புறப்படும்போது ஏற்பட்ட திடீர் இயந்திர கோளாறு.. ரத்து செய்யப்பட்ட ஏர் இந்தியா விமானம்.. டெல்லியில் பரபரப்பு!
Air India Flight Cancelled in Last Minute | டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூலை 31, 2025) ஏர் இந்தியா விமானம் ஒன்று லண்டன் புறப்படுபதற்காக தயாராக இருந்தது. இந்த நிலையில், விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்படவே விமானம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.

புது டெல்லி, ஆகஸ்ட் 01 : டெல்லி (Delhi) விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்ல தயாராக இருந்த ஏர் இந்தியா விமானத்தில் (Air India Flight) திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அந்த விமானம் பாதுகாப்பு கருதி உடனடியாக ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு, புறப்படுவதற்கு தயாராக இருந்தபோது கோளாறு கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் விமானம் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாரான ஏர் இந்தியா விமானம்
டெல்லி விமான நிலையத்தில் இருந்து நாள்தோறும் ஏராளமான விமானங்கள் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்கின்றன. அந்த வகையில், நேற்று (ஜூலை 31, 2025) டெல்லி விமான நிலையத்தில் இருந்து லண்டன் செல்வதற்காக ஏர் இந்தியா விமானம் ஒன்று தயார் நிலையில் இருந்துள்ளது. ஏ.ஐ.2017 என்ற அந்த விமானத்தில் பயணிகள் ஏற்றப்பட்டு புறப்படுவதற்காக தயாராக இருந்தது. அப்போது விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள்.. சிறப்பம்சங்கள் என்னென்ன?




கடைசி நேர ரத்தால் அவதி அடைந்த விமான பயணிகள்
விமானத்தில் இந்த கோளாறு இருப்பதை கண்டுபிடித்த விமான குழு, உடனடியாக விமானத்தின் டேக்-ஆஃபை ரத்து செய்தது. இதன் காரணமாக புறப்பட தயாராக இருந்த விமானத்தை விமானிகள் ஓடுபாதையின் மற்றொரு பகுதிக்கு கொண்டுவந்து நிறுத்தியுள்ளனர். பின்னர் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக அதில் இருந்து வெளியேற்றம் செய்யப்பட்டனர். புறப்பட தயாராக இருக்கும்போது விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகிய நிலையில், அவர்களை வேறு விமானத்தில் பயணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிரேக் பிடிக்காத கண்டெய்னர் லாரி.. அடுத்தடுத்து மோதி நொறுங்கிய 20 வாகனங்கள்.. ஒருவர் பலி!
தொழில்நுட்ப கோளாறு குறித்து விசாரணை
ஏர் இந்தியா விமானம் கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம் போயிங் 787-9 ரகத்தை சேர்ந்தது என தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.