ஒரே நாளில் 1,000 விமானங்களை ரத்து செய்த இண்டிகோ.. டிக்கெட் முன்பதிவு செய்த பொதுமக்கள் அவதி!
Indigo Cancelled 1000 Flights In a One Single Day | டிசம்பர் 1, 2025 முதல் இண்டிகோ நிறுவனம் கடுமையான சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று (டிசம்பர் 05, 2025) ஒரே நாளில் மட்டும் 1,000 விமானங்களை ரத்து செய்துள்ளது.

மாதிரி புகைப்படம்
டெல்லி, டிசம்பர் 06 : சிவில் விமான போக்குவரத்து துறையின் புதிய விதிகளை பின்பற்றி கூடுதல் விமானிகள் மற்றும் விமான பணியாளர்களை நியமிக்காததன் காரணமாக இண்டிகோ (Indigo) நிறுவனம் தனது நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து வருகிறது. குறிப்பாக நேற்று (டிசம்பர் 05, 2025) ஒரே நாளில் மட்டும் இண்டிகோ சுமார் 1,000 விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்த நிலையில், இண்டிகோ விமான நிறுவனம் இத்தகைய கடுமையான சவாலை எதிர்க்கொள்ள என்ன காரணம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சிவில் விமான போக்குவரத்து துறையின் புதிய விதிகள் கூறுவது என்ன
விமான விபத்துக்கள் உள்ளிட்ட சிக்கல்களை எதிர்க்கொள்ள டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் விமான நிறுவனங்களுக்கு சிவில் விமான போக்குவரத்து துறை சில புதிய விதிகளை அறிமுகம் செய்தது. அந்த விதிகளின் படி, ஒரு விமானி தொடர்ந்து 18 மணி நேரம் விமானத்தை இயக்கலாம் என்பது மாறி ஒரு விமானி ஒரு நாளுக்கு 8 மணி நேரம் மட்டுமே பறக்க வேண்டும் என்று ஆனது. இதேபோல வாரத்தில் 48 மணி நேரம் கட்டாய விடுமுறை வழங்க வேண்டும் உள்ளிட்ட சில முக்கிய விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விதிகளை பின்பற்றாத விமான நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும், அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு அடித்த ஜாக்பாட்…ரஷ்ய அதிபர் கொடுத்த பரிசு!
கூடுதல் விமானிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்காமல் இருந்த இண்டிகோ
மேற்குறிப்பிட்டுள்ள விதிகளை பின்பற்ற இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், ஏர் இந்தியா, ஆகாசா, ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் கூடுதல் விமானிகள் மற்றும் பணியாளர்களை நியமிக்க தொடங்கியது. ஆனால், இண்டிகோ நிறுவனம் விதிகளின் படி கூடுதல் விமானிகளையோ, பணியாட்களையோ நியமிக்கவில்லை. இந்த நிலையில், டிசம்பர் 1, 2025 முதல் இண்டிகோ நிறுவனம் கடும் சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. போதிய விமானிகள் இல்லாததன் காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்து வருகிறது.
இதையும் படிங்க : கொடூர விபத்து…காரில் 8 மணி நேரம் உயிருக்கு போராடி பலியான தம்பதி!
இண்டிகோ நிறுவனம் தொடர்ந்து விமானங்களை ரத்து செய்து வந்த நிலையில், நேற்று (டிசம்பர் 05, 2025) ஒரே நாளில் மட்டும் 1,000 விமானங்களை ரத்து செய்துள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்திருந்த பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் டிசம்பர் 10, 2025 முதல் டிசம்பர் 15, 2025-க்குள் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பும் என்று இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.