Actor Rajesh: ஆசிரியர் டூ நடிகர்.. ராஜேஷ் காலமானார்.. சோகத்தில் திரையுலகம்!
நடிகர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராவார். கன்னிப்பருவத்திலே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் 2 தலைமுறை நடிகர்களோடு பயணப்பட்டுள்ளார். அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரையும், சினிமா ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் சமூக வலைத்தளங்கள் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான ராஜேஷ் (Actor Rajesh) உடல்நலக்குறைவால் இன்று (மே 29, 2025) காலமானார். 75 வயதான அவருக்கு ஏற்கனவே மூச்சுத்திணறல் பிரச்னை இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவரை குடும்பத்தினர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவமனையில் ராஜேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. நடிகர் ராஜேஷ் தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகராவார். கன்னிப்பருவத்திலே (Kanni paruvathile) படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான அவர் 2 தலைமுறை நடிகர்களோடு பயணப்பட்டுள்ளார். அவரது மறைவு செய்தி தமிழ் திரையுலகினரையும், சினிமா ரசிகர்களையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் ராஜேஷின் பின்னணி
RIP Rajesh annan… pic.twitter.com/ipLEMS0TsT
— John Mahendran (@Johnroshan) May 29, 2025
மறைந்த நடிகர் ராஜேஷ் திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் 1949 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் நாட்டார், லில்லி கிரேஸ் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அணைக்காடு பகுதியில் இவரது குடும்பம் வசித்து வந்தது. திண்டுக்கல், வடமதுரை, சின்னமனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனது பள்ளி படிப்பை முடித்த ராஜேஷ், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் பியூசி முடித்தார். தொடர்ந்து சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். இதனைத் தொடர்ந்து புரசைவாக்கத்தில் இருக்கும் புனித பவுல் உயர்நிலைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணியில் இருக்கும் ஸ்கெல்லெட் மேல்நிலைப் பள்ளியிலும் ராஜேஷ் ஆசிரியராக பணியாற்றியுள்ளார்.
சினிமா வாய்ப்பு
1974 ஆம் ஆண்டு கே. பாலச்சந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை படத்தில் நடிப்பதற்கு ராஜேஷுக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் வந்து சென்ற அவருக்கு ஹீரோவாக அமைந்தது பிஏ பாலகுரு இயக்கத்தில் 1979 ஆம் ஆண்டு வெளியான கன்னிப்பருவத்திலே படம்தான். பாக்கியராஜ் வில்லனாக நடித்த இந்தப் படம் மிகப்பெரிய ஹிட் அடித்து ராஜேஷ் ரசிகர்களிடம் பிரபலமாக காரணமாக அமைந்தது. தொடர்ந்து கே பாலச்சந்தர் இயக்கிய அச்சமில்லை அச்சமில்லை படத்தில் நடித்த இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது “அந்த ஏழு நாட்கள்” படம்தான்.
இப்படத்தில் தான் திருமணம் செய்த மனைவி வேறு ஒருவரை காதலிக்கிறார் என்பது தெரிந்ததும் அவருடன் சேர்த்து வைக்க நினைக்கும் ஒரு கேரக்டரில் வந்து ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், அஜித், விஜய், விஜயகாந்த், கமல்ஹாசன், பிரசாந்த், விஜய் சேதுபதி, கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட அத்தனை முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் ராஜேஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றுள்ளார்
ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்
அடிப்படையில் கிறிஸ்தவராக அறியப்படும் ராஜேஷ் பெரியாரின் கொள்கைகளில் மிகுந்த தீவிரமாக இருந்தார். ஒரு காலகட்டத்தில் தனக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டதாகவும் அது குறித்த பல புத்தகங்களை எழுதியுள்ளதாகவும் நிகழ்ச்சி ஒன்றில் ராஜேஷ் கூறியிருப்பார். ராஜேஷ் 1983 ஆம் ஆண்டு திராவிட தலைவர்களில் ஒருவரும் சமூக சீர்திருத்தவாதியுமான பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பேத்தியான ஜோன் சிலிவியாவை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். ராஜேஷின் மனைவி கடந்த 2012 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவால் காலமானார்.
மற்ற தகவல்கள்
1985 ஆம் ஆண்டு சென்னை கேகே நகரில் சினிமா ஷூட்டிங் நடத்துவதற்காக ஒரு பங்களா ஒன்றை கட்டியவர் ராஜேஷ். இதனை அன்றைய முதலமைச்சர் எம்ஜிஆர் திறந்து வைத்தார் அந்த வீட்டில் தமிழ் மலையாளம் இந்தி ஆகிய பழமொழி படங்களின் ஷூட்டிங் நடைபெற்று உள்ளது. இதன்பின்னர் 90களில் பிற்பகுதியில் வீடு, நிலம் வாங்கி விற்கும் நிறுவனத்தை தொடங்கிய ராஜேஷ் பிரபல மலையாள நடிகர்கள் முரளி மற்றும் நெடுமுடி வேணும் ஆகியோருக்கு தமிழ் படங்களில் டப்பிங் பேசியுள்ளார். சின்னத்திரையிலும் பல்வேறு வகையான தொடர்களிலும் நடித்து வந்த ராஜேஷ் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.