பீகாரில் முதற்கட்ட தேர்தல் நிறைவு: இதுவரை இல்லாத அளவாக 64% வாக்குப்பதிவு!!
Bihar records Highest turnout: பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்த போதிலும், ஒரு சில பகுதிகளில் லேசான வன்முறை சம்பங்களும் நிகழ்ந்துள்ளன. அதேசமயம், இரவு வரை காத்திருந்து கூட மக்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றியதன் மூலம் அங்கு முதற்கட்ட வாக்குபதிவில் அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளன.
பீகார், நவம்பர் 07: பீகார் சட்டப்பேரவை தேர்தலில் முதல்கட்டமாக 121 தொகுதிகளில் நேற்று நடந்த வாக்குப்பதிவில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நீடித்தது. பதற்றமான 56வாக்குச்சாவடிகளில் மாலை 5 மணிக்கே வாக்குப்பதிவு முடிந்தது. 400 வாக்குச்சாவடிகளில் இரவை கடந்தும் வாக்குப்பதிவு நீடித்தது. இரவு 8 மணி நிலவரப்படி, 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பெரும்பாலான பகுதிகளில் வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. வைஷாலி பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், ஆர்ஜேடி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஆர்ஜேடி தொண்டர்கள் கற்களை வீசிதாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இதையும் படிக்க: Rahul Gandhi: ஹரியானா தேர்தலில் பிரேசில் மாடல் பெயர் எப்படி..? தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி சரமாரி கேள்வி
பீகார் முதற்கட்ட வாக்குப்பதிவு:
பீகாரின் 18 மாவட்டங்களில் உள்ள 121 தொகுதிகளில், முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இதற்காக அங்கு மொத்தம், 45,341 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. அதில், 36,733 வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் உள்ளவை ஆகும். அங்கு மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 கோடியே 42 லட்சம். இவர்களில் ஆண்கள் 3 கோடியே 92 லட்சம். பெண்கள் 3 கோடியே 50 லட்சம் ஆவர். மொத்தம் 90 ஆயிரத்து 712 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பில் குவிக்கப்பட்டிருந்தனர். பெரும்பாலான தொகுதிகளில், காலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். வழக்கத்தைவிட, இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.




நட்சத்திர வேட்பாளர்கள்:
குறிப்பாக இந்தியா கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் போட்டியிடும் ராகோபூர் தொகுதியிலும், பீகார் துணை முதலமைச்சரும், பாஜக வேட்பாளருமான சாம்ராட் சவுத்ரி போட்டியிடும் தாராப்பூர் தொகுதி, பாஜக வேட்பாளர் விஜயகுமார் சின்ஹா போட்டியிடும் லக்கிசாராய் தொகுதி, தேஜஸ்வி சகோதரரும் ஜனசக்தி ஜனதா தள கட்சி தலைவருமான தேஜ் பிரதாப் யாதவ் போட்டியிடும் மஹூவா தொகுதி, பாஜக வேட்பாளர் பாடகி மைதிலி தாக்கூர் போட்டியிடும் அலிநகர் தொகுதி, ஆர்ஜேடி சார்பில் போட்டியிடும் பாடகர் கேசரி லால் யாதவ் போட்டியிடும் சாப்ரா உள்ளிட்ட தொகுதிகளிலும் நேற்று வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
இதையும் படிக்க : இந்த வகை வாகனங்களுக்கு அனுமதி இல்லை.. டெல்லி அரசு எடுத்த முடிவு!
அதிகபட்ச வாக்குப்பதிவு:
மாலை 5 மணி வரை 60.18% வாக்குகள் பதிவாகியிருந்த நிலையில், கடைசி நேரத்திலும் பலர் காத்திருந்து வாக்களித்தனர். இதனால், முதற்கட்ட தேர்தலில் 64.46% வாக்குகள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் 73 ஆண்டுகளுக்கு பின் அதிகளவு வாக்குப்பதிவு இம்முறை நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 2020-ல் முதல் கட்ட தேர்தலின்போது 56.9% வாக்குகள் பதிவாகின. அதைவிட தற்போது 7.56 சதவீத வாக்குகள் அதிகமாக பதிவாகியுள்ளன.தொடர்ந்து, நவ.11-ல் இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 14-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.