Health Tips: வெள்ளை உணவுகள் உங்களுக்கு விருப்ப உணவுகளா..? இது உடலில் என்ன செய்யும் தெரியுமா..?
White Foods and Health Risks: வெள்ளை சர்க்கரை, அரிசி, உப்பு, சுத்திகரிக்கப்பட்ட மாவு போன்ற வெள்ளை உணவுகளின் அதிகப்படியான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இவை ஊட்டச்சத்து குறைவாகவும், காலி கலோரிகளையும் கொண்டவை. இவற்றின் அதிகப்படியான உட்கொள்ளுதல் சர்க்கரை நோய், உடல் பருமன், இதய நோய்கள் போன்ற ஆபத்துகளை அதிகரிக்கிறது.

நமது அன்றாட வாழ்க்கையில் தேவையான ஆற்றலை பெறுவதற்கு உணவு மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும், நாம் சமையலுக்கு அத்தியாவசிய பொருளாக பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட மாவு, சர்க்கரை (Sugar) மற்றும் உப்பு (Salt) போன்ற சில வெள்ளை நிறப் பொருட்கள் (White foods) உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. இவற்றை அதிகமாக உட்கொள்வது உங்கள் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். ஏதோ ஒன்று சாப்பிட வேண்டும் என்பதற்காக இன்றைய நவீன வாழ்க்கை முறையில் துரித உணவு போன்றவற்றை எடுத்து கொள்கிறோம். இதுபோன்ற உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் பற்றாக்குறையாக உள்ளன.
நமது நாக்கின் ருசிக்காக துரித உணவு, சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக உட்கொள்கிறோம். இந்த உணவுப் பொருட்களை தயாரிக்க, பெரும்பாலும் உப்பு, சர்க்கரை, மாவு, அஜினோமோட்டோ, அரிசி மற்றும் உருளைக்கிழங்கு போன்ற வெள்ளை நிறப் பொருட்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இவை நம் ஆரோக்கியத்திற்கு தீங்கு தரும். இவற்றை அதிகளவில் உட்கொள்வது புற்றுநோய், டைப்-2 சர்க்கரை நோய், உடல் பருமன், மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஒரு நபரின் ஆயுட்காலத்தை 10 ஆண்டுகள் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, எந்தெந்த வெள்ளை உணவுகளில் என்னென்ன ஆபத்துகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வோம்.




சர்க்கரை:
நம் வீட்டில் அன்றாட பயன்படுத்தப்படும் வெள்ளை சர்க்கரையில் எந்த ஊட்டச்சத்துக்களும் இல்லை. இவற்றை காலி கலோரிகள் என்று அழைக்கப்படுகிறது. இவை நம் உடலுக்குள் நுழையும் போது உடனடியாக குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸாக உடைக்கப்படுகிறது. உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்களுக்கு, இது அவர்களின் உடலில் கொழுப்பாக சேமிக்கப்பட்டு சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது தவிர, இது கல்லீரல் பிரச்சினைகள், இன்சுலின் எதிர்ப்பு, பல் பிரச்சினைகள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை உண்டாக்கும் வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
அரிசி:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் வெள்ளை அரிசி அதிக அளவில் உட்கொள்ளப்படுகிறது. இருப்பினும், சுத்திகரிப்பு செயல்முறை அரிசியிலிருந்து உமி மற்றும் கிருமியை நீக்கப்படுகிறது. இதனுடன் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களும் குறைகிறது. பல ஆய்வுகள் வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வது டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. அந்தவகையில், நீங்களும் அரிசி பிரியராக இருந்தால், இதற்கு பதிலாக பிரவுன் அரிசி அல்லது சிவப்பு அரிசியை தேர்வு செய்வது நல்லது.
உப்பு:
உப்பு என்று அழைக்கப்படும் சோடியம் குளோரைடு உடலுக்கு சோடியம் மற்றும் குளோரைடை வழங்குகிறது. ஆனால், இந்த உப்பை அதிகமாக எடுத்துகொள்வது உடலில் உள்ள நீரின் அளவைப் பாதிக்கிறது. மேலும், இது இரத்த நாளங்களை சேதப்படுத்தி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. உப்பை அதிகமாக உட்கொள்வது எலும்புகளை பலவீனப்படுத்துகிறது, வயிற்றுப் புண்கள் மற்றும் புற்றுநோயையும் ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
ALSO READ: வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடலாமா..? யார் யார் சாப்பிடக்கூடாது..?
சுத்திகரிக்கப்பட்ட மாவு:
பிரட், கேக்குகள், பிஸ்கட் போன்ற வெள்ளை மாவிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் சுத்திகரிக்கப்பட்ட மாவு என வகைப்படுத்தப்படுகின்றன. கோதுமை மாவை சுத்திகரிக்கும் செயல்முறை அதன் நார்ச்சத்து, நல்ல கொழுப்புகள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்களை நீக்குகிறது. அதாவது, கோதுமை சுத்திகரிக்கப்பட்ட மாவாக மாற்றப்படும் நேரத்தில் அதில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து ஊட்டச்சத்துக்களும் வெளியேறுகின்றன. சுத்திகரிக்கப்பட்ட மாவு நிறைந்த உணவு ட்ரைகிளிசரைடுகளின் அதிகரிப்புக்கும் நல்ல கொழுப்பின் குறைவுக்கும் வழிவகுக்கும். இதை கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் சாப்பிடும்போது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தையும் அதிகரிக்கிறது.