புதையலுக்கு ஆசைப்பட்டு 1 வயது குழந்தையை பலி கொடுக்க முயற்சி.. பெங்களூரில் பகீர் சம்பவம்!
Couple Tried To Sacrifice One Year Old Infant | பொதுமக்களிடையே மூட நம்பிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அது சில நேரங்களில் மிக கொடூரமான செயல்களை செய்ய தூண்டுகிறது. அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த கணவன் - மனைவி இருவர் 1 வயது குழந்தையை பலி கொடுக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு, ஜனவரி 04 : கர்நாடகா (Karnataka) மாநிலம், பெங்களூரு (Bengaluru) மாவட்டத்தில் உள்ள ஹோஸ்கோட் நகரில் உள்ள சுலிபெள்ளி பகுதியில் வசித்து வருபவர் சையது இம்ரான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளி ஒருவரிடம் இருந்து இம்ரான் மற்றும் அவரது மனைவி ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்துள்ளனர். ஆனால், அவர்கள் சட்டப்படி இந்த தத்தெடுப்பை மேற்கொள்ளவில்லை. மாறாக போலியான பிறப்பு சான்றிதழ், மற்றும் குழந்தையின் உண்மையான தந்தையுடன் அவர்கள் ஒப்பந்தம் போட்டுக்கொண்டு அவர்கள் அந்த குழந்தையை தத்தெடுத்து வந்துள்ளனர்.
குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற தம்பதி
குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்த அவர்கள் நேற்று (ஜனவரி 03, 2026) பவுர்ணமி தினத்தில் அந்த குழந்தையை பலி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். இது குறித்து அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தை தொடர்ப்புக்கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் இம்ரான் மற்றும் அவரது மனைவி 1 வயது ஆண் குழந்தையை நரபலி கொடுக்க ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும், அதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க : குடிபோதையில் விமானி.. நிறுத்தப்பட்ட விமானம்.. ஏர் இந்தியா ஷாக் சம்பவம்




உடனடியாக அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர்
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்த மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு, குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண் பிரிவு அதிகாரிகள் இம்ரானின் வீடு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு அறையில் சிறியதாக குழி தோண்டப்பட்டு அதற்கு அருகே ஊதுபத்தி, மலர்கள் உள்ளிட்ட பூஜைக்கு தேவையான பொருட்கள் வைக்கப்பட்டு இருந்துள்ளன. அதனை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளான போலீசார் குழந்தையை மீட்டு பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க : ஹெல்மெட்டுக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு.. நடுங்கிப்போன குடும்பம்.. வெளியான ஷாக்கிங் வீடியோ
புதையல் கிடைக்கும் ஆசையில் கணவன் – மனைவி இணைந்து இந்த கொடூரத்தை நிகழ்த்த இருந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நல குழுவினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.