சியில் பதிவான திருடன்
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் அருகே உள்ள கடைக்காவூர் என்ற கிராமத்தை சேர்ந்த அனீஷ் என்பவர் அதே பகுதியில் ஒரு பேக்கரி நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அப்பகுதியைச் சார்ந்த மக்கள் தினசரி அதிக அளவில் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் பேக்கரியில் பொருட்கள் திருடு போவதை தடுப்பதற்காக கடைக்குள் கண்காணிப்பு கேமராக்களை அனீஷ் வைத்திருந்தார்.
Also Read: தீரன் பட பாணி.. திருச்சியில் நகை கொள்ளை.. சிக்கிய பவாரியா கும்பல்
அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்செயலாக அந்த கேமராவில் பதிவான காட்சிகளை அவர் பார்த்த போது ஒரு நபர் கடைக்கு வந்து ரூபாய் 500 மதிப்புள்ள பொருளை சட்டைக்குள் மறைத்து எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இவ்வளவு கண்காணிப்பு இருந்த போதிலும் இப்படி நடந்து விட்டதே என அதனைப் பார்த்ததும் அனீஷுக்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் சிறிது நேரத்திலேயே கோபம் தணிந்த அவர் அந்த திருடனை கண்டுபிடித்து வித்தியாசமான தண்டனை கொடுக்க முடிவெடுத்தார்.
வித்யாசமான தண்டனை
அதன்படி அனீஷ், தன்னுடைய கடையில் திருடிய அந்த நபரை சற்று சிரமப்பட்டு சிசிடிவி பதிவான முகத்தை வைத்து முகவரியை கண்டுபிடித்து விட்டார். இதன் பிறகு ஒரு பொன்னாடையும் ஒரு விருதையும் ஏற்பாடு செய்து தன்னுடைய மனைவி சுபாவை அழைத்துக் கொண்டு அந்த திருடனின் வீட்டை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
Also Read: Crime: டெலிவரி பாய் வேடம்.. தொடர் திருட்டு.. சென்னையில் இருவர் கைது!
ஆனால் அவரின் நேரம் அந்த திருடன் இவர்கள் செல்லும் வழியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தான். உடனடியாக காரை நிறுத்திய அனீஷ் அந்த நபரை அழைத்து அவருக்கு பொன்னாடை அணிவித்து, மீசை மாதவன் என்ற விருதை வழங்கியுள்ளார். ஏன் தனக்கு இப்படி நடக்கிறது என புரியாமல் குழம்பிய அந்த நபருக்கு சிறிது நேரத்தில் அனீஷின் கடையில் திருடியது நினைவுக்கு வந்தது.
இந்த சம்பவத்தை அனீஸ் வீடியோவாக எடுத்து தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட அது மிகப்பெரியளவில் வைரலானது. அனிஷின் இந்த செயலுக்கு ஒரு பக்கம் பாராட்டும், மறுபக்கம் கடும் கண்டனங்களும் எழுந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அனீஷ், ‘முதலில் அந்த நபரை காவல்துறையில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவருக்கு இனிமேல் வேறு எங்கும் திருடன் மனம் வரக்கூடாது என்பதற்காகவே இப்படி ஒரு திட்டத்தை நடத்தினேன்’ என தெரிவித்துள்ளார்.