மதுபானம் அருந்திய பின் நடந்தது என்ன? முசோரியில் இளம் பெண் உயிரிழப்பு
தகவல் கிடைத்ததும் முசோரி காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர்கள், காயத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அறையில் இருந்து இரண்டு காலி மதுபான பாட்டில்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஜூன் 16, 2026: உத்தரகாண்ட் மாநிலத்தின் முசோரியில் உள்ள தனியார் ஹோம் ஸ்டே விடுதியில், டெல்லியைச் சேர்ந்த 27 வயது ஐ.டி. பெண் ஊழியர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் பி. ராதா காயத்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் குருகிராமில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்ததுடன், டெல்லி கிட்வாய் நகர் கிழக்கு பகுதியில் வசித்து வந்துள்ளார்.
காயத்ரி தனது கணவர் சௌம்யா ஸ்ரீசரணுடன் சுற்றுலா பயணமாக முசோரிக்கு சென்றிருந்தார். ஸ்ரீசரணும் ஐ.டி. துறையில் பணியாற்றி வருகிறார். இவர் புனேவில் வேலை செய்து வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
முசோரிக்கு சுற்றுலா சென்ற தம்பதியினர்:
கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு, டெல்லியில் இருந்து ரிஷிகேஷ் வழியாக பயணம் செய்த தம்பதியினர், முசோரியில் உள்ள டிப்ரிதார் பகுதியில் அமைந்துள்ள ‘கியானா ஹோம் ஸ்டே’ விடுதியில் தங்கியுள்ளனர். ‘ப்ளிஸ்’ என்ற அறையில் இரவு சுமார் 11.30 மணியளவில் அவர்கள் செக்-இன் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: மருத்துவர் பரிந்துரை இல்லாமல் இனி இருமல் மருந்து விற்பனைக்கு தடை.. மத்திய அரசு அறிவிப்பு..
கணவர் அளித்த தகவலின்படி, இருவரும் இரவில் மதுபானம் அருந்திய பின்னர் அதிகாலை 3.30 மணியளவில் தூங்கச் சென்றுள்ளனர். பின்னர் காலை எழுந்தபோது, தனது மனைவி ஆடையின்றி தரையில் உயிரற்ற நிலையில் கிடந்ததையும், மூக்கில் இருந்து ரத்தம் வடிந்திருந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த காயத்ரி:
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் முசோரி காவல்துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவ ஊழியர்கள், காயத்ரி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அறையில் இருந்து இரண்டு காலி மதுபான பாட்டில்கள், உணவுப் பொருட்கள் மற்றும் ரத்தக்கறை படிந்த படுக்கை விரிப்புகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீஸ்:
இந்த தம்பதியினர் கடந்த 2025 நவம்பர் 8ஆம் தேதி திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரும் ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. காயத்ரியின் உடல் டேராடூனில் உள்ள கொரோனேஷன் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர்கள் குழு மூலம் வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில் உடற்கூறு ஆய்வு நடத்த காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.