பிரதமர் மோடியின் ஐரோப்பா சுற்றுப்பயணம்… இந்தியாவிற்கு 70 பில்லியன் டாலர் வர்த்தக வாய்ப்பு?
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 15, 2026 அன்று ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். இந்த நிலையில் இந்த பயணத்தில் இந்தியாவுக்கு 70 பில்லியன் டாலர் வர்த்தக வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருகிற மே 15 முதல் 20, 2026 ஆகிய 5 நாட்கள் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கு முக்கிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பயணம் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் முதலீட்டுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையலாம் என இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
70 பில்லியன் டாலர் வர்த்தக வாய்ப்பு
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.சி. ரால்ஹன் இதுகுறித்து தெரிவித்ததாவது, இந்த 5 நாடுகளுடனான இந்தியாவின் மொத்த இருதரப்பு வர்த்தகம் தற்போது 70 பில்லியன் டாலரை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற சூழல் நிலவி வரும் நேரத்தில், இந்த சுற்றுப்பயணம் இந்தியாவுக்கு புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் முக்கிய வர்த்தகம் செய்யும் நாடுகளில் ஒன்றாக உள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்திய பொருட்கள் செல்லும் முக்கிய நுழைவாயிலாக ஐக்கிய அரபு அமீரகம் செயல்பட்டு வருகிறது. இந்த பயணத்தின் மூலம், எரிசக்தி, கட்டமைப்பு மேம்பாடு, முதலீடுகள், சேவைத் துறை வர்த்தகம் போன்ற துறைகளில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளுடன் புதிய வாய்ப்புகள்
இந்த சுற்றுப்பயணம், சமீபத்தில் நிறைவு செய்யப்பட்ட இந்தியா – ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பசுமை ஹைட்ரஜன், செமி கண்டக்டர், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் டிரேட் போன்ற எதிர்கால தொழில்நுட்ப துறைகளில் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து செயல்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடைபெறும் இந்தியா மற்றும் நார்டிக் உச்சிமாநாடு பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில், மறு சுழற்சி சக்தி, காலநிலை தொழில்நுட்பம், மேம்பட்ட உற்பத்தி தொழிநுட்பம் போன்ற துறைகளில் இந்தியா மற்றும் நார்டிக் நாடுகள் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி
இந்த சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, தொழில்துறைக்கான ஐரோப்பிய வட்ட மேசை மாநாடு மற்றும் இந்தியா – நார்வே வணிக மற்றும் ஆராய்ச்சி மாநாடு போன்ற தொழில் மற்றும் முதலீட்டு மாநாடுகளிலும் பங்கேற்க உள்ளார். இதன் மூலம் இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிக்கவும், இந்திய நிறுவனங்களுக்கு புதிய ஏற்றுமதி சந்தைகளை உருவாக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும், இந்த சுற்றுப்பயணத்தின் வெற்றியை வெறும் அறிவிப்புகள் மூலம் அளவிட முடியாது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.