Indian Spices Health Benefits: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய மசாலாக்கள்.. தினம் தினம் ஆரோக்கியம் தரும்!

Boost Immunity with Indian Spices: இந்திய சமையலில் பயன்படுத்தப்படும் மஞ்சள், சீரகம், மல்லி, பெருங்காயம், இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் கருப்பு மிளகு போன்ற மசாலாப் பொருட்கள் சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமானவை. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Indian Spices Health Benefits: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய மசாலாக்கள்.. தினம் தினம் ஆரோக்கியம் தரும்!

இந்திய மசாலா பொருட்கள்

Published: 

14 Aug 2025 14:51 PM

இந்திய சமையலறை (Indian Kitchen) சுவைக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் ஒரு பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை நமது சமையலறையில் மசாலா பொருட்களை வைத்திருக்கும் பெட்டியை அஞ்சறை பெட்டி (Masala dabba) என்று அழைப்போம். இதை திறந்தாலே அவ்வளவு மணமாக இருக்கும். இவற்றை பெரும்பாலும் சமைக்கும் போது சுவையை அதிகரிக்க மட்டுமே மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் அவற்றின் மருத்துவ குணங்களை பற்றி பலரும் அறிவது கிடையாது. குறிப்பாக இந்த மசாலாப் பொருட்களான சீரகம், மஞ்சள் (Turmeric), மல்லி, பெருங்காயம், இஞ்சி, இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் கருப்பு மிளகு ஆகியவை நமது ஆரோக்கியத்திற்கு விலைமதிப்பற்றவை. அதன்படி, இவற்றின் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்வோம்.

மஞ்சள்:

இந்திய வீடுகளில் உள்ள ஒவ்வொரு உணவிலும் மஞ்சள் சிறிதளவு சேர்க்கப்பட்டே சமைக்கப்படுகிறது. மஞ்சளானது வெறும் நிறத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட வில்லை, அதில் உள்ள குர்குமின் வீக்கத்தைக் குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. குளிர்காலத்தில் பாலுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து குடிப்பது உங்களை பாதுகாக்க உதவும். ஆனால், இவற்றை அதிகமாக உட்கொள்வது சில நேரங்களில் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

ALSO READ: பீங்கான் பாத்திரங்களை சமையலுக்கு பயன்படுத்தலாமா..? ஆரோக்கியத்திற்கு தீங்கா..?

சீரகம்:

சீரகம் சுவைக்கு மட்டுமல்ல, செரிமானத்தை மேம்படுத்தவும், வாயு மற்றும் அஜீரணத்தைக் குறைக்கவும் உதவுகிறது. சீரகத்தை நேரடியாக எடுத்து கொள்வதற்கு பதிலாக ஒரு கடாயில் வறுத்தோ அல்லது உணவில் சேர்ப்பதன் மூலமோ பயன்படுத்தலாம். வெறும் வயிற்றில் சீரகத் தண்ணீரைக் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது.

மல்லி:

மல்லி விதைகள் உணவை லேசானதாகவும் மணம் மிக்கதாகவும் மாற்றுவது மட்டுமல்லாமல், அதில் ஆக்ஸிஜனேற்றிகளும் உள்ளன. இது இரத்த சர்க்கரை மற்றும் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சமையலில் காய்கறிகள் மற்றும் குழம்புகளில் மல்லி தூளைப் பயன்படுத்துவது சுவை மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெறுமனே தண்ணீரை கொதிக்க விட்டு, அதில் டீத்தூள் மற்றும் மல்லி விதைகளை போட்டு கொதிக்கவிட்டு ப்ளாக் டீயாகவும் குடிக்கலாம்.

பெருங்காயம்:

வாயு, அமிலத்தன்மை, அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளுக்கு பெருங்காயம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை, வாயு தொல்லை மற்றும் வயிற்றில் ஏற்படும் பிற பிரச்சனைகளை சரி செய்ய உதவி செய்யும்.

இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை:

இஞ்சி செரிமான அமைப்பை பலப்படுத்துவது மட்டுமின்றி, வயிற்றுப் பிடிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இலவங்கப்பட்டை செரிமானத்தை மேம்படுத்துவதிலும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதிலும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ALSO READ: தூங்குவதற்கு முன் “மஞ்சள் பால்” அருந்துவதன் 9 அற்புத ஆரோக்கிய நன்மைகள்!

கிராம்பு மற்றும் கருப்பு மிளகு:

கிராம்பு மற்றும் கருப்பு மிளகு ஆகியவை உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமல்லாமல், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உட்கொள்ளப்படுகின்றன. ஒரு சிறிய அளவு கிராம்பு ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கருப்பு மிளகு செரிமானத்தை மேம்படுத்தும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்திய சமையலறையில் உள்ள இந்த மசாலாப் பொருட்கள் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியம், செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நோய் எதிர்ப்பையும் பலப்படுத்துகின்றன. தினசரி மஞ்சள் பால், சீரகம் அல்லது மல்லி பயன்பாடு, பெருங்காயம் போன்ற சிறிய மாற்றங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பல நிலைகளில் மேம்படுத்தலாம்.