மத்திய பட்ஜெட் குறித்து டெல்லியில் ஆலோசனை.. தமிழகத்திற்கு ரூ.18,500 கோடியை ஒதுக்க கோரிக்கை..
Budget 2026: சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்மாற்றங்களால் மாநில அரசுகளின் வருவாய் குறைந்து வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதை சரி செய்ய இழப்பீட்டு முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை.
டெல்லி, ஜனவரி 11: வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்குகிறது. மத்திய அரசின் பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இது இந்தியாவின் 88வது பட்ஜெட்டும், நிர்மலா சீதாராமன் முன்வைக்கும் 9வது பட்ஜெட்டும் ஆகும். பட்ஜெட்டிற்கான தொடக்க ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, மாநில நிதி அமைச்சர்கள் உடன் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் உள்ள அசோக் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். அனைத்து மாநிலங்களின் நிதி அமைச்சர்களும் உயர் அதிகாரிகளும் அதில் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி கூட்டத்தில் கலந்து கொண்ட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
இதையும் படிக்க: 17 செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-62.. இன்று தொடங்கும் கவுண்ட்டவுன்!
மெட்ரோ நிதியை பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்:
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு 2024 அக்டோபரில் வழங்கியது. அதற்கான மத்திய அரசின் பங்கான ரூ.9,500 கோடி இன்னும் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு தனது பங்கை ஏற்கனவே செலவிட்டுள்ளது. எனவே இந்தத் தொகையை பட்ஜெட்டில் உடனடியாக ஒதுக்க வேண்டும். மதுரை, கோவை மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கான விரிவான அறிக்கைகள் மத்திய அரசால் பரிசீலித்து உடனான ஒப்புதல் வழங்கப்பட வேண்டும்.
ஜவுளித்துறைக்கு பெரும் பாதிப்பு:
அமெரிக்காவின் வரி உயர்வால் ஜவுளி துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. 75 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் துறையில் வேலை பெறுகின்றனர். இதை தேசிய பொருளாதார நெருக்கடியாக மத்திய அரசு கருத வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் விட்டால் 30 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.
தமிழகத்திற்கு ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு:
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்மாற்றங்களால் மாநில அரசுகளின் வருவாய் குறைந்து வருகிறது. இந்த நிதியாண்டில் மட்டும் தமிழகத்திற்கு ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே இதை சரி செய்ய இழப்பீட்டு முறைமை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிக்காக மத்திய அரசிடம் ரூ.18,500 கோடி நிலுவை நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: மும்பையில் ஐஎஸ்ஐ ஆதரவுடன் பயங்கரவாத தாக்குதல் எச்சரிக்கை…மாநிலத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு!
தமிழக அரசின் திட்டங்களுக்கான மத்திய அரசின் பங்களிப்புத் தொகையான ரூ.18,443 கோடியை மத்திய பட்ஜெட்டில் அவசியமாக இடம்பெறச் செய்ய வேண்டும்
என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.