ஜக்தீப் தன்கரின் ராஜினாமா.. அடுத்த துணை ஜனாதிபதி யார்?
Next Vice President: துணை ஜனாதிபதியின் ராஜனாமா முடிவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜினாமாவை தொடர்ந்து அடுத்து துணை ஜனாதிபதி யார் என்பது குறித்த பேச்சுக்களும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் தேர்வு செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

டெல்லி, ஜூலை 22, 2025: இந்தியாவின் துணை ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த ஜக்தீப் தன்கர், தனது உடல் நலக்குறைவு காரணமாக திடீரென நேற்று அதாவது ஜூலை 21 2025 அன்று ராஜினாமா செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டார். 73 வயதான ஜக்தீப் தன்கர் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் எடுத்துக் கொண்டதாகவும் தன்னுடைய உடல்நிலை அவரை தொடர்ந்து அரசியல் மற்றும் நிர்வாக பொறுப்புகளை மேற்கொள்வதில் உள்ள சிரமம் காரணமாக இந்த முடிவை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். துணை ஜனாதிபதியின் இந்த திடீர் முடிவு இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
துணை ஜனாதிபதி ராஜினாமா:
மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களை உள்ளடக்கிய ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில் துணை ஜனாதிபதியின் ராஜனாமா முடிவு, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ராஜினாமாவை தொடர்ந்து அடுத்து துணை ஜனாதிபதி யார் என்பது குறித்த பேச்சுக்களும் விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜக்தீப் தன்கர் முன்னதாக மேற்கு வங்க மாநில ஆளுநராகவும் அதற்கு முந்தைய காலத்தில் மூத்த வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். துணை ஜனாதிபதியாக இவர் 2022 ஆம் ஆண்டு பதவியேற்றார்.
அடுத்த துணை ஜனாதிபதி யார்?
ஆளுநர்களில் ஒருவர் அல்லது அனுபவம் வாய்ந்த நிறுவனத் தலைவர் அல்லது மத்திய அமைச்சர்களில் ஒருவர் அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜக்தீப் தன்கருக்கு முன்னோடியாக இருந்தவர் முன்னாள் பாரத ஜனதா கட்சி தலைவரான வெங்கையா நாயுடு ஆவர். இவர் 2017 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் முக்கிய அரசியலமைப்பு பதவியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: உடல்நலக்குறைவு காரணமாக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா
ஐக்கிய ஜனதா தளம் எம்பி ஆன மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாரயண சிங் 2020 ஆம் ஆண்டு முதல் இந்த பதவியில் பணியாற்றி வருவதாலும், அரசாங்கத்தின் நம்பிக்கையை பெற்றிருப்பதாலும் அவர் அடுத்த துணை ஜனாதிபதியாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: முன்னாள் முதலமைச்சர் வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார்.. அதிர்ச்சியில் கேரள மக்கள்!
ஜகதீப் தண்கரின் மூன்று ஆண்டு பதவி காலத்தில் அவரது விமர்சனங்கள் சில சமயங்களில் ஆளும் அரசாங்கத்திற்கு எதிராக இருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து திடீர் நடவடிக்கையாக ஜகதீப் தன்கர் ராஜினாமா செய்து தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மூவுக்கு அனுப்பி வைத்து உடனடியாக பதவி விலகுவதாக தெரிவித்து இருந்தார்.