பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வீட்டிலேயே இருங்கள்.. குஜராத் போலீஸ் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு!
Gujarat Police Posters Spark Outrage | பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து போலீசார் போஸ்டர்கள் ஒட்டுவது, ஒலிப்பெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அனைத்தும் வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில் பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாப்பாக இருக்க குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் போலீசார் ஒட்டிய போஸ்டர்கள் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

மாதிரி புகைப்படம்
குஜராத், ஆகஸ்ட் 03 : குஜராத்தில் (Gujarat) பெண்கள் பாலியல் வன்கொடுமைகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக காவல்துறையால் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்த போஸ்டர்களில் இரவில் வெளியே செல்லாதீர்கள், நண்பர்களுடன் தனியாக செல்லாதீர்கள் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவற்றில் என்ன இடம்பெற்றுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பாலியல் வன்கொடுமை விழிப்புணர்வு – காவல்துறை ஒட்டிய சர்ச்சை போஸ்டர்
குஜராத்தின் ஆமதாபாத் போலீசார் சார்பில் நகரின் பல இடங்களில் பாலியல் வன்கொடைமைக்கான விழிப்புணர் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அந்த போஸ்டர்களில் பெண்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் சில சர்ச்சைக்குரிய வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அதாவது நள்ளிரவில் பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமைக்கும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கும் ஆளாக நேரிடும்.
இதையும் படிங்க : சிறுவன் கடத்தப்பட்டு கொலை.. ரூ.5 லட்சம் தராததால் ஆத்திரம்.. அதிர்ந்த பெங்களூரு!
உங்கள் நண்பர்களுடன் இருட்டான இடங்களுக்கு செல்ல வேண்டாம். நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படவோ, கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்படவோ ஆளாக நேரிடலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. நகரின் முக்கிய பகுதிகளில் சாலைகளில் இந்த போஸ்டர்கள் ஓட்டப்பட்ட இருந்தது கடும் அதிர்ச்சியும், பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த போஸ்டர்கள் பொதுமக்களின் கோபத்தை தூண்டும் விதமாக அமைந்த நிலையில், உடனடியாக அந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளன.
கடுமையாக விமர்சனம் செய்த எதிர்க்கட்சி
இந்த போஸ்டர் விவகாரம் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அது குறித்து எதிர்க்கட்சியான ஆம்ஆத்மி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தது. அதாவது, மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை இந்த போஸ்டர்கள் அம்பலப்படுத்தி இருப்பதாக அது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதையும் படிங்க : Hyderabad Child Marriage: ஹைதராபாத் அதிர்ச்சி! 40 வயது ஆண் 8ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த கொடூரம்.. 5 பேர் கைது!
போஸ்டர் விளக்கம் அளித்த காவல்துறை
இந்த விவகாரம் தீவிரம் அடைந்த நிலையில் அது குறித்து காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதாவது, அந்த போஸ்டர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது என்றும் அது சாலை பாதுகாப்புக்கான விழிப்புணர்வே தவிர பெண்களின் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டர்களில் இடம் பெற்றுள்ள வாதங்கள் குறித்து போலீசாருக்கு தெரியாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.