கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைப்பு!
Sugarcane Farmers Demand: இந்த ஆய்வின்போது விவசாயிகள், சர்க்கரை ஆலை சங்கங்கள், மாநில அரசுகள், நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் குழு ஆலோசனை நடத்தும். ஆய்வு முடிவுகள் மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 14, 2026: கரும்பு விவசாயிகள் முன்வைத்துள்ள கோரிக்கைகளை ஆய்வு செய்து, அவற்றுக்குத் தீர்வு காண உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக, நிதி ஆயோக் முன்னாள் உறுப்பினர் பேராசிரியர் ரமேஷ் சந்த் தலைமையில் மத்திய அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகளின் பிரதிநிதிகள், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மற்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர்களுடன் நடத்திய ஆலோசனையைத் தொடர்ந்து இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கரும்புக்கான விலை நிர்ணயம் குறித்து ஆய்வு
கரும்பு சாகுபடிச் செலவுகள் உள்ளிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு, விவசாயிகளுக்குக் கிடைக்கும் நியாயமான வருவாயை அதிகரிப்பது தொடர்பான கோரிக்கையை இக்குழு ஆய்வு செய்யும். சர்க்கரை உற்பத்திச் செலவு, சந்தை விற்பனை வருவாய் மற்றும் சர்க்கரை ஆலைகளின் நிதிநிலை ஆகியவற்றின் அடிப்படையில், ஆலைகளிலிருந்து விற்பனை செய்யப்படும் சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) மாற்றியமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும் படிக்க: வெடிகுண்டு, கடத்தல் எச்சரிக்கை? அவசரமாக தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்.. நடந்தது என்ன?
மேலும், சர்க்கரையின் மீட்பு விகிதத்தைக் கணக்கிடும் நடைமுறைகள், அதன் அளவீடுகளை வெளிப்படையாகச் சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் சர்க்கரை ஆலைகளில் கரும்பின் எடையை அளவிடும் முறைகள் குறித்தும் குழு ஆய்வு செய்யும்.
இயந்திரம் மூலம் அறுவடை செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்
இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்யப்படும் கரும்பின் எடையில் மேற்கொள்ளப்படும் கழிவுகள், அவற்றால் ஏற்படும் உண்மையான இழப்புகள் மற்றும் விவசாயிகளுக்குக் கிடைக்கும் கரும்பு விலையில் ஏற்படும் நிதிப் பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.
இந்த ஆய்வின்போது விவசாயிகள், சர்க்கரை ஆலை சங்கங்கள், மாநில அரசுகள், நிபுணர்கள் மற்றும் தொடர்புடைய அமைப்புகளுடன் குழு ஆலோசனை நடத்தும். ஆய்வு முடிவுகள் மற்றும் குறிப்பிட்ட பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை விரைவில் உரிய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள்
இக்குழுவின் தலைவரான பேராசிரியர் ரமேஷ் சந்த், 2015 முதல் 2026 வரை நிதி ஆயோக் உறுப்பினராகப் பணியாற்றியவர். வேளாண் வளர்ச்சி, விவசாயிகள் நலன், உணவுப் பாதுகாப்பு, வேளாண் சந்தைகள் மற்றும் விலை நிர்ணயக் கொள்கைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை ஆணையர், உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் சர்க்கரைப் பிரிவு இணைச் செயலர், நுகர்வோர் விவகாரத் துறையின் சட்ட அளவியல் பிரிவு இணைச் செயலர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.