3 BHK Review: நமக்குன்னு ஒரு சொந்த வீடு.. கனவா?.. கற்பனையா? – 3 BHK படம் விமர்சனம்!
3 BHK Movie Review In Tamil: "3 BHK" திரைப்படம், சொந்த வீடு கனவுடன் போராடும் நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் கதையை உணர்வுபூர்வமாகக் கூறுகிறது. சரத்குமார், தேவயானி, சித்தார்த் ஆகியோரின் நடிப்பு அருமையாக அமைந்துள்ளது. குடும்பத்துடன் பார்க்க ஏற்ற படமாக அமைந்துள்ளது.

என்னதான் எளிமையான கதை என சொல்லி விட்டாலும் திரைக்கதையில் மெனக்கெடல் இருந்தால், சொல்ல வந்த விஷயத்தை சரியாக சொல்லி விட்டால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடலாம். அப்படி ஒரு படமாக வெளியாகியிருக்கிறது “3 BHK”. எட்டு தோட்டாக்கள், குருதி ஆட்டம் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஸ்ரீ கணேஷ் கடைக்கோடி மனிதர்களின் மனதை தொடும் அளவுக்கு உணர்வுப்பூர்வமாக படம் கொடுத்துள்ளார். சரத்குமார், தேவயானி, சித்தார்த், மீத்தா ரகுநாத், யோகிபாபு, சைத்ரா ஜே ஆச்சார் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர். அம்ரித் ராம்நாத் இசையமைத்திருக்கும் இப்படத்தை அருண் விஸ்வா தயாரித்துள்ளார். கணேஷ் சிவா எடிட்டிங் செய்ய, ஒளிப்பதிவு பணியை தினேஷ் பி.கிருஷ்ணன், ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் விமர்சனத்தைக் காணலாம்.
படத்தின் கரு
“3 BHK” படத்தின் டைட்டில் மற்றும் ட்ரெய்லர் பார்த்த அனைவருக்கும் புரிந்திருக்கும். இது எப்படிப்பட்ட படம் என்று. சொந்த வீடு என்பது அனைவருக்கும் கனவு. இன்றைக்கு சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அது எத்தகைய உழைப்பு என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை. சேமிக்கவே இடமில்லாத அளவுக்கு கால சக்கரத்தில் நாமும் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் சொந்த வீடு, நிலம் என்பதெல்லாம் நடுத்தர வர்க்கத்தினருக்கு எட்டாக்கனியாகவே மாறி விட்டது என சொல்லலாம்.
அப்படியான ஒரு நடுத்தர குடும்பம் தங்களின் சொந்த வீடு கனவை நனவாக்க எப்படிப்பட்ட சிரமங்களையும், துன்பங்களையும் தாண்டி போராடுகிறார்கள் என்பதை உணர்வு ரீதியாக சொல்லியிருக்கிறார்கள். சொந்தமாக ஒரு வீட்டை கட்டுவது என்பது சாதாரண காரியமல்ல. அதேபோல் கட்டிய வீட்டை சொந்தமாக்குவதும் எளிதல்ல. பணம் மட்டுமல்லாது என்னென்ன தடைகள் வரும் என்பதை “3 BHK” படம் காட்சிப்படுத்தியிருக்கிறது என சொல்லலாம்.
ரசிகர்களை கவர்ந்த கேரக்டர்கள்
பொதுவாக நாம் ஆசைப்படும் ஒரு செல்போன், பைக் போன்றவற்றை அடையவே மிடில் கிளாஸ் குடும்பத்தினர் படும் கஷ்டங்கள், ஏக்கங்கள் என்பது திரையில் சரியாக பிரதிபலிக்கும்போது நம்மை அறியாமல் மனம் அப்படத்துடன் ஒன்றி விடும். அதிலும் வீடு என்றால் சொல்லவா வேண்டும். சரத்குமார், தேவயானி, சித்தார்த் போன்ற அனுபவ பிரபலங்களும் சரி, மீத்தா ரகுநாத் போன்ற வளர்ந்து வருபவர்களும் சரி கேரக்டராகவே வாழ்ந்துள்ளனர் என சொல்லலாம்.
படத்தின் இடைவேளை காட்சி பிரமாதமாகவும், மிகச்சரியாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சொந்த வீட்டில் மட்டும் தான் சந்தோஷம் இருக்கிறது என்றால் வாடகை வீட்டில் காலம் காலமாக வாழ்ந்து வருபவர்கள் மகிழ்ச்சியாக இல்லையா என்ற கேள்வியைப் படம் எழுப்பினாலும், அனைவருக்குமான கனவு என்பதால் அது கானல் நீராக மாறி விடுகிறது. சில இடங்களில் கதைக்கு வெளியே காட்சிகள் இருப்பதை தவிர்த்திருக்கலாம்.
பள்ளி, கல்லூரி மாணவர், இளைஞர் என 3 காலக்கட்டங்களிலும் வரும் சித்தார்த் நடிப்பு பாராட்டைப் பெற்றுள்ளது. அதேபோல் அவருக்கும் சைத்ராவுக்குமான காதல் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. அம்ரித் ராம்நாத்தின் பின்னணி இசை சோக காட்சிகளில் நம்மையே ஒரு கணம் உணர்ச்சி வசப்பட வைக்கும் அளவுக்கு உள்ளது. படத்தில் சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் சொந்த வீடு என்ற அடிப்படை கரு கண்டிப்பாக பலருக்கும் மனதிற்கு நெருக்கமான படமாக அமையலாம். கண்டிப்பாக தியேட்டரில் இந்த வீக்கெண்டை குடும்பத்துடன் “3 BHK” படம் பார்த்து கொண்டாடலாம்.