வருமானத்தை மறைத்ததாக விதிக்கப்பட்ட ரூ.1.5 கோடி அபராதம் – நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த விஜய்
TVK Vijay Moves High Court: கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தனது வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை அவருக்கு ரூ.1.5 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான புலி என்ற படத்தில் நடித்ததற்காக நடிகர் விஜய் 15 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும், அதை வருமான வரி கணக்கில் காட்டாமல் மறைத்ததாகவும் வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதனையடுத்து நடிகர் விஜய் மீது வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்தது. இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், வருமானத்தை மறைத்ததாக தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்துக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் செப்டம்பர் 23, 2025 அன்று விஜய் வழக்கு தொடர்ந்திருந்திருக்கிறார்.
தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு எதிராக விஜய் தொடர்ந்த வழக்கு
வருமானத்துறை தனக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்யக்கோரி நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தனது மனுவில் வருமான வரித்துறை கடந்த 2019 ஆம் ஆண்டு பிறப்பிக்க வேண்டிய உத்தரவை கடந்த 2022 ஆம் ஆண்டு பிறப்பித்ததால் அதனை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
வருமான வரித்துறை வாதம்
இந்த நிலையில் விஜய் தொடர்ந்த வழக்குக்கு எதிராக வருமான வரித்துறையும் தனது வாதத்தை முன் வைத்துள்ளது. வருமான வரிச் சட்டப்படி விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதால் அவரது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வருமான வரித்துறை தனது வாதத்தில் குறிப்பிட்டுள்ளது.




இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு நகலை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை அக்டோபர் 10 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
கடந்த 2016 – 17 நிதியாண்டுக்கான வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்த போது, விஜய் தனது வருமானமாக ரூ.35 கோடியே, 42 லட்சத்து, 91 ஆயிரத்து 890 என குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு விஜய்யின் வீ்ட்டில் சோதனை நடத்திய போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த வருமான வரித்துறை, புலி திரைப்படத்திற்கான ரூ.15 கோடி வருமானத்தை விஜய் தனது வருமான வரித் தாக்கல் செய்தபோது குறிப்பிடவில்லை என குற்றம்சாட்டியது. இதனையடுத்து வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான படம் புலி. இந்தப் படத்தை சிம்பு தேவன் இயக்க தமீன் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்தப் படத்தில் விஜய்யுடன் ஸ்ரீதேவி, பிரபு, சுதீப், ஸ்ருதி ஹாசன், ஹன்சிகா மோத்வானி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். ஆனால் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.