Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பயமா? மருத்துவர் அஸ்மி சவுந்தர்யா விளக்கம்!

Cervical Cancer: குழந்தைகளுக்கு 9 வயதில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட வேண்டும். 9 முதல் 26 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத 27 முதல் 45 வயதுடையவர்கள் மருத்துவரை அணுகி இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும்.

Health Tips: பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பயமா? மருத்துவர் அஸ்மி சவுந்தர்யா விளக்கம்!
மருத்துவர் அஸ்மி சவுந்தர்யாImage Source: Freepik and instagram
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 30 Jan 2026 15:37 PM IST

உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் ‘கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக’ கடைபிடிக்கப்படுகிறது. இந்தியப் பெண்களிடையே அதிகம் ஏற்படும் புற்றுநோய்களில் (Cancer) இது இரண்டாவது இடத்தில் உள்ளது. உலகளவில் பெண்களைப் பாதிக்கும் புற்றுநோய்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. உலகில் ஏற்படும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் (Cervical Cancer) பாதிப்புகளில் ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒரு பெண் இப்புற்றுநோயால் உயிரிழப்பதாக தெரிய வந்திருக்கிறது. இந்தநிலையில், கிளெனீகல்ஸ் மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். கே. அஸ்மி சவுந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்து விளக்கமளித்துள்ளார்.

ALSO READ: பெண்களுக்கு தைராய்டு புற்றுநோய் வருவதற்கான ஆபத்து.. இதன் அறிகுறிகள் என்ன?

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கான காரணங்கள் என்ன..?

இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் கண்டறியப்படும் பெண்களின் சராசரி வயது சுமார் 38 ஆக உள்ளது. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம், அதிக ஆபத்துள்ள ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்’ எனப்படும் வைரஸ் தொற்று தொடர்ந்து இருப்பதுதான். இது பாலியல் தொடர்பு மூலம் பரவக்கூடிய மிகவும் பொதுவான வைரஸ் ஆகும். பாலியல் உறவு மூலம் பரவக்கூடிய சுமார் 40 வகையான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்கள் உள்ளன. இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டுள்ள பெண்களில் 80 சதவீதம் பேருக்கு இந்த தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோயின் ஆரம்ப கட்டத்தில் பெரும்பாலும் எந்த அறிகுறிகளும் தெரியாது. எனவே, முறையான கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்வது மிகவும் முக்கியம்.

பரிசோதனை என்பது நோய் அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பே நோயை கண்டறியும் சோதனையாகும். ‘ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் பரிசோதனையானது, செல்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய அதிக ஆபத்துள்ள ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று உள்ளதா என்பதைச் சோதிக்கிறது. ‘பேப் ஸ்மியர்’ பரிசோதனையில், கர்ப்பப்பை வாயில் இருந்து செல்கள் சேகரிக்கப்பட்டு, அதில் ஹியூமன் பாப்பிலோமா வைரசால் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா எனப் பார்க்கப்படும். இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டால் அது புற்றுநோயாக மாறக்கூடும். பொதுவாகவே, நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பெரும்பாலான நேரங்களில் இந்த வைரஸை தானாகவே அழித்துவிடும்.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனை என்ன?

 

View this post on Instagram

 

A post shared by Jus’ ONCO (@jusoncocare)


கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை 21 வயதில் தொடங்க வேண்டும். 29 வயது வரை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ‘பேப்’ பரிசோதனை செய்ய வேண்டும். 30 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் பரிசோதனையுடன் ‘பேப் ஸ்மியர்’ பரிசோதனையும் செய்து கொள்ளலாம். பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும், அதற்கு 35 முதல் 45 வயது சிறந்தது என்றும் உலக சுகாதார அமைப்பு பரிந்துரை செய்துள்ளது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசிகள், பெரும்பாலான புற்றுநோய்களுக்குக் காரணமான HPV-16 மற்றும் HPV-18 போன்ற அதிக ஆபத்துள்ள வைரஸ் வகைகளைத் தடுக்க உதவுகின்றன. இந்தத் தடுப்பூசிகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டி, வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்குகின்றன. இதனால் தொற்று மற்றும் புற்றுநோய் உருவாவதைத் தடுக்கிறது. பெரும்பாலான ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்றுகளுக்கு அறிகுறிகள் இருக்காது. எனவே, தங்களுக்குத் தொற்று இருப்பது பலருக்கும் தெரிவதில்லை. பாலியல் தொடர்பு மூலம் இது தங்கள் துணைக்கும் பரவலாம். ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி மூலம், இந்த வைரஸால் ஏற்படும் 90 சதவீதத்துக்கும் அதிகமான புற்றுநோய்களைத் தடுக்க முடியும். ஆனால், இந்தத் தடுப்பூசி எல்லா வகை ஹியூமன் பாப்பிலோமா வைரஸ்களுக்கும் பாதுகாப்பை அளிக்காது. எனவே, பெண்கள் வழக்கமான ‘பேப் ஸ்மியர்’ பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

குழந்தைகளுக்கு 9 வயதில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸ் கொடுக்கப்பட வேண்டும். 9 முதல் 26 வயதுக்குட்பட்ட அனைத்து ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும். இதுவரை தடுப்பூசி போடாத 27 முதல் 45 வயதுடையவர்கள் மருத்துவரை அணுகி இது குறித்து அறிந்து கொள்ள வேண்டும். கர்ப்ப காலத்தில் இந்த தடுப்பூசியை போடக்கூடாது.
கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள் பெரும்பாலும் தாமதமாகவே தெரியும். எனினும், அசாதாரணமான ரத்தப்போக்கு (உடலுறவுக்குப் பின், மாதவிடாய்க்கு இடையில், மெனோபாஸ் நின்ற பிறகு அல்லது அதிகப்படியான ரத்தப்போக்கு), துர்நாற்றத்துடன் கூடிய அல்லது ரத்தம் கலந்த திரவம் வெளியேறுதல், உடலுறவின் போது வலி மற்றும் இடுப்பு வலி போன்றவை இருந்தால் கவனிக்க வேண்டும்.

ALSO READ: குழந்தைக்கு மசாஜா? அப்போ! செய்யக்கூடாத 5 தவறுகள்.. மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!

நோய் முற்றிய நிலையில் சோர்வு, உடல் எடை குறைதல், முதுகு அல்லது கால் வலி மற்றும் சிறுநீர் அல்லது மலம் கழிப்பதில் மாற்றங்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
புற்றுநோயின் வகை மற்றும் அது எந்த நிலையில் உள்ளது என்பதைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும். ஆரம்ப நிலையில் அறுவை சிகிச்சையே போதுமானது. முற்றிய நிலையில் கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை வழங்கப்படும்.

மருத்துவமனை மற்றும் மருத்துவர் பற்றிய விவரம்:

சென்னையில் உள்ள கிளெனீகல்ஸ் மருத்துவமனையில் அனுபவம் வாய்ந்த புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் குழு, முழுமையான புற்றுநோய் சிகிச்சையை சிறப்பாக வழங்கி வருகிறது. கூடுதல் தகவலுக்கு கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். கே. அஸ்மி சவுந்தர்யா இன்ஸ்டாகிராம் பக்கம் இணைக்கப்பட்டுள்ளது.

டாக்டர். கே. அஸ்மி சவுந்தர்யா மருத்துவ ஆலோசகர், கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர், கிளெனீகல்ஸ் மருத்துவமனைகள் – போர்டிஸ் நெட்வொர்க் சென்னை, பெரும்பாக்கம் – சோழிங்கநல்லூர்