Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்: மருத்துவர் ஓவியா விளக்கம்!

Rainy Season Diet for Pregnant Women: மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைபிடிப்பது மிகவும் முக்கியம். டாக்டர் ஓவியா, பழங்கள், காய்கறிகள், வெளி உணவுகள் மற்றும் இறைச்சி ஆகியவற்றை எவ்வாறு பாதுகாப்பாக உட்கொள்வது என்பது குறித்து விரிவாக விளக்குகிறார்.

மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்: மருத்துவர் ஓவியா விளக்கம்!
மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் கவனிக்க வேண்டிய உணவுப் பழக்கங்கள்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Jun 2025 12:26 PM

கர்ப்ப காலம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான காலகட்டமாகும். இந்தக் காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவது மிகவும் அவசியம். அதிலும் குறிப்பாக மழைக்காலத்தில் கர்ப்பிணிகள் தங்கள் உணவில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும், சில உணவுகளுக்கு மழைக்காலத்தில் கண்டிப்பாக ‘நோ’ சொல்ல வேண்டும் என்று மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர். ஓவியா அறிவுறுத்துகிறார். ஆரோக்கியமான உணவுகளாக இருந்தாலும், சரியான முறையில் எடுத்துக்கொள்ளவில்லை என்றால் அவை கர்ப்பிணிக்கும், வயிற்றில் வளரும் குழந்தைக்கும் நல்லதல்ல.

1. பழங்கள் சாப்பிடும்போது கவனம்

மழைக்காலத்தில் பழங்கள் சாப்பிடுவதாக இருந்தால், இரவு நேரங்களில் தவிர்ப்பது பாதுகாப்பானது. பகல் நேரங்களில் பழங்களை மிகவும் சுத்தமாகக் கழுவி சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டும். பழங்களின் தோலில் பாக்டீரியாக்கள் இருக்கலாம். பழங்கள் சத்தானவை என்பதால் அவற்றை முழுமையாகத் தவிர்க்க வேண்டியதில்லை. ஆனால், பழங்களை உப்பு சேர்த்த நீரில் ஊறவைத்து, நன்றாகக் கழுவி பிறகு சாப்பிடுவதை உறுதி செய்யுங்கள்.

தோலோடு சாப்பிடும் பழங்கள் என்றால் கண்டிப்பாகக் கூடுதல் கவனம் தேவை. வெட்டிய பழங்களை நீண்ட நேரம் வைத்திருந்து சாப்பிடுவது கிருமிகள் சேர வாய்ப்பளிக்கும். இதனால் வயிற்றுப்போக்கு, வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, பழங்களை வெட்டியவுடன் சாப்பிடுவது நல்லது.

2. வெட்டிய காய்கறிகள் மற்றும் பச்சையாக உண்பதைத் தவிர்ப்பது

பழங்களைப் போலவே காய்கறிகளிலும் கவனம் தேவை. வெட்டி விற்கப்படும் காய்கறிகளை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும், ஏனெனில் அவற்றில் பாக்டீரியாக்கள் அதிகம் இருக்கலாம். காய்கறிகளைப் புதிதாக வாங்கி, அப்போதே சமைத்துப் பயன்படுத்துவது நல்லது.

அதே போன்று, காய்கறி சாலட், பச்சையாக உண்ணப்படும் காய்கறிகள் அல்லது அரை வேக்காடாகச் சேர்க்கப்படும் உணவுகளையும் மழைக்காலத்தில் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான காய்கறிகளாக இருந்தாலும், பச்சையாகச் சாப்பிடுவது பாதுகாப்பானது அல்ல. வீட்டில் சமைத்த, நன்றாக வேகவைத்த காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது. காய்கறி சாலட்டுக்குப் பதிலாக, சூடான சூப் குடிப்பது உடலுக்கு நல்லது.

3. வெளி உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது

கர்ப்பிணிப் பெண்கள் மழைக்காலத்தில் கண்டிப்பாகத் தெருவோர உணவுகளைத் தவிர்ப்பது மிகவும் அவசியம். கர்ப்பிணிப் பெண்களுக்கு இயல்பாகவே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மழைக்காலத்தில் இது மேலும் குறையும் என்பதால், எளிதில் தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பர்கர், பீட்சா, மைதா உணவுகள், ஜங்க் ஃபுட் வகைகள், செயற்கை இனிப்புகள், ஐஸ்க்ரீம், சோடா, குளிர்பானங்கள் போன்ற எதையும் மழைக்காலத்தில் தொடக்கூடாது. வீட்டில் சமைத்த, இளஞ்சூடாக உள்ள உணவுகளை மட்டுமே சாப்பிடுவது பாதுகாப்பானது. வீட்டிலும் பழைய உணவை வைத்திருந்து சாப்பிட வேண்டாம்.

4. இறைச்சி மற்றும் முட்டை குறித்த எச்சரிக்கை

கர்ப்ப காலத்தில் புரதச்சத்து மிகவும் அவசியம். மீன் மற்றும் இறைச்சி மூலம் புரதம் நிறைய கிடைக்கும். ஆனால் மழைக்காலத்தில் இந்த வகை உணவுகளைக் கவனமாகச் சாப்பிட வேண்டும். குறிப்பாகப் புதிதான இறைச்சிகளை எடுத்துக்கொள்ளலாம், ஆனால் அவற்றை நன்றாக வேகவைத்துச் சாப்பிட வேண்டும்.

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் நம் நாட்டில் பெருமளவு இல்லை என்றாலும், அப்படியான இறைச்சிகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். முட்டை சாப்பிடும் போதும் நன்றாக வேக வைத்துச் சாப்பிட வேண்டும். இதன் மூலம் கிருமிகள் இருந்தாலும் அழிந்துவிடும் வாய்ப்பு உண்டு.

5. நீரேற்றம் மற்றும் பிற உணவுப் பழக்கங்கள்

கர்ப்ப காலத்தில் ஆரோக்கியம் தரும் காய்கறிகள், பழங்கள் என எதையும் முழுமையாகத் தவிர்க்க வேண்டாம். ஆனால் சரியான முறையில் சுத்தம் செய்து சுகாதாரமாகச் சமைத்துச் சாப்பிட வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். காஃபி, டீ போன்ற பானங்களைத் தவிர்த்து அல்லது மிதமாக எடுத்துக்கொண்டு சூப் குடிக்கலாம்.

வெதுவெதுப்பான நீரை அடிக்கடி குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். வீட்டில் சமைத்த உணவுகள் என்றாலும், மழையில் எண்ணெயில் பொரித்த உணவுகளைத் தவிர்த்து, ஆவியில் வேகவைத்த மென்மையான உணவுகளை அவ்வப்போது இளஞ்சூடாகச் சாப்பிடலாம். உப்பு, காரம், எண்ணெய் போன்றவற்றை மழைக்காலத்தில் குறைப்பது மிகவும் பாதுகாப்பானது.