கனவு நிஜமானது… ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகும் நடிகை வரலட்சுமி சரத்குமார்!
Actress Varalaxmi Sarathkumar: தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் நடிகர் சரத்குமாரின் மகளாக அறிமுகம் ஆனார் நடிகை வரலட்சுமி. அதனைத் தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நாயகியாக மட்டும் இல்லாமல் அனைத்துக் கதாப்பாத்திரங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகிறார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார்
தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி பின்பு தமிழ் மற்றும் தெலுங்கு என நடிகையாக கலக்கி வருபவர் நடிகை வரலட்சுமி சரத்குமார் (Actress Varalaxmi Sarathkumar). இவர் தற்போது இந்திய சினிமா தாண்டி ஹாலிவுட்டில் தனது காலடித் தடத்தைப் பதிக்க உள்ளார். தமிழ் சினிமா நடிகர்களில் வெகு சிலரே ஹாலிவுட் சினிமாவில் கால் பதித்து உள்ளனர். தற்போது அந்தப் பட்டியலில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்துள்ளது தமிழ் சினிமாவிற்கு பெருமை என்று ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் இயக்குநர் சந்திரன் ருட்னம் இயக்கும் புதிய ஹாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் படத்தில் பிரபல நடிகர் ஜெர்மி அயர்ன்ஸ் உடன் நடிகை வரலட்சுமி சரத்குமார் இணைந்து நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது இலங்கையில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆவது குறித்து நடிகை வரலட்சுமி சரத்குமார் பேசுகையில், ”என் கனவு நினைவாகி இருக்கிறது. ஹாலிவுட் சினிமாவில் அறிமுகம் ஆவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நடிகையாக வரலட்சுமி சரத்குமார் அறிமுகம் ஆன படம்:
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் சரத்குமார். இவரது மகள் வரலட்சுமி கடந்த 2012-ம் ஆண்டு இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கிய போடா போடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்தப் படம் தான் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் அறிமுகப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நாயகனாக நடித்து இருந்தார். அறிமுகம் ஆன முதல் படத்திலேயே நடிகை வரலட்சுமி சரத்குமார் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து தமிழில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் வெளியான தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டகோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2 என பலப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நாயகியாக மட்டும் இன்றி வில்லியாகவும் நடிகை வரலட்சுமி சரத்குமார் கலக்கி உள்ளார்.
தமிழ் சினிமா மட்டும் இன்றி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் வில்லியாக நடித்து ரசிகர்களை மிரட்டியுள்ள வரலட்சுமி சரத்குமார் தற்போது ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகி அங்கையும் தனது நடிப்பால் மிரட்ட உள்ளார் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.