சபரிமலையில் நகைகள் மாயம்.. வெளியான திடுக் தகவல்!
Sabarimala: சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருடப்பட்ட தங்கம் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. திருடப்பட்ட தங்கத்தை பிரபல நகைக்கடை மூலம் விற்பனை செய்ததாகவும்,இதற்காக நடந்த பண பரிவர்த்தனையை சென்னையை சேர்ந்த நிறுவனம் செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோயில் நடையில் பதிக்கப்பட்டிருந்த தங்கத் தகடுகள் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், பழுது நீக்கி திரும்பி பொருத்தும் போது இந்த திருட்டு நடந்துள்ளது.
கேரளா, அக்டோபர் 24: கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு சொந்தமான தங்கம் காணாமல் போன சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, இந்த திருட்டில் சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று உதவியாக இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நடைபெற்ற இத்திருட்டு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த திருட்டு வழக்கு தொடர்பாக அம்மாநில உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. அந்த விசாரணை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த திருட்டிற்கு உதவியவர்கள் குறித்த விவரங்களும் வெளிவர தொடங்கியுள்ளன.
சபரிமலை கோயிலில் மாயமான தங்கம்:
கடந்த 1998ம் ஆண்டு சபரிமலை கோயிலுக்கு பெங்களூருவைச் சேர்ந்த யுனைடெட் ப்ரிவரீஸ் நிறுவனம் சார்பில் அதன் நிறுவனர் விஜய் மல்லையா சுமார் 30 கிலோ தங்கத்தை கொடையாக வழங்கினார். இந்த தங்கம் கோயில் ஆபரணங்கள், வேலைப்பாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. அப்படி, கோயிலின் துவாரபாலகர்கள் சிலை மீது அணிவிக்கப்பட்டிருந்த கவசங்களிலும் இந்த தங்கங்கள் பொருத்தப்பட்டது. இந்நிலையில், சிலைகள் மீது அணிவிக்கப்பட்டிருந்த இந்த தங்க கவசத்தை செப்பனிட்டு தருவதாக பெங்களூருவைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்பவர் முன்வந்துள்ளார். இந்த பணிகளை சென்னையில் உள்ள ஸ்மார்ட் க்ரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் செய்து தருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று, கடந்த 2019ல் தேவசம் அதிகாரிகள் தங்க கவசத்தை உன்னிகிருஷ்ணனிடம் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து, சில மாதங்களுக்கு பின்னர் அந்த கவசம் செப்பனிடப்பட்டு தேவசம் அதிகாரிகளிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், அதன்பின்னர் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.




Also read: வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
திருட்டு வெளிச்சத்திற்கு வந்தது எப்போது?
இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் கோயில் தங்க கவசத்தை செப்பனிடும் பணிக்காக மீண்டும் உன்னிகிருஷ்ணனிடமே வழங்கலாம் என தேவசம் வாரியம் முடிவெடுத்திருந்தது. இதனிடையே, கோவிலின் சிறப்பு ஆணையர் தங்க கவசங்கள் அனுமதி இல்லாமலேயே சீரமைப்பு பணிக்காக ஒப்படைக்கப்படுவதாக கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதோடு, இந்த சீரமைப்பு பணியின் போது 4.5 கிலோ வரை நகைகள் எடை குறைந்துள்ளதாகவும், கோயில் பதிவேட்டில் தங்கம் இருந்ததை மறைத்து செம்பு தகடு என்று குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியிருந்தார். இதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கோயில் நகைகள் சீரமைப்பு பணிகள் முடிவற்ற பின் நடிகர் ஜெயராம் வீட்டில் அந்த நகைகளை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றதாகவும், இதில் பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டதும் தெரியவந்தது. அதாவது, உன்னிகிருஷ்ணன் இந்த தங்க நகைகளை பல பிரங்களின் வீடுகளுக்கு எடுத்துச் சென்று காண்பித்து பணம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Also read: திருமணத்தை மீறிய உறவில் இருந்த பெண்.. கோடாரியால் தலையில் அடித்து கொலை செய்த காதலன்!
இடைத்தரகரான சென்னை நிறுவனம்:
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் திருடப்பட்ட தங்கம், கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள நகைக்கடையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 476 கிராம் தங்கம், கோவர்த்தன் என்பவருக்குச் சொந்தமான ரோத்தம் ஜூவல்லரி மூலம் விற்கப்பட்டுள்ளதாகவும், சென்னையை சேர்ந்த நிறுவனம் இந்த பண பரிவர்த்தனைக்கு இடைத்தரகாரக செயல்பட்டதாகவும் சிறப்பு புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.