‘உலகம் ஏழைகளிடம் மோசமாக நடந்துகொள்ளும்… பணம் முக்கியம்….’ – லோகேஷ் கனகராஜ் அதிரடி
Lokesh Kanagaraj on Money : ரஜினிகாந்த்தின் நடிப்பில் கூலி படத்தை இயக்கியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், பணத்தின் முக்கியத்துவம் குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நானும் ஏழையாக இருந்தவன் தான். எனக்கு ஒவ்வொரு பணமும் முக்கியம் என்றார்.

தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி இந்திய அளவில் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர் குறுகிய காலத்திலேயே தமிழின் முன்னணி இயக்குநர்களின் வரிசையில் இடம்பெற்றார். தமிழின் முன்னணி நடிகர்களான கார்த்தி, தொடங்கி, கமல்ஹாசன், ரஜினிகாந்த் (Rajinikanth), விஜய், சூர்யா (Suriya) என முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தார். இந்திய அளவில் இவரது இயக்கத்தில் நடிக்க ஹீரோக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த்தின் கூலி படத்தை இயக்கியுள்ள அவர், அடுத்ததாக இவர் ஆமிர் கான் நடிப்பில் சயின்ஸ் பிக்சன் படத்தை இயக்கவிருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் முதன்முறையாக ரூ.1 கோடி சம்பளம் பெற்ற அனுபவம் மற்றும் பணத்தின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார்.
பணத்தின் முக்கியத்துவம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூலி படம் தொடர்பாக கலட்டா பிளஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பணம் குறித்து பேசியது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் லோகேஷ் பேசியதாவது, ”முதன்முறையாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கைதி படத்துக்காக, பேசும்போது ஒரு பேப்பரில் இது தான் உங்களின் சம்பளம் என எழுதிக்கொடுத்தார். அப்போது அவரிடம், மாநகரம் படத்தில் ஒரு பையனை கடத்திவைத்து, நீங்க இப்போ ஒரு கோடி ரூபாய் தரலனா, உங்க பையன கொன்றுவேன் என முனீஷ்காந்த் மிரட்டுவார். அவருக்கு ரூ.1 கோடி கிடைக்கும். ஆனால் அதனை வைத்து அவருக்கு என்ன செய்வது என தெரியாது. அந்த மனநிலையில் தான் நான் இருக்கிறேன் என அவரிடம் சொன்னேன்.
நான் பணக்கார வீட்டில் இருந்து வரவில்லை. எனக்கு நிறைய உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு நான் உதவ வேண்டும். எனக்கு அதிக தேவைகள் இல்லை. நான் அதிகபட்சம் என் வாட்ச்சிற்காகவும், துப்பாக்கிகளுக்காகவும் செலவிடுவேன். நமக்கு கிடைக்கும் பணத்தை வைத்து வீடு வாங்கலாம், கார் வாங்கலாம். அதன் பிறகு என்ன செய்வது, நான் திரைப்டங்களை தயாரிக்கிறேன். அதில் என் பணத்தை முதலீடு செய்கிறேன். சரியாக வரி கட்டுகிறேன். கடந்த 18 மாதங்களாக இந்தப் பட்ததுக்காக மட்டுமே செலவிட்டுவந்துள்ளேன்.




என் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்
என் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக பணம் இருந்திருக்கிறது. சினிமா ஒரு கலை. அதற்கான திறமையும் ஆர்வமும் இல்லாமல் இங்கு வர முடியாது. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் பணமும் முக்கிய காரணம்.. Get Rich. The World always been brutal to poor (பணக்காரர் ஆகிவிடுங்கள். ஏழைகளிடம் இந்த உலகம் மோசமாக நடந்துகொள்ளும்)என்ற பழமொழி ஒன்று இருக்கிறது. நானும் ஏழையாக இருந்தவன் தான். எனக்கு ஒவ்வொரு பணமும் முக்கியம். அதனால் பணம் சம்பாதிக்கும்போது அதனை வெளியே சொல்வதில் ஒரு தவறும் இல்லை என்றார்.