Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Sabarimala: சபரிமலையில் காணாமல் போன தங்கம்.. என்ன நடந்தது?

பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கிய 30 கிலோ தங்கம், பழுதுபார்ப்பின் போது காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், உண்மை வெளிவர அரசியல் கட்சிகளும் குரல் கொடுத்துள்ளன.

Sabarimala: சபரிமலையில் காணாமல் போன தங்கம்.. என்ன நடந்தது?
சபரிமலை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 04 Oct 2025 12:55 PM IST

கேரளா, அக்டோபர் 4: கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வழங்கிய தங்கத்தின் ஒரு பகுதி காணாமல் போயிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளது. அம்மாநிலத்தின் காவல் தெய்வமாக அறியப்படும் இக்கோயிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருகின்றனர். அப்படியான இக்கோயில் திருவாங்கூர் தேவசம் போர்டு கீழ் இயங்கினாலும் இங்கு எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாலும் கேரள உயர்நீதிமன்றத்தின் அனுமதி பெற வேண்டும். இப்படி கடும் கட்டுப்பாடுகள் இருந்தும் சபரிமலையில் அவ்வப்போது முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கடந்த 27 வருடங்களுக்கு முன்பு பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தங்கத் தகடுகள் பதிப்பதற்காக வழங்கிய 30.300 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை கோயிலில் தங்க தகடுகள் பதிக்க வேண்டும் என கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திருவிதாங்கூர் தேவசம்போர்டு முடிவு செய்து நிலையில் இதனை அறிந்த விஜய் மல்லையா தான் அந்த பணியை செய்து தருவதாக உறுதியளித்தார்.

இதையும் படிங்க: சபரிமலையில் பக்தர்களின் பயண அனுபவத்தை மேம்படுத்த 6 கோரிக்கைகள் – உலக மலையாளி கவுன்சிலின் துணைத் தலைவர் கோரிக்கை

அதன்படி 1998 ஆம் ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலின் கூரை, கதவு, நடை, முன்புறமுள்ள துவார பாலகர் சிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் தங்க தகடுகள் பதிக்கப்பட்டன. இதற்காக 1900 கிலோ செம்பும், 30.300 கிலோ தங்கமும் விஜய மல்லையா வழங்கினார். இதனிடையே 2019 ஆம் ஆண்டு கோயில் நடையில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகள் பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டது.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி என்பவர் இந்த பழுதுபாக்கும் பணிகளை  இலவசமாக செய்து தருவதாக எடுத்துச் சென்றுள்ளார். சென்னைக்கு செல்லும்போது இவற்றின் மொத்த எடை 42 கிலோவுக்கும் மேல் இருந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பணிகள் முடிந்து சபரிமலைக்கு மீண்டும் கொண்டு வந்த போது இதன் எடை 4 கிலோ வரை குறைந்த இருந்தது கண்டறியப்பட்டது.

இப்போது இந்த விவகாரம் வெளியே தெரிய வந்துள்ளது.  இப்படியான நிலையில் சென்னைக்கு கொண்டுவரப்பட்ட துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்க தகடுகளில் தங்கம் எதுவும் இல்லை அவை முழுவதும் செம்பு தகடுகள் என பழுது பார்த்த சென்னை நிறுவனம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: சபரிமலை ஐயப்பனால் நிகழ்ந்த அற்புதம்.. நடிகர் ராஜ்கமலின் ஆன்மிக அனுபவம்!

இதற்கிடையில் 2019 ஆம் ஆண்டு உன்னிகிருஷ்ணன் போற்றி துவாரபாலகர் சிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தகடுகளை பழுது பார்ப்பதற்காக சென்னைக்கு கொண்டு சென்றார். சென்னை அம்பத்தூரில் உள்ள நிறுவனத்தில் அதை பழுது பார்க்கப்பட்ட நிலையில் பணிகள் முடிவற்ற பின் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் ஜெயராம், பிரபல பக்தி பாடகர் வீரமணி ராஜு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இதன் பின் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து தங்க  தகடுகளுக்கு பூஜை நடைபெற்றதை நடிகர் ஜெயராம் உறுதி செய்துள்ளார். அதே சமயம் உன்னிகிருஷ்ணன் போற்றி இதன் புகைப்படம், வீடியோக்களை காட்டி பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்ததாகவும், அதற்காக அவர்களின் இடங்களுக்கு இந்த தங்க தகடுகளை கொண்டு சென்றதாகவும் புகார் எழுந்துள்ளது.

திருவனந்தபுரத்தின் புறநகர்ப் பகுதியான கிளிமானூருக்கு அருகிலுள்ள புலிமாத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போற்றி, கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் சொத்துக்களை வாங்கியதாகவும் சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த தேவசம்போர்டு லஞ்ச ஒழிப்பு துறையின் தீர்மானித்துள்ளது. அதேசமயம் கேரள மாநில அரசும், தேவசம் போர்டும் உண்மையை வெளிக்கொணர வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என பாஜக, காங்கிரஸ் கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.